ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

காலம் கனியும் போது கனவுகள் நிறைவேறும்

Published On 2020-11-24 07:04 GMT   |   Update On 2020-11-24 07:04 GMT
அதேநேரத்தில் அல்லாஹ் ஒவ்வொன்றிக்கும் ஒரு கால அளவை நிர்ணயம் செய்துள்ளான். அதன்படியே காரியங்கள் நிறைவேறும்.
‘யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான்; யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான்; மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை’ என்பது நபிமொழியாகும்.

இறைவனின் படைப்பில் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு. அந்த செயல் நடக்க குறிப்பிட்ட காலமும் இருக்கும். எனவே பொறுமையுடன் இறைவனிடம் கேட்டால், அவன் நாடினால் அது நமக்கு கிடைக்கும்.

மர்யம் (அலை) அவர்கள் தன் தாயாரால் இறை இல்லத்திற்கு நேர்ச்சை செய்து விடப்பட்டவர்கள். அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஜக்கரியா நபியவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பள்ளிவாசலின் மாடத்தில் தனி அறையில் மர்யம் (அலை) வளர்க்கப்பட்டார்கள்.

ஜக்கரிய்யா நபியவர்கள், மர்யம் (அலை) அவர்களைக் காணச் செல்லும் போதெல்லாம் அவர்களிடம் அந்த நாட்டில் அந்த காலகட்டத்தில் அங்கு கிடைக்காத பல உயர்ந்த கனி வர்க்கங்கள் இருப்பதை கண்ணுற்றார்கள்.

“எங்கும் கிடைக்காத கனி வர்க்கங்கள் உனக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்கின்றது?” என்று வினவினார்கள்.

“இதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது. என்னைத் தனிமையில் வளரச் செய்த அல்லாஹ் என் வாழ்வாதாரத்திற்கும் பொறுப்பேற்று கொண்டான்” என்றார்கள்.

“மூஸா நபிக்கு வானிலிருந்து மன்னு ஸல்வா என்ற உணவை அளித்தவன், மர்யமுக்கு அளித்ததில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது. நாம் கேட்டால் தராமலா போய் விடுவான்” என்று மனதில் உறுதி பூண்டவர்களாக ஜக்கரிய்யா நபியவர்கள் “யா அல்லாஹ், நான் வயோதிகன் ஆகி விட்டேன். எனக்குப் பின் இறைச்செய்தியை எடுத்தியம்ப எனக்கு ஒரு வாரிசை தந்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ்வும் மனம் மகிழ்ந்தவனாக, ‘யஹ்யா’ என்ற மகனை அளித்து அவர்கள் பிரார்த்தனைக்கு பதில் இயம்பினான்.

ஜக்கரிய்யா நபியவர்கள் கேட்ட ‘துஆ’ திருக்குர்ஆனிலும் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியைத் தந்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியேற்பவன்” (திருக்குர்ஆன் 3:38)

அல்லாஹ்வைப் பொறுத்தவரை “குன்” என்ற வார்த்தையைச் சொன்னாலே போதும், அது எதுவாகிலும் அவன் விரும்பியபடியே ஆகி விடும். அவனுக்கு எந்த காரண காரியங்களும் தேவையில்லை.

ஆண் எவருமே தொடாத மர்யம் (அலை) அவர்களுக்கு ஈஸா மஸீஹ் நபியை மகனாக பெற்றெடுக்கச் செய்தான். அதன் மூலம் அவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்த்தை வழங்கினான்.

90 வயதை கடந்த ஜக்கரியா நபியவர்களுக்கு அந்த முதிய வயதிலும் மாதவிடாய் நின்று போன வயதான மனைவியின் மூலம் யஹ்யா நபியைப் பிறக்கச் செய்தான். இது இயற்கைக்கு மாறான செயலாக நமக்கு தென்படலாம். ஆனால் இது இறைவனின் ஆற்றலை நிரூபிக்கும் நிகழ்வு.

எனவே திருமணம் நடந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி, பிள்ளைப்பேறு இல்லை என்று மருத்துவ கூறுகள் சொன்னாலும் சரி, நாம் நம்பிக்கையோடு மனமுருகி அல்லாஹ்விடம் கையேந்தினால் நிச்சயமாக நமக்குப் பிள்ளைப் பேற்றைத் தருவான். அதைத் தான் இந்த சரித்திர நிகழ்வு சொல்லிக் காட்டுகின்றது.

அதேநேரத்தில் அல்லாஹ் ஒவ்வொன்றிக்கும் ஒரு கால அளவை நிர்ணயம் செய்துள்ளான். அதன்படியே காரியங்கள் நிறைவேறும். ஆண்டுகள் பல கடந்தும் பல தம்பதிகள் பிள்ளை பெற்றுள்ளதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம். எனவே காலங்கள் கனியும் போது கனவுகள் நிறைவேறலாம். நம்பிக்கையோடு பிரார்த்திப்போம், நம் பிரார்த்தனைகள் நிச்சயமாக அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஜாபிரா, சென்னை.
Tags:    

Similar News