ஆன்மிகம்
சாய்பாபா

சாய்பாபாவின் 9 வார விரத வழிபாடு தொடங்கிய வரலாறு

Published On 2021-09-08 05:45 GMT   |   Update On 2021-09-08 05:45 GMT
சாய்பாபா அருள் பெற சில விரத முறைகள் கூட உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விரத முறைகள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பாபா பக்தர்களிடம் பரவி இருக்கிறது.
‘சீரடி சாய்பாபா யாருக்கும் எதுவும் தனிப்பட்ட முறையில் போதித்தது கிடையாது. அதே சமயத்தில் நிறைய பக்தர்களை கூட்டி வைத்து பிரசங்கம் செய்ததும் கிடையாது. மற்ற ஞானிகள் போல கட்டுரைகளையும் அவர் எழுதவில்லை. எப்போதாவது அவர் பரிபாஷையில் ஏதாவது சொல்வார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் தான் இன்றும் அவர் காட்டிய தனித்துவ பாதைகளாக திகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

பாபா தினமும் தன் பக்தர்களிடம் வலியுறுத்தியது மற்றவர்களிடம் அன்பாக இருங்கள் என்பதை தான். எல்லா உயிரினங்களிலும் அன்பை காட்டுங்கள் என்றார். எல்லா உயிரினங்களிலும் தான் வாழ்வதாக சொன்னார். அந்த உயிரினங்களிடம் அன்பை காட்டினால் அது தன்னிடம் காட்டப்படும் அன்புக்கு சமமாகும் என்றார்.

அவர் ஒருபோதும் எந்த ஒரு விஷயத்திலும் பாகுபாடு பார்த்ததே கிடையாது. ஏழை -  பணக்காரன், நல்லவன் - கெட்டவன், ஆண் - பெண் என்றெல்லாம் அவர் எந்த காலத்திலும் பிரித்து பார்த்ததே கிடையாது. எல்லோரிடமும் ஒரே மாதிரி நடந்து கொண்டார். அதன் காரணமாகவே அவர் தனிப்பட்ட முறையில் யாருக்கும் குருவாக இருந்ததே கிடையாது.

ஆனால் 1918 - ம் ஆண்டு அவர் பரிபூரணம் அடைந்த பிறகு இந்த கொள்கையில் மட்டும் எப்படியோ மாற்றம் ஏற்பட்டு விட்டது. அதாவது பாபா காட்டிய பாதையில் சற்று கிளைப்பாதையை சில பக்தர்கள் ஏற்படுத்தி உள்ளனர். பாபா மீது கொண்ட அளவுகடந்த பாசம் காரணமாக அந்த கிளைப்பாதைகள் உருவாகி விட்டன.

அதில் ஒன்று தான் பாபாவை குருவாக நினைத்து வியாழக்கிழமை தோறும் விரதம் இருக்கும் பழக்கமாகும். இந்த பழக்கத்தை பாபா ஒருபோதும் அனுமதித்ததே கிடையாது. எந்த ஒரு காரணத்திற்காகவும் யாரும் பட்டினி கிடக்க கூடாது என்பதில் சீரடி சாய்பாபா மிகவும் தீவிரமாக இருந்தார். பசி இல்லாத உயிரினமே இந்த உலகில் இல்லை. பசி கொடுமையானது. வாயில்லா ஜீவன்களுக்கு பசியை சொல்லத்தெரியாது. எனவே வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுத்து பசியாற்ற வேண்டும் என்று சீரடி சாய்பாபா அடிக்கடி சொல்வார்.

ஆனால் அதை மறந்துவிட்ட பாபா பக்தர்கள் தங்கள் நலனுக்காக 9 வார வியாழக்கிழமை விரத வழிபாடு என்பதையே முன்னிலைப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். 9 வியாழக்கிழமை பாபா படத்திற்கு அல்லது சிலைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து
விரதம்
இருந்தால் நினைத்தது நடக்கும் என்று சொல்கிறார்கள்.

சாய்பாபா அருள் பெற சில விரத முறைகள் கூட உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விரத முறைகள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பாபா பக்தர்களிடம் பரவி இருக்கிறது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் - கோகிலா என்ற தம்பதியிடம் இருந்து இந்த 9 வார வழிபாடு தொடங்கியதாக குறிப்புகள் உள்ளன.

மகேஷ் - கோகிலா தம்பதியிடம் சாது வடிவில் இருந்த முதியவர் ஒருவர் இந்த விரத முறைகளை சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால் பாபாவே நேரடியாக இப்படி விரதம் இருங்கள் என்று ஒரு தடவைகூட சொன்னது கிடையாது. நன்றாக சாப்பிடுங்கள். வயிறு நிரம்பினால் தான் ஆன்மிகத்தை பற்றி முழுமையாக நினைக்க முடியும் என்று தான் சொல்லியிருக்கிறார்.

