ஆன்மிகம்
விநாயகர்

குழந்தை பாக்கியம் தரும் தூர்வாஷ்டமி விரத வழிபாடு

Published On 2021-09-15 01:37 GMT   |   Update On 2021-09-15 08:37 GMT
குறைவிலா உணவு, ஆடை கிடைப்பதற்கும், நீண்ட ஆயுள், புத்திமான்களான புத்திர பாக்கியம் பெறுவதற்கும், நினைத்த காரியங்கள் கைகூடுவதற்கும் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

அருகம்புல்லை தூர்வை என்று சொல்வார்கள். அதை லட்சுமி சொரூபமாக பாவித்து வணங்க வேண்டும் என்று வேதம் உபதேசிக்கிறது. ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி தினம் தூர்வாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தூர்வாஷ்டமி அன்று அருகம்புல்லை பூஜை செய்ய தடைகள் விலகி வாழ்வில் சந்தோஷம் பெருகும் என்கிறது சாஸ்திரம்.

ஒருவர் எத்தகைய நிலையில் கடன் வாங்கியிருந்தாலும் கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெருபங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை விநாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடையச் சிறந்த வழிகளாகும்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்க்கு பத்தாமிடத்தில் கர்ம/ஜீவன ஸ்தானத்தில் கேது நின்றுவிட்டாலும், கர்ம காரகன் சனியுடன் சேர்க்கை பெற்று நின்றாலும் அவர்களுக்கு வேலை மற்றும் தொழில் ஒரு போராட்டமாகவே அமைந்துவிடும். மேலும் கோசாரத்தில் சனி ஜெனன கேதுவை தொடர்பு கொண்டாலும் கோசாரக கேது ஜெனன சனியை தொடர்பு கொண்டாலும் இது போன்ற நிலை நீடிக்கும். அத்தகைய அமைப்பினர் விநாயகருக்கு சனிக்கிழமைகளில் அருகம்புல் சாற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வரத் தொழில் மற்றும் வேலையில் ஏற்படும் பிரச்சினைகள் விலகி நிம்மதி ஏற்படும்.

தூர்வாஷ்டமி விரதத்தை யார்வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாகப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும் இது. பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதம் என்றும் சொல்லலாம்.

காலையில் நித்ய கர்மாக்களை முடித்துக்கொண்டு, இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். பூஜை அறையை சுத்தம்செய்து கோலமிட்டு, விளக்கேற்றி வைக்க வேண்டும். பின்னர், அருகம்புல் பறித்து வந்து வீட்டில் ஒரு தாம்பாளத் தட்டின் மேல் அருகம்புல்லை வைத்து அதற்குச் சந்தனம், குங்குமம் இட்டு வணங்க வேண்டும். பலகையின் மேல் நமக்கு இஷ்ட தெய்வத்தை வைத்து பூஜிக்கலாம்.

இப்படி வழிபடும் போது சவுபாக்கியம் ஸந்ததிம் தேஹி ஸர்வ கார்ய கரீ பவ யதா சாகா ப்ரசாகாபிர் விஸ்த்ருதாஸி மஹீதலே ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வ மஜராமரம்“ (நிர்ணய ஸிந்து) என்று சொல்லி பூஜிக்க வேண்டும்

இவ்விரதத்தைக் கடைபிடிப்பதனால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். குறைவிலா உணவு, ஆடை கிடைப்பதற்கும், நீண்ட ஆயுள், புத்திமான்களான புத்திர பாக்கியம் பெறுவதற்கும், நினைத்த காரியங்கள் கைகூடுவதற்கும் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
Tags:    

Similar News