ஆன்மிகம்
இஸ்லாம்

நிம்மதியான வாழ்வு மலர...

Published On 2021-01-01 07:51 GMT   |   Update On 2021-01-01 07:51 GMT
அல்லாஹ்வை நினைவு கூருங்கள், அவன்சொன்ன நல்லறங்களை, நபிகளார் வாழ்ந்து காட்டிய சிறந்த வாழ்வியலை தேர்ந்தெடுத்து வாழ முயலுங்கள். பிரச்சினைகள் இல்லாத நிம்மதியான நல் வாழ்வு மலரும்.
கால மாற்றத்திற்கு ஏற்ப மனிதனின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. வாழ்வு முறைகளும் மாற்றம் கண்டு, நவீன மயமாக மாறி இருக்கிறது. இயற்கையை சார்ந்து இருந்த வாழ்வு முறை மாறி, இப்போது இயந்திரங்களை சார்ந்து மனித வாழ்க்கை சுழல்கிறது. விஞ்ஞான கண்டுபிடிப்புகள் கைகளில் அடங்கிக் கிடக்கின்றன. ‘எல்லாம் என்னால் முடியும்’ என்ற இறுமாப்பும் சில மனித மனங்களில் மண்டிக் கிடக்கின்றன.

இவை எல்லாம் இருந்தும் மனிதனுக்கு நிம்மதி கிடைத் ததா? என்றால், ‘இல்லை’ என்று தான் பதில் வரும்.

எந்திரத்தனமான வாழ்க்கையில் உருவான பரபரப்பு, மன அழுத்தங்களால் ஆரோக்கியம் பாழ்பட்டுவிட்டது. வருமானத்தை தேடுவதில் வாழ்க்கையை தொலைத்து நிற்கிறான் மனிதன்.

பணம், பண்பை சீரழித்து விட்டது. மனிதன் கலாசார சீர்கேடுகளில் ஆழ்ந்து, கடமை உணர்வை மறந்து, வன்மத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறான். நட்பு, உறவு, பாசம் போன்றவை பணத்தால் விலை பேசப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் உதவும் விஞ்ஞானத்தால் அவனுக்கு நிம்மதியைப் பெற்றுத்தர முடியவில்லை.

ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அருள்மறையில் ‘நிம்மதியான வாழ்க்கையை பெறுவது எப்படி?’ என்று மிகத்தெளிவாகக் கூறுகின்றான். அல்லாஹ்வின் நினைவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் தன்மை ஆகியவற்றின் மூலம் ஒரு மனிதன் நிச்சயமாக நிம்மதியை பெற்றுக்கொள்ள முடியும்.

இதையே திருக்குர்ஆன் இப்படி கூறுகிறது:

“மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 13:28)

அண்ட சராசரங்களை, பிரம்மாண்டங்களை எல்லாம் தன் அருளினால் மனித ஆளுமையின் கீழ் கொண்டு தந்த அந்த அல்லாஹ்வை நினைத்துப் பாருங்கள். அவன் செய்த நற்செயலுக்கு நன்றி செலுத்துங்கள், நிம்மதி தானாக உங்களைத் தேடிவரும்.

திருக்குர்ஆன் சொல்கிறது, “அல்லாஹ்வை நினைவு கூர்வதால் நெஞ்சங்களில் நிம்மதி நிறைகிறது” என்று. ‘நினைவு கூர்வது’ என்றால், ‘அவனைப் போற்றிப் புகழ்வது, அவனை திக்ரு செய்வது, அவன் செய்த அருட்கிருபைகளுக்கு நன்றி செலுத்துவது’ என்பது மட்டும் அல்ல. அவன் சொல்லித்தந்த நல்லறங்களை, மனிதன் தன் வாழ்வில் தலையாய கடமையாக கருதி நிறைவேற்றி வரும்போது அந்த நிம்மதி கிடைக்கும்.

பெற்றோரை பற்றி அவன் மிக உயர்வாக திருமறையிலே பல இடங்களில் சொல்லி, அவர்களை பேணி பாதுகாக்க வேண்டும் என்று சொல்கின்றான். அதனால் மனிதன் மேன்மை அடைய முடியும் என்கின்றான். அவர்களுக்கு கீழ்ப்படியுங்கள், குறைந்தபட்சம் அவர்களை கருணையோடு நோக்குங்கள், அதுவே அவர்களின் திருப்தியை பெற்றுத் தருமானால் அவர்களின் பிரார்த்தனை உங்களுக்கு நிம்மதியைப் பெற்றுத்தரும்.

உறவுகளையும் பேணச் சொல்கிறான் இறைவன். என்றோ நடந்து விட்ட பாதகமான செயல்களின் தொடர்ச்சியாக பரம்பரை பரம்பரையாக பகை நிலைத்திருப்பதை பல குடும்பங்களில் காண முடியும். அவற்றை ஒரே நொடியில் போக்கிக் கொள்ள முடியும். அவர்களை நேரில் சந்தித்து தன்னிலை விளக்கம் சொன்னால் போதும், அதன் மூலம் நல்ல விளைவு ஏற்படும். அல்லாஹ் சொன்ன நிம்மதியும் நம்மிடம் வந்து சேர்ந்துவிடும்.

பக்கத்து வீட்டாரை பற்றியும் மிக அதிகமாக புகழ்ந்து பேசுகிறான் இறைவன். பக்கத்து வீட்டாரின் நன்மை தீமைகளில் பங்கு கொள்ளுங்கள், அவர்களோடு உறவை பலப்படுத்துங்கள். குறைந்தபட்சம் அவர்களைக் காணும்போது ஒரு புன்னகையை உதிருங்கள், அது பெரும் மாற்றங்களை உள்ளங்களில் ஏற்படுத்தும். உள்ளங்கள் விழித்துக் கொண்டால் நிம்மதி பெற்ற வாழ்வு மலரும்.

மாற்றுமத சகோதரர்களுடன் மத மாச்சரியங்களைத் தாண்டி அன்போடும், பண்போடும் பாசத்தோடும் பழகிப் பாருங்கள். பகை உணர்ச்சி அங்கே தவிடு பொடியாகி, மனதிலே நிம்மதி பிறப்பதை நிதர்சனமாக உணர முடியும்.

ஏழைகளை இரக்கத்தோடு ஏறிட்டு பாருங்கள். இதயங்களில் நிம்மதி பிறப்பதை நிச்சயமாக உணர முடியும்.

இப்படிபட்ட வாழ்வியலைத் தான் அல்லாஹ் சொல்கிறான். நன்னெறிகளை கடைப்பிடித்து வாழும்போது, நாம் நிம்மதியை வெளியே தேட வேண்டிய அவசியமில்லை. நம்முள்ளே அதைப் பெற்றுக்கொள்ள முடியும். அல்லாஹ்வை நினைவு கூருங்கள், அவன்சொன்ன நல்லறங்களை, நபிகளார் வாழ்ந்து காட்டிய சிறந்த வாழ்வியலை தேர்ந்தெடுத்து வாழ முயலுங்கள். பிரச்சினைகள் இல்லாத நிம்மதியான நல் வாழ்வு மலரும்.

அஸ்லம் ஷஹீல், சென்னை.
Tags:    

Similar News