ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

கல்வி கற்போம், உயர்ந்து வாழ்வோம்

Published On 2020-08-11 05:14 GMT   |   Update On 2020-08-11 05:14 GMT
பல சந்தர்ப்பங்களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள், இறைவன் கட்டளைகளைக் கொண்டு வந்து நபிகளிடம் சொன்னார்கள். அத்தனை கட்டளைகளும் ஒருசேர தொகுக்கப்பட்ட வேதநூலே ‘திருக்குர்ஆன்’ ஆகும்.
அண்ணல் அஹ்மது முஸ்தபா அவர்கள் ‘நபி’ பட்டம் பெறுவதற்கு முன்பாகவே அரேபியர்களிடம் ‘அல்அமீன்’ (நன்நம்பிக்கையாளர்) என்ற சிறப்பை பெற்றிருந் தார்கள். எப்போதும், எந்த நிலையிலும் நபிகளார் உண்மையையே பேசினார்கள். எனவே அரேபியர்கள், நபிகளார் எதைச்சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொண்டார்கள், நம்பினார்கள்.

ஆனால், ’இறைவன் ஒருவன்தான், நான் அவனின் தூதன்’ என்று சொன்ன போது மட்டும் அதனை எதிர்த்தார்கள். காரணம் தங்கள் அந்தஸ்தை, கவுரவத்தை அது பாதிப்பதாக அவர்கள் கருதினார்கள்.

காருண்ய நபி, அதனை தானாக சொல்லவில்லை. அவ்வாறு சொல்லச்சொல்லி அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்டார்கள்.

நபி அவர்கள் 40-ம் வயதை அடைந்த போது அவர்கள் உள்ளத்தில் பெரும் வினா ஒன்று எதிரொலித்துக் கொண்டிருந்தது. ‘உலகில் இத்தனைப் படைப்புகள் தோன்றியதன் காரணம் என்ன?, நான் எந்த நோக்கத்திற்காக பிறந்தேன்?’ என்று எண்ணி அதற்கான விடையைத் தேடுவதில் ஆர்வம் காட்டினார்கள்.

உலக வாழ்வில் உழன்று கொண்டிருக்கும் வரை இதற்கான விடையை தெரிந்து கொள்ள முடியாது என்று எண்ணினார்கள். எனவே மக்காவின் அருகில் உள்ள ஹீரா என்ற குகையில் சென்று தன்னை தனிமைப்படுத்தி சிந்தனையில் ஆழ்ந்தார்கள்.

நாட்கள் செல்லச்செல்ல மனதின் குழப்பங்கள் தெளிவடைய ஆரம்பித்தன. ஒருநாள் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகளார் முன்பு தோன்றினார்கள். “நான் ஏக இறைவன் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட வானவ தூதர். அல்லாஹ் உங்களை தனது நபியாக (தூதராக) ஏற்றுக்கொண்டான். அல்லாஹ்வின் இறைச்செய்தியை உங்களுக்கு அறிவிக்கும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்றார்கள்.

அப்போது நபிகளார் “நான் எழுதப்படிக்கத் தெரியாதவன். நான் எப்படி இறைச்செய்தியை உலக மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும்?” என்றார்கள்.

“இறைவன் நாடினால் அது அப்படியே நிகழும்” என்று சொல்லிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் கண்மணி நாயகத்தை கட்டித்தழுவினார்கள்.

“ஓதுவீராக! நபியே ஓதுவீராக! அனைத்தையும் படைத்த அல்லாஹ்வின் பெயரால், அவனது கட்டளைகள் அடங்கிய திருகுர்ஆனை ஓதுவீராக! அவனே மனிதனை இரத்த கட்டியிலிருந்து படைக்கின்றான். அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். அதன்மூலம் மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்கு கற்றுக்கொடுத்தான்”, என்று திருக்குர்ஆன் (96:1-5) வசனங்களை அறிவிக்க, தொடர்ந்து நபிகளார் ஓதினார்கள்.

இப்படி பல சந்தர்ப்பங்களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள், இறைவன் கட்டளைகளைக் கொண்டு வந்து நபிகளிடம் சொன்னார்கள். அத்தனை கட்டளைகளும் ஒருசேர தொகுக்கப்பட்ட வேதநூலே ‘திருக்குர்ஆன்’ ஆகும்.

உலகில் இறைக்கட்டளையின் முதல் செய்தி மனிதன் படைப்பின் ரகசியம். அதைத் தொடர்ந்து கல்வியின் மேன்மையைப் பற்றி விவரிக்கின்றது. இதன் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். எனவே இறைமறையின் அறிவுரையைப் பின்பற்றி கல்வியில் கவனம் செலுத்துவோம், அறிவை வளர்த்து உலகில் உயர்ந்து வாழ்வோம்.

அஸ்லம் ஷஹீல், குளத்தூர், சென்னை. 
Tags:    

Similar News