ஆன்மிகம்
இஸ்லாம் தொழுகை

ரமலான் உணர்த்தும் பாடம்

Published On 2020-05-25 02:21 GMT   |   Update On 2020-05-25 02:21 GMT
முழு ரமலான் மாதமும் நமக்கு கற்றுத்தந்த பாடங்களை நினைவில் கொண்டு என்றென்றும் மறக்காமல் நமக்கும், நம்மைச்சுற்றி உள்ளவர்களுக்கும் நற்சேவைகள் பல செய்வோமாக.
சமூக சேவை இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவை. சமூகப்பொறுப்புடன் ஒவ்வொருவரும் கட்டாயம் சேவை செய்ய வேண்டும். இந்த ரமலானும் அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.

இதுகுறித்து இறைமறை இப்படிப் பேசுகிறது: நன்மையே செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் (திருக்குர்ஆன் 22:77)

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்:(ஏனெனில்) நீங்கள் நல்லதை செய்ய ஏவுகிறீர்கள்: தீயதை விட்டும் விலக்குகிறீர்கள். (திருக்குர்ஆன் 3:110)

நிச்சயமாக சேவைகளுக்கான மாபெரும் கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது. (திருக்குர்ஆன் 9:22)

நம்பிக்கை ஊட்டுவது, வழிகாட்டுவது, உதவி செய்வது, உணவளிப்பது, உடையளிப்பது, குடிநீர்க்குழாய் அமைப்பது, நிழற்குடை அமைப்பது, கல்வி தருவது, மருந்தளிப்பது, ரத்த தானம் செய்வது என சமூக சேவையின் கரங்கள் ஏராளம் உண்டு. இவற்றில் நம்மால் எதைச் செய்ய முடியுமோ அதை நிச்சயம் நாம் செய்ய வேண்டும். அது நாம் நடக்கும் பாதையில் கிடக்கும் கற்களையும், முட்களையும் கண்ணாடித்துண்டுகளையும் அகற்றுவதாகக்கூட இருக்கலாம்.

நபிகள் நாயகம் கூறினார்கள்: இறைவிசுவாசம் என்பது எழுபத்தேழு கிளைகளை கொண்டது.அதில் உயர்ந்தது லாயிலாஹ இல்லல்லாஹ - அல்லாவை தவிர வேறு கடவுள் இல்லை என்ற திருச்சொல்லாகும். அதில் கீழானது நடைபாதையில் இடையூறுஅளிப்பவைகளை அகற்றுவதாகும். ( நூல்:புகாரி)

இறைவன் எந்த ஊரையும் அவ்வூர் மக்கள் சீர்திருத்தம் புரிவோராய் இருக்கும் நிலையில் நியாயமின்றி அழித்துவிடக்கூடியவன் அல்லன். (திருக்குர்ஆன் 11:117) என்ற இந்த வான்மறை வசனம், நாமும் நமது ஊர் மக்களும் எப்படியிருக்க வேண்டும் என்பதை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

தொழுகை, நோன்பு, தர்மம் இவைகளை விட உயரிய செயல் ஒன்று உள்ளது. அதை நான் கூறட்டுமா? கூறுங்கள் நாயகமே. மக்களுக்கிடையே நீங்கள் சீர்திருத்தம் செய்வது தான் அது என்றார்கள் நபிகள். (நூல்:அபூதாவூது)

நபிகள் நாயகம் கூறினார்கள்: நீங்கள் அறிவீர்களா...உங்களிடம் பலவீனமானவர்களுக்கு நீங்கள் சேவை செய்வதன் வழியாகத்தான் நீங்கள் உணவளிக்கப்படுகிறீர்கள். மேலும் உதவி செய்யப்படுகிறீர்கள். (நூல்:புகாரி)

நபிகன் நாயகம் கூறினார்கள்: எவர் விதவைகளுக்கும், ஏழைகளுக்கும் சேவை செய்கிறாரோ அவர் இடைவிடாமல் நின்று தொழுதவர் மற்றும் இடைவிடாமல் நோன்பு நோற்றவர் போன்றவர் ஆவார். (நூல்:முஸ்லிம்)

எனவே முழு ரமலான் மாதமும் நமக்கு கற்றுத்தந்த பாடங்களை நினைவில் கொண்டு என்றென்றும் மறக்காமல் நமக்கும், நம்மைச்சுற்றி உள்ளவர்களுக்கும் நற்சேவைகள் பல செய்வோமாக.

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
Tags:    

Similar News