ஆன்மிகம்
நன்மைகளைப் பெற்றுத்தரும் பிரார்த்தனை

நன்மைகளைப் பெற்றுத்தரும் பிரார்த்தனை

Published On 2020-07-07 05:02 GMT   |   Update On 2020-07-07 05:02 GMT
நம்பிக்கையோடு இந்த துஆவை நாம் தினந்தோரும் ஓதி வருவோம், வல்ல ரஹ்மான் நம் பிரார்த்தனைகளை ஏற்று கிருபை செய்வானாக, ஆமின்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அப்பாஸ் (ரலி). இவர் ஒருமுறை நபிகளாரை சந்தித்து, ‘பல நன்மைகளைப் பெற்றுத்தரும் சிறந்த ஒரு துஆவை (பிரார்த்தனையை) கற்றுத்தாருங்கள்’ என்று கேட்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னி அஸ் அலுக்க அல்-ஆஃபியா” என்று சுருக்கமான ஒரு துஆவை கற்றுத்தந்தார்கள்.

‘இறைவா, எல்லாவித தொந்தரவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்று’ என்பது இதன் சுருக்கமான பொருள் ஆகும். ‘ஆஃபியா’ என்பது நோய் நொடிகள், துன்பங்கள், துயரங்கள், கவலைகள், வறுமை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிப்பது என்று அதற்கு விளக்கமும் சொன்னார்கள்.

நோயில்லாத, கவலைகள் அற்ற வாழ்வு வாய்த்திருந்தால் அது ஆஃபியா. தேவைக்கு போதுமான பொருளாதாரம், அதில் அபிவிருத்தியும் தன்னிறைவும் பெற்றிருந்தால் - அது ஆஃபியா. அல்லாஹ் நம் தேவைகளையும், எண்ணங்களையும் நிறைவேற்றி நம் முயற்சியில் வெற்றியைத் தந்தால் - அது ஆஃபியா.

நம் குடும்பமே அல்லாஹ்வின் பாதுகாவல் பெற்றிருந்தால் - அது ஆஃபியா. நம்முடைய தொழில், வியாபாரம், வேலை ஆகியவற்றில் ‘பரக்கத்’ என்னும் அருள் பெற்றிருந்தால் - அது ஆஃபியா.

உலகில் நம்முடைய தேவைகளுக்காக இறைவனைத் தவிர பிறரின் தேவையை நாடாதிருந்தால் - அது ஆஃபியா.

பாவங்கள் மன்னிக்கப்பட்டும், அதனால் தண்டிக்கப்படாமலும் இருந்தால் - அது ஆஃபியா.

இவ்வாறு நம் எண்ணங்கள், தேவைகள் அனைத்தும் எளிய, சிறிய, ஆனால் செறிவு மிக்க இந்த துஆவில் அடக்கம்.

எனவே நம்பிக்கையோடு இந்த துஆவை நாம் தினந்தோரும் ஓதி வருவோம், வல்ல ரஹ்மான் நம் பிரார்த்தனைகளை ஏற்று கிருபை செய்வானாக, ஆமின்.

மு. முகமது யூசுப், உடன்குடி.
Tags:    

Similar News