இன்னொரு வகையில் சொல்வது என்றால் பாபாவும் பட்டினி கிடந்தது இல்லை. தன்னை சுற்றி இருப்பவர்களையும் பட்டினி கிடக்க அவர் அனுமதிப்பதில்லை. சில தடவை அவரது பக்தர்களில் சிலர் விரதம் இருப்பதாக சொல்லிக்கொண்டு அவர் முன்பு அமர்ந்தது உண்டு. அவர்களையெல்லாம் பாபா கண்டித்து விரட்டி விட்டதாக வரலாறு உள்ளன.

இது பற்றி ஒருதடவை பாபாவிடம் பக்தர் ஒருவர் கேள்வி எழுப்பினார். உங்களை கண்கண்ட தெய்வமாகவும், குருவாகவும் ஏற்றுக்கொண்டு தானே விரதம் இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு ஏன் நீங்கள் அனுமதிப்பது இல்லை என்று அந்த பக்தர் கேள்வி எழுப்பினார். அதற்கு சாய்பாபா பட்டினி கிடப்பவரின் மனம் அமைதியாக இருக்காது. அமைதி இல்லாத மனதிலும், உடலிலும் எப்படி ஆன்மிக மேம்பாட்டை எட்ட முடியும். எனவே தான் நான் யாரையும் வெறும் வயிற்றுடன் இருந்து இறைவழிபாடு செய்யுங்கள் என்று சொன்னது கிடையாது. முதலில் உங்கள் ஆத்மாவை திருப்திபடுத்துங்கள். அதன் பிறகு மற்ற தேடல்களை வைத்துக்கொள்ளலாம் என்றார்.

சாய்பாபா மேலும் கூறுகையில், ‘ஒருவர் குறிப்பிட்ட நேரத்திற்கு உரிய முறையில் உணவு எடுத்துக்கொள்ளாவிட்டால் அவரது உடல் உறுப்புகள் பலமிழந்து போய்விடும். உடலில் பலம் இல்லாவிட்டால் மனம் ஒத்துழைக்காது. உடலும், மனமும் சரியாக இல்லாத பட்சத்தில் இறைவனை எப்படி காணமுடியும்?

விரதம் காரணமாக நாக்கு வறண்டு விட்டால் எப்படி இறைவன் புகழை பாட முடியும்? பசி காரணமாக காதுகள் அடைத்துக்கொண்டால் இறைவன் புகழை எப்படி கேட்க முடியும்? எனவே உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும். உடல் நலத்தில் முழுமையாக சக்தி இருக்க வேண்டும். சக்தி இல்லாத உடல் சீர்குலைந்து போகும்போது ஆன்மிக பாதையில் எப்படி நடைபோட முடியும்? எனவே
விரதம்
தேவை இல்லை’ என்றார்.

ஒருதடவை ஒரு பெண்மணி நீண்ட தொலைவில் இருந்து சீரடிக்கு வந்திருந்தார். அவரது மனதில் சாய்பாபா முன்பு 3 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்து இருந்தார். திட்டமிட்ட படி அவர் துவாரகமயியில் உள்ள பாபா அருகில் சென்றார். அந்த பெண் பற்றிய எல்லா தகவல்களையும் பாபா ஏற்கனவே அறிந்து இருந்தார்.

அந்த பெண் பேசுவதற்கு முன்பு பாபாவே பேசத் தொடங்கினார். ‘உணவு என்பது மகா விஷ்ணுவின் வடிவம். அந்த உணவை சாப்பிடுபவரும் மகா விஷ்ணுவின் வடிவம் தான். அப்படி இருக்கும் போது எதற்காக பட்டினி கிடக்க வேண்டும்? எதற்காக தண்ணீர் கூட குடிக்காமல் நாக்கு வறண்டு அவஸ்தைப்பட வேண்டும்? எதற்காக இப்படி எல்லாம் வீணாக சிரமப்பட வேண்டும்? என்றார்.

பாபா சொன்னதை கேட்டதும் அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்தார். நம் மனத்தில் இருப்பது பாபா அறிந்து இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டார். அந்த அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் இருந்து மீள்வதற்குள் பாபாவே முந்திக்கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார். ‘பெண்ணே பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்குள்ள தாதாகேல்கர் வீட்டுக்கு செல். அங்கு உனக்கு தேவையான போளிகளை தயார் செய். அந்த உணவு வகைகளை குழந்தைகளுக்கும், ஏழைகளுக்கும் கொடு. பிறகு நீ திருப்தியாக சாப்பிடு. உன் வயிறு நிரம்பியபிறகு திருப்தியும், ஆனந்தமும் உண்டாகும். அதன்பிறகு நீ இங்கே வா போதும்’ என்றார்.

பாபாவின் இந்த வார்த்தைகளை கேட்டதும் அந்த பெண்ணுக்கு வாயில் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. அன்றைய தினம் ஹோலி பண்டிகை தினமாகும். சீரடி கிராமமே உற்சாகத்துடன் இருந்தது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் பாபா தனக்கு உத்தரவிட்டு இருக்கிறார் என்பதை அந்த பெண் புரிந்து கொண்டார்.

