ஆன்மிகம்
ரம்ஜான் பண்டிகையை எளிமையாக கொண்டாடிய முஸ்லிம்கள்

ரம்ஜான் பண்டிகையை எளிமையாக கொண்டாடிய முஸ்லிம்கள்

Published On 2020-05-26 05:16 GMT   |   Update On 2020-05-26 05:16 GMT
ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே எளிமையாக கொண்டாடினர். காலை, மாலை தொழுகைகளை அவர்கள் தங்கள் வீடுகளிலேயே நடத்தி வந்தனர்.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான் பண்டிகை. இந்த பண்டிகை ரமலான் மாத இறுதியில் (பிறை தெரிவதை கணக்கிட்டு) கொண்டாடப்படுகிறது. எனவே இஸ்லாமிய மாதங்களில் இந்த ரமலான் மாதம் புனிதமிக்க மாதமாக கருதப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகையன்று காலை சிறப்பு தொழுகை முடிந்த பிறகு தம்மை சுற்றியுள்ள ஏழை, எளியவர்களுக்கு தானதர்மங்கள் செய்தும், தங்களது உறவினர்களுக்கும், உற்ற நண்பர்களுக்கும் தம்மால் இயன்ற உதவி மற்றும் விருந்து அளிப்பார்கள். இதனால்தான் ரம்ஜான் பண்டிகையை ஈகைத்திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

ரமலான் மாதம் முழுவதும் அதாவது 30 நாட்கள் முஸ்லிம்கள் நோன்பை கடைபிடிப்பது வழக்கம். நோன்பு ஆரம்பிக்கும்போதும், நோன்பை நிறைவு செய்யும்போதும் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களுக்கு சென்று கூட்டுத்தொழுகையில் ஈடுபடுவார்கள். ஆனால் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் ரமலான் மாதமும் தொடங்கியது.

வழக்கம்போல் இந்த ஆண்டும் முஸ்லிம்கள், ரமலான் மாத நோன்பை உலகம் முழுவதும் கடைபிடித்தார்கள். அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் இந்த நோன்பை முஸ்லிம்கள் கடைபிடித்தனர். காலை, மாலை தொழுகைகளை அவர்கள் தங்கள் வீடுகளிலேயே நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை கடலூர் மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வழக்கமாக காலையில் பள்ளிவாசல்கள், மைதானங்கள் போன்றவற்றில் சிறப்பு தொழுகைகள் நடைபெறும். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளையும், அன்பையும் பரிமாறிக்கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக கூட்டமாக கூடி நின்று வழிபாடுகள், தொழுகைகள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருப்பதால் பள்ளிவாசல்கள், மைதானங்களில் தொழுகைகள் நடைபெறவில்லை. மாறாக, முஸ்லிம்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே மிகவும் எளிமையான முறையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். ஒவ்வொரு வீட்டிலும் அந்தந்த குடும்ப தலைவர் தலைமையில் தொழுகைகள் நடந்தன. முஸ்லிம்கள் தங்களது குடும்பத்தினரோடு சமூக இடைவெளியை பின்பற்றி தொழுகை செய்தனர். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் வீடுகளில் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது என்பதால் அவர்கள் தங்கள் வீட்டின் மாடியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தொழுகை முடிந்ததும் பிரியாணி உள்ளிட்ட அறுசுவை உணவுகளை சமைத்து சாப்பிட்டதோடு உறவினர்கள், நண்பர்களுக்கும் அதனை கொடுத்து மகிழ்ந்தனர். இந்த பண்டிகையை கொண்டாடும் அனைவரும் புத்தாடைகள் அணிவார்கள். கொரோ னா ஊரடங்கால் வாழ்வாதாரங்களை இழந்த பலர் புத்தாடைகள் வாங்க முடியாததால் தங்களுடைய தகுதிக்கேற்ப இந்த பண்டிகையை எளிமையாக கொண்டாடினர். அதேபோல் ஊரடங்கால் நேருக்கு நேர் வாழ்த்துக்களை தெரிவிக்க முடியாதவர்கள், தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு செல்போன்களில் வாட்ஸ்-அப், முகநூல் மூலமாக வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

ரம்ஜானையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் பள்ளிவாசல், கடலூர் முதுநகர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News