ஆன்மிகம்
பெருமாள்

இன்று புரட்டாசி முதல் நாள்.. பெருமாளை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்..

Published On 2021-09-17 01:34 GMT   |   Update On 2021-09-17 08:57 GMT
சிறப்புடைய புரட்டாசி மாதம் (இன்று) இந்த ஆண்டு பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதியிலும், பெருமாளின் நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரத்திலும் கூடிய சுப நாளில் பிறப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இன்று புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பற்களில் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எனவே புரட்டாசி மாதத்தில் நாம் எந்த அளவுக்கு வழிபாடுகள் செய்கிறோமோ அந்த அளவுக்கு எம பயத்தில் இருந்து விடுபடலாம். துன்பங்களில் இருந்து மீண்டு கொள்ளலாம். தமிழ் மாதங்கள் 12-ல் 6-வது மாதமாக புரட்டாசி மாதம் வருகிறது. புரட்டாசி மாதத் துக்கு பல்வேறு மகிமைகளும், சிறப்புகளும் உண்டு. புரட்டாசி மாதத்தை பொதுவாக தெய்வீக தன்மை நிறைந்த மாதமாக சொல்வார்கள்.

புரட்டாசி மாதம் என்பது காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிற்கு உகந்த மாதம் ஆகும். நவகிரகங்களில் புதனுக்குரியதாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. புதனின் அதிதேவதை மகாவிஷ்ணு ஆவார். புதனின் வீடு கன்னி ராசியாகும். அதுவும் பெருமாளின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரிய பகவான் அமர்கிறார். எனவே புரட்டாசி மாதம் முழுவதுமே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இத்தகைய சிறப்புடைய புரட்டாசி மாதம் (இன்று) இந்த ஆண்டு பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதியிலும், பெருமாளின் நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரத்திலும் கூடிய சுப நாளில் பிறப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. புரட்டாசி முதல் நாள், ஏகாதசி திதி, திருவோணம் நட்சத்திரம் ஆகிய மூன்றும் ஒரே நாளில் சங்கமிப்பது என்பது மிகவும் அபூர்வமானது. புரட்டாசி தொடக்கம் பெருமாளை விரதம் இருந்து மனம் உவந்து வழிபட வேண்டியதற்கான தொடக்க நாளாகும். புரட்டாசி மாதம் முழுவதும் மகா விஷ்ணுவை நினைவு கொள்வோம் என்பதற்கான தொடக்கம் ஆகும்.

அதே நாளில் பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதி இருக்கிறது. ஏகாதசி திதி என்பது ஒரு புண்ணிய காலம் ஆகும். பரமாத்மாவுக்கு மிகவும் பிரியமான திதி இது. ஏகாதசி திதியை போற்றாத புராணமே இல்லை என்று சொல்லலாம். கங்கையை விட சிறந்த தீர்த்தம் இல்லை. விஷ்ணுவை விட உயர்ந்த கடவுள் இல்லை. தாயை விட சிறந்த கோவில் இல்லை. காய்திரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை. அதுபோன்று ஏகாதசி திதி மிக மிக உயர்ந்தது என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏகாதசி திதியில் முழு உபவாசம் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமாகும். இயலாதவர்கள் மகா விஷ்ணுவை தியானித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
ஏகாதசி திதி தினத்தில் சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரு முக்கோண நிலையை அடையும். அந்த சமயத்தில் சந்திரனின் ஈர்ப்பு சக்தி பூமியில் உள்ள தண்ணீர் மீது பாதிப்பை உண்டாக்கும்.

நமது உடலில் 70 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே ஏகாதசி தினத்தில் நமது உடலும், சந்திரனின் சக்தியால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிய லின் அடிப்படையில்தான் நமது முன்னோர்கள் ஏகாதசி திதி தினத்தன்று முழு விரதம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். ஜோதிட ரீதியாகவும் சந்திரனுக்குரிய முக்கிய தினமாக ஏகாதசி கருதப்படுகிறது. ஏகாதசி தினத்தில் ஜெபம், தியானம் செய்யும் போது மனம் மிக விரைவில் ஒருநிலைப்படும். இதன்மூலம் நமது அறிவுத்திறன் செயல் அதிகரிக்கும். எனவேதான் ஏகாதசி தினத்தில் தியானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஏகாதசி திதி ஆண்டுக்கு 25 முறை வருகிறது. புரட்டாசி மாதம் வரும் ஏகாதசி தினங்கள் அஜா ஏகாதசி என்றும், பத்மநாப ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
புரட்டாசி மாத ஏகாதசியில் விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டால் முன்வினை பாவங்கள் அனைத்தும் விலகி ஓடிவிடும் என்பது ஐதீகம் ஆகும். அதுமட்டுமின்றி வீட்டில் துன்பங்கள் நீங்கி திருமண யோகங்கள் கை கூடி வரும் என்பதும் ஐதீகம் ஆகும்.

எனவே ஏகாதசி திதி தினத்தன்று பகலில் தூங்காமல் மகா விஷ்ணுவை போற்றி வழிபடுவது மிகவும் நல்லது.

அதேபோன்று திருவோணம் நட்சத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ளது. திருவோண நட்சத்திரம் என்பது திருப்பதியில் பெருமாள் தன்னை வெளிப்படுத்தி கொண்ட தினமாக கருதப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திர தினத்தன்று அவரை வழிபட்டால் மகா விஷ்ணுவின் கருணை பார்வை மிக எளிதாக கிடைக்கும்.

ஆலயங்களுக்கு செல்ல இயலாத சூழ்நிலை இருந்தால், வீட்டிலேயே பெருமாள் படத்தை வைத்து மலர் மாலைகள் சூடி, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட நைவேத்தியங்கள் படைத்து அவரை மனப்பூர்வமாக வழிபடுங்கள். நாளை காலை திருவோண நட்சத்திரம், ஏகாதசி, புரட்டாசி முதல் நாள் தொடக்கம் ஆகிய மூன்றும் சங்கமித்து இருக்கின்றன. எனவே இன்று காலையில் இந்த சிறப்பு வழிபாடுகளை வைத்துக்கொள்வது மிக மிக நல்லது.
Tags:    

Similar News