ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

இணக்கமான தீர்வு

Published On 2020-09-08 06:21 GMT   |   Update On 2020-09-08 06:21 GMT
‘உம்ரா’ செய்ய வேண்டும் என்ற நிய்யத்தில் கடமையை நிறைவேற்றாமல், இஹ்ராம் களைந்தால் நிய்யத்திற்கு மாற்றம் செய்த குற்றம் நிகழ்ந்து விடுமே என்று அத்தனை சஹாபாக்களும் இஹ்ராம் களையாமல் காத்திருந்தனர்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனா நகருக்கு வந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்ட காலம் கட்டம் அது. அப்போது, மக்காவில் உள்ள இறை இல்லமான காபாவை கண்குளிர காண வேண்டும் என்ற ஆவல் நபிகளின் மனதில் ஆழமாய் பதிந்து இருந்தது. அந்த ஆர்வத்தில் மக்கா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்கள். இதை அறிந்த நபிகளாரின் தோழர்களும் இந்த பயணத்தில் அவருடன் செல்லத்தயார் ஆனார்கள். கிட்டத்தட்ட 1500 பேருக்கும் மேலாக அவர்கள் திரண்டனர்.

மக்காவில் நபிகளாரை எதிர்த்த குரைஷி இனத்தவர்களுக்கு இந்த செய்தி எட்டியது. ஆனால் அவர்கள், ’நபிகளார் தலைமையில் மதீனாவாசிகள் நம் மீது படையெடுத்து வருகிறார்கள்’ என்று தவறாக கருதினார்கள். எனவே நபிகளார் தலைமையில் வந்த மக்களை, மக்காவின் எல்லையில் ஹூதைய்பிய்யா என்ற இடத்தில் தடுத்து நிறுத்தினர்கள்.

நபிகள் கோமான் அந்த மக்களை நோக்கி “நாங்கள் காபத்துல்லாவை ‘உம்ரா’ செய்து (தரிசித்து) விட்டு போகவே வந்துள்ளோம். ‘இஹ்ராம்’ என்ற ஆடை அணிந்துள்ளோம். இஸ்லாமிய கொள்கையின்படி இந்த ஆடையில் இருக்கும் போது நாங்கள் போர் செய்யமாட்டோம். இதை நீங்களும் அறிவீர்கள். எனவே எங்களுக்கு அனுமதி தாருங் கள். நாங்கள் காபாவை தவாபு செய்து விட்டு சென்று விடுகிறோம்” என்றார்கள்.

ஆனால் மக்காவாசிகள் இதற்கு அனுமதி தர மறுத்து விட்டனர். நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு இரு பிரிவினரும் உடன்படிக்கை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். அன்று தான் உலகின் தலைசிறந்த உடன்படிக்கையாக கருதப்படும் ‘ஹூதைய்பிய்யா உடன்படிக்கை’ கையெழுத்தாயிற்று.

அந்த உடன்படிக்கையின் நிபந்தனைகள் அனைத்தும் தங்களுக்கு எதிராக அமைந்திருந்த போதிலும் நபிகள் நாயகம் அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டார்கள். இதற்கு காரணம் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையே. இந்த இடைப்பட்ட காலத்தில் மக்காவாசிகள் அனைவரும் இஸ்லாத்தில் இணைந்து விடுவார்கள் என்று அவர்கள் நம்பினார்கள்.

உடன்படிக்கை கையெழுத்தாகி விட்டது, ஆனால் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. காபாவை தவாபு செய்யாமல் எப்படி இஹ்ராம் ஆடையை களைவது என்ற கேள்வி எழுந்தது. ‘உம்ரா’ செய்ய வேண்டும் என்ற நிய்யத்தில் கடமையை நிறைவேற்றாமல், இஹ்ராம் களைந்தால் நிய்யத்திற்கு மாற்றம் செய்த குற்றம் நிகழ்ந்து விடுமே என்று அத்தனை சஹாபாக்களும் இஹ்ராம் களையாமல் காத்திருந்தனர்.

அடுத்து என்ன செய்வது என்று நபிகள் நாயகம் யோசித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது அவரோடு பயணம் வந்திருந்த மனைவி உம்மு ஸல்மா (ரலி) ஒரு யோசனை தெரிவித்தார்கள்.

உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “நாயகமே! உங்கள் தோழர்கள் அனைவரும் உங்களின் ஒவ்வொரு செயலையும் வழிமுறையாய் ஏற்றுக்கொள்பவர்கள். எனவே நீங்கள் முதலில் இஹ்ராம் களைந்து, குர்பானி கொடுத்து, தலைமுடியை இறக்கி விடுங்கள். நிச்சயமாக மற்றவர்களும் உங்களை பின்பற்றி அவர்களும் இஹ்ராம் களைந்து குர்பானி கொடுப்பார்கள்” என்றார்.

நபி பெருமானார் எந்தவித ஆட்சேபனையும் இன்றி அந்த ஆலோசனைக்கு உடன்பட்டார்கள். நபியைத் தொடர்ந்து அத்தனை சஹாபாக்களும் இஹ்ராம் களைந்து, குர்பானி கொடுத்து கடமையை நிறைவேற்றினார்கள். பெரிதாக உருவெடுக்க இருந்த பிரச்சினை மிக எளிதாக தீர்ந்து விட்டது. தன் மனைவியாய் இருந்தாலும் அவர்களையும் பெரிதாய் மதித்து மரியாதை கொடுத்ததால் அவர்கள் கூறிய யோசனை மூலம் இந்த பிரச்சினைக்கு சிறந்த இணக்கமான தீர்வை எட்ட முடிந்தது.

ஜயான் அஸ்லம், காலங்குடியிருப்பு
Tags:    

Similar News