ஆன்மிகம்
சிவன்

இன்று கார்த்திகை மாத சோமவார விரதம்

Published On 2019-11-25 05:16 GMT   |   Update On 2019-11-25 05:16 GMT
கார்த்திகை மாத திங்கட்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். காரணம் கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டித்தால் அந்த சிவனுக்கே பிடித்தமானவராகி விடுவோம்.
திங்கட்கிழமை விரதம் இருப்பதனால் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். அதுவும் கார்த்திகை மாத திங்கட்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். காரணம் கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டித்தால் அந்த சிவனுக்கே பிடித்தமானவராகி விடுவோம். இந்த விரதம் அனுஷ்டித்த சந்திரன் தனது நோய் நீங்கி சிவனின் தலையிலேயே இடம் பெறும் பேறு பெற்றுள்ளார்.

சோமவார விரதம் அனுஷ்டித்தால் நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியமடையும். சந்திரன் மனோகாரகன், திங்கட்கிழமை சந்திரனுக்கு உரியது. சந்திரனுக்கு உரிய இந்த விரதத்தை சந்திரன் ஆட்சி பெற்று கடகம் ராசியில் அமர்ந்துள்ள இந்த நாளில் தொடங்குவது சிறப்பானது. இந்த விரதம் ஏன் தோன்றியது? இதை கடைபிடிப்பதால் என்ன நன்மை என்று யோசிப்பவர்களுக்கு புராண கதை ஒன்று உள்ளது.

குஷ்ட ரோகத்தால் பாதிக்கப்பட்டு சாபம் பெற்ற சந்திரன் கார்த்திகை சோமவார விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம் பெற்று சிறப்பு பெற்றான். சந்திரனுக்கு அருள்புரிந்த சிவன், தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள்.

அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படவும் நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் முன் பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
Tags:    

Similar News