ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

பக்கத்து வீட்டாரின் உரிமைகள்

Published On 2020-11-01 07:24 GMT   |   Update On 2020-11-01 07:24 GMT
இஸ்லாம் என்பது மனிதநேயம் உலகில் தழைக்க வேண்டும் என்பதற்காக வரையறுக்கப்பட்ட ஒரு வாழ்வியல் தத்துவம். அது ஒரு குறிப்பிட்ட வகுப்பார்களுக்காக சொல்லப்பட்டதன்று.
மனிதர்களில் புனிதர் மக்கமாநகர் வந்துதித்த இறைத்தூதர் முஹம்மது ரஸூலுல்லாஹ் அவர்கள் எடுத்துச் சொன்ன அத்தனைச் செய்திகளுமே வாழ்வியல் தத்துவங்கள். ஒரு சமுதாய கட்டமைப்பில் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய அழகிய முன்மாதிரிகள். இறைவனுக்கு ஆற்றவேண்டிய கடமைகளை மிகச்சுருக்கமாகச் சொன்னவர்கள், பிற மனிதர்களுக்கு நாம் செய்ய வேண்டியவைகளைப் பற்றி மிக அதிகமாக அழுத்தமாகச் சொன்னார்கள்.

அதில் மிக முக்கியமான ஒன்றாக நமது பக்கத்து வீட்டாரோடு நாம் அனுசரிக்க வேண்டிய நடைமுறைகளை அழுத்தமாக கோடிட்டுக்காட்டினார்கள். அவர்களுக்கான உரிமைகளை எந்த அளவிற்குப் பேண வேண்டும் என்றும் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது “எங்கே மனிதன் சம்பாதித்தவற்றில் இருந்து பக்கத்து வீட்டுக்காரருக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டு விடுவானோ என்று நான் எண்ணும் அளவிற்கு அல்லாஹ்வின் கட்டளைகள் இறங்கி கொண்டிருந்தன” என்று சொன்னார்கள்.

“பக்கத்து வீட்டு கனி மரம் உங்கள் வீட்டு எல்லைச் சுவரை தாண்டி வருமேயானால் அதனை வெட்டி விடாதீர்கள், அந்த கனிகள் உங்கள் வீட்டில் விழுமேயானால் அதனைப் புசித்து விடாதீர்கள், அதற்கு உங்களுக்கு உரிமை இல்லை” என்று அழுத்தமாக வலியுறுத்தினார்கள் நபிகள் கோமான்.

‘பக்கத்து வீட்டில் பசித்திருக்கும் போது நீங்கள் வயிறாற உண்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. அதுமட்டுமல்ல நீங்கள் புசிப்பதில் அவர்களுக்கும் பங்குண்டு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்’ என்று சேர்த்தும் சொன்னார்கள் அண்ணலார்.

ஒரு நாள் மதினத்து நபவியிலே நபிகள் நாயகம் அமர்ந்திருந்த போது ஒரு நபித்தோழர் தன் கைகளில் ஆட்டின் தலையை எடுத்து சென்று கொண்டிருந்தார். உடனே அவரை அழைத்து “தோழரே! நீங்கள் இதனை சமைக்கும் போது பக்கத்து வீட்டாரின் பங்கிற்காக சிறிது குழம்பையும் சேர்த்து சமையுங்கள்” என்று பணித்தார்கள்.

இரு பெண்களைப் பற்றிய விவாதம் பெருமானாரின் அவைக்கு வந்த போது ஒரு நபித்தோழர் சொன்னார் “எனது வீட்டிற்கு அருகாமையில் இரண்டு பெண்கள் வசிக்கிறார்கள். ஒருவர் எல்லாவிதமான இறைக்கட்டளைகளையும் மிக நேர்த்தியாக நிறைவேற்றுகிறார். ஆனால் பக்கத்து வீட்டாரோடு இணக்கமாக வாழ்வதில்லை. மற்றொருவளோ தன் கடமைகளை குறிப்பிட்ட அளவில் செய்தாலும் கூட அண்டை வீட்டாரோடு அன்பும், பண்பும் பாசமுமாய் வாழ்ந்து வருகிறாள். இவர்கள் இருவரின் நிலைமை நாளை மறுமையில் என்னவாய் அமையும்? ரஸூலே விளக்குங்கள்” என்று வினவினார்கள்.

நபிகள் நாதர் விடை பகர்ந்தார்கள்: “முதலாமவள் நரகம் செல்வாள், மற்றவளோ மறுமையில் சுவனம் செல் வாள்” என்றார்கள்.

பக்கத்து வீட்டாரின் உரிமைகள் மறுக்கப்பட்டால் ஒருவனுக்கு சுவர்க்கம் மறுக்கப்படும் என்ற நிலை இருக்குமேயானால் அல்லாஹ் பக்கத்து வீட்டாருக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளான் என்பதை உணர்ந்து நம் செயல்பாடுகளை செம்மைப் படுத்திக்கொள்ள வேண்டும்.

பக்கத்து வீட்டுக்காரர் எந்த இனத்தவர், எந்தக் குலத்தவர், நம்மைச் சார்ந்தவரா, அல்லாதவரா என்பதை எல்லாம் தாண்டி அவர் ஒரு சக மனிதர் என்ற கோட்பாடோடு நம்முடைய உறவை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாமிய கொள்கையில் வலியுறுத்திச் சொல்லப்பட்ட உண்மைத் தத்துவம்.

ஒரு பள்ளிவாசலின் விரிவாக்கத்திற்காக பக்கத்தில் வசித்து வந்த ஏழை விதவை யூதப்பெண்ணின் வீட்டை இடித்து விரிவாக்கம் செய்து விட்டு, அதை விட பெரிய வீட்டினை பகரமாக அளித்தார் அந்நகரின் கவர்னர். ஆனால் அந்த ஏற்பாடு யூதப் பெண்ணால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே மதினாவின் கலீபா உமர் (ரலி) அவர்களுக்கு கடிதம் அனுப்புகிறாள். உண்மையை அறிந்த உமர் (ரலி) அவர்கள் கவர்னரை அழைத்து கடிந்து கொண்டார்கள். நீங்கள் அண்ணலார் அண்டை வீட்டார் பற்றிச் சொன்ன அமுத வாக்குகளை கேள்விப்பட வில்லையா? இடித்த வீட்டை மீண்டும் கட்டிக்கொடுங்கள் என்று கட்டளையிட்டார்கள். அந்த அளவிற்கு நபிகளாரின் கட்டளைகள் சஹாபாக்கள் காலத்திலும் கடைபிடிக்கப்பட்டு வந்தன.

இஸ்லாம் என்பது மனிதநேயம் உலகில் தழைக்க வேண்டும் என்பதற்காக வரையறுக்கப்பட்ட ஒரு வாழ்வியல் தத்துவம். அது ஒரு குறிப்பிட்ட வகுப்பார்களுக்காக சொல்லப்பட்டதன்று. மனிதகுலம் முழுவதும் சாந்தியோடும், சமாதானத்தோடும் வாழ வழி சொன்ன ஒரு கொள்கை. அதனைப் புரிந்து கொண்டு நாம் ஒற்றுமையோடு வாழும் போது நமது வெற்றியினை யாராலும் தடுக்க முடியாது.

இறைக்கட்டளைக்கு அடிபணிந்து வாழ்வோம், இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம்.

மு.முகமது யூசுப், உடன்குடி.
Tags:    

Similar News