உடனடியாக அவர் தாதாகேல்கர் வீட்டிற்கு சென்றார். அவரது மனைவி சமையல் செய்ய இயலாத நிலையில் பெண்களுக்குரிய பிரச்சினையுடன் காணப்பட்டார். இதனால் அந்த பெண் தாதாகேல்கர் வீட்டில் தானாக சமைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. விரதம் இருக்க வேண்டும் என்ற மனவைராக்கியத்துடன் வந்த அந்த பெண் சமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார். பாபாவின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அன்று அவர் சமைக்க ஆரம்பித்தார்.

பாபா சொன்னபடி சுவையான போளிகளை செய்தார். அதைபார்த்து தாதாகேல்கர் பிரமித்து போய் இருந்தார். அந்த சுவையான போளிகளை அவர்கள் ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் விநியோகம் செய்தனர். பிறகு அந்த பெண் அங்கேயே அமர்ந்து சாப்பிட்டார். அந்த பெண்மணியின் விரத வைராக்கியம் அந்த நிமிடமே கரைந்து போனது.

இப்படி தன்னை தேடி வந்த பலரையும் பாபா பக்குவப்படுத்தி சாப்பிட வைத்துள்ளார். ஒரு தடவை பாபாவை பார்ப்பதற்கு நாசனே என்ற பக்தர் வந்தார். அவரிடம், ‘‘சாப்பிட்டு விட்டீர்களா?’’ என்று பாபா கேட்டார். அதற்கு நாசனே, ‘‘இன்று ஏகாதசி தினம். விரதம் இருப்பேன். சாப்பிடமாட்டேன்’’ என்றார்.

உடனே பாபாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவர் நாசனேயை பார்த்து, ‘‘முதலில் நீ போய் சாப்பிட்டுவிட்டு வா’’ என்றார். அதிர்ச்சி அடைந்த நாசனே, ‘‘இப்போது ஆரத்தி நடக்கும் நேரம். ஆரத்தி முடிந்ததும் சாப்பிடுகிறேன்’’ என்றார். ஆனால் பாபா விடவில்லை.

‘‘முதலில் நீ போய் சாப்பிட்டுவிட்டு வா. நீ வந்த பிறகுதான் எனக்கு இங்கு ஆரத்தி நடைபெறும். அதுவரை நான் ஆரத்தியை ஏற்றுக் கொள்ள மாட்டேன்’’ என்று உறுதியான குரலில் கூறிவிட்டார். இதனால்வேறு வழி தெரியாத நாசனே சாப்பிட்டு விட்டு வந்தார். அவரிடம் ஒரு பீடாவை கொடுத்து, ‘‘சாப்பிடு’’ என்று பாபா உத்தரவிட்டார்.

ஏகாதசி தினத்தன்று வெற்றிலை, பாக்கு போடுவது சாஸ்திரத்துக்கு எதிரானது என்று அந்த காலத்தில் மிக தீவிரமாக கருதப்பட்டு கடைபிடிக்கப்பட்டது. அந்த சம்பிரதாயத்தை ஒரே நொடியில் பாபா உடைத்துக் காட்டினார். இப்படி பல பக்தர்களை அவர் சாப்பிட வைத்துள்ளார். மற்றொரு தடவை பீமாஜி என்ற பக்தர் கடுமையான உடல்நலக்குறைவால் ரத்த வாந்தி எடுத்தபடி சீரடிக்கு வந்தார். துவாரகமயி மசூதிக்குள் காலடி எடுத்து வைத்த சில மணி நேரங்களில் அவரது ரத்த வாந்தி நின்றது. பல மாதங்களாக நீடித்துவந்த உடல்நலக்குறைவு சீராகி குணமானது.

சில நாட்கள் சீரடியில் தங்கி இருந்து பாபாவின் அருளைப் பெற்ற அவர், பின்னர் தனது வீட்டுக்கு புறப்பட்டார். பாபாவுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர், ‘ஸ்ரீசாய் சத்திய விரத பூஜை’ என்ற வழிபாட்டை தொடங்கினார். இந்த வழிபாடு ‘சத்திய நாராயணா பூஜை’ போன்றே இருந்தது. அது பக்தர்களிடம் ‘பாபா பூஜை’ என்று பரவியது.

இதேபோன்றுதான் பாபா பெயரில் விரத பூஜைகள் விதவிதமாக வந்துவிட்டன. இதுபற்றி சீரடி சாய்பாபா ஒரு தடவை கூறுகையில், ‘‘பக்தர்கள் தேவையில்லாத பழக்கத்தை உருவாக்குகிறார்கள். பட்டினி கிடந்து எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் மாயையில் இருந்து விடுபடுவது கடினம். இத்தகைய மக்களை பற்றி இரவு, பகலாக நான் சிந்திக்கிறேன். என்னுடைய கஜானா நிரம்பி வழிகிறது. அதை தேடிக் கண்டுபிடித்து எடுத்து செல்ல யாரும் இல்லை’’ என்று வருத்தத்துடன் கூறினார்.

ஆகையால் பாபா பக்தர்கள் பாபாவின் உண்மையான பாதையை புரிந்து கொள்ள வேண்டும். பட்டினி கிடந்து ஒரு போதும் அவரை வழிபடாதீர்கள். பாபா இதேபோன்று இன்னொரு பாதையையும் காட்டி உள்ளார்.
Tags:    

Similar News