வாருங்கள், நாம் அனைவரும் அல்லாஹ் மீது நம்பிக்கை கொள்வோம். அவன் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, அந்த நம்பிக்கை தரும் வெற்றியின் மூலம் இம்மையிலும், மறுமையிலும் நன்மைகளைப் பெறுவோம்.
“அல்லாஹ் (எவ்வித மகத்துவம் உடையவன் என்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்; அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது. வானங் கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்? அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து யாதொன்றையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய “குர்ஸி” (அரியாசனம்) வானம், பூமியை விட விசாலமாய் இருக்கின்றது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமன்று. மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன்” (திருக்குர்ஆன் 2:255).
இத்தகைய மகத்துவம் மிக்க இறை வன் மீது நாம் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட முறையில் நமது வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். எது நமக்கு விலக்கப்பட்டதோ, அதைவிட்டு நாம் விலகி இருக்க வேண்டும். எது நமக்கு கொடுக்கப்பட்டதோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த இறையச்சம், இறை நம்பிக்கை தான் நமக்கு வாழ்வில் வெற்றிகளை தேடித்தரும். ஏன் என்றால் இறைவன் நமக்கு அளித்துள்ள அருட்கொடைகள் அளவிட முடியாதவை. இதுபற்றி திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்” (திருக்குர்ஆன் 16:18).
“மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” (திருக்குர்ஆன் 35:2).
“அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்”.(திருக்குர்ஆன்42:19)
இத்தனை சிறப்பு மிக்க ஏக இறைவன் அல்லாஹ்வை நாம் பற்றிப்பிடித்துக்கொள்ள வேண்டும். அவன் காட்டிய வழியில் வாழ்ந்து அவனது திருப்பொருத்தத்தைப்பெற வேண்டும். அவ்வாறு நாம் செயல்பட்டால் நமது வாழ்வு சிறக்கும். இம்மையிலும், மறுமையிலும் நாம் இறைவனின் அருளைப்பெற முடியும்.
அல்லாஹ் தனது திருமறையில் பல்வேறு வசனங்களில் குறிப்பிடும்போது, “என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள், நான் நேர்வழி காட்டுகிறேன்” என்று உறுதியாக கூறுகிறான். எனவே நாம் அல்லாஹ் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்வோம். அந்த நம்பிக்கை நமது வாழ்க்கையில் வெற்றிகளைத்தேடித்தரும், அவனது அருட்கொடைகள் நம்மை நாடி வரும்.
வாருங்கள், நாம் அனைவரும் அல்லாஹ் மீது நம்பிக்கை கொள்வோம். அவன் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, அந்த நம்பிக்கை தரும் வெற்றியின் மூலம் இம்மையிலும், மறுமையிலும் நன்மைகளைப் பெறுவோம்.
எம். காதர் முகைதீன், நெல்லை.