ஆன்மிகம்
நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-01-15 06:07 GMT   |   Update On 2021-01-15 06:07 GMT
நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் வருகிற 23-ந்தேதி சந்தன கூடு ஊர்வலம் நடைபெறுகிறது.
நாகையை அடுத்த நாகூரில் உலக பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான 464-வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தற்போது கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலம் அதிக அளவில் நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நாகை ஜமாத்தில் இருந்து தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட 5 கப்பல்களிலும், ஒரு செட்டி பல்லக்கு, சாம்பிராணி பல்லக்கு ஆகிய 7 பல்லக்கு மட்டும் கொண்டு வர நாகை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதையடுத்து மாலை நாகையில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து நாகூரை சென்றடையும். ஊரடங்கு சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாகூரில் முக்கிய வீதிகளுக்கு ஊர்வலம் நகரின் பல பகுதிகளுக்கு செல்லாமல் அலங்கார வாசலோடு ஊர்வலம் நிறைவுபெறுகிறது. கப்பலில் இருந்து கொடிகள் இறக்கப்பட்டு தர்காவில் உள்ள 5 மினராக்களிலும் தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஓதிய பிறகு 5 மினராக்களில் ஒரே நேரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு வருகிற 22-ந்தேதி இரவு பீர் அமர வைத்தல் நிகழ்ச்சியும், 23-ந்தேதி சந்தன கூடு ஊர்வலமும், 24-ந்தேதி சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறும். 25-ந்தேதி பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சி, 27- ந்தேதி கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News