ஆன்மிகம்
இஸ்லாம் தொழுகை

நோன்பின் மாண்புகள்: நீதியுடன் நடப்போம்

Published On 2020-05-23 05:42 GMT   |   Update On 2020-05-23 05:42 GMT
அநீதி அழிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறோமோ அவ்வாறே நீதி நிலைக்க வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
அநீதி அழிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறோமோ அவ்வாறே நீதி நிலைக்க வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இது குறித்து இறைமறைக்குர்ஆன் இப்படி கூறுகிறது:

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறு நன்மை செய்யுமாறு ஏவுகிறான்:நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். (திருக்குர்ஆன்  16:90)

நம்பிக்கையாளர்களே அல்லாஹ்வுக்காக நீதமாக (உண்மை) சாட்சி சொல்வபர்களாக இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும் படி உங்களை தூண்டாதிருக்கட்டும். (எவ்வளவு குரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்த தன்மைக்கு மிக நெருங்கியது. (எத்தகைய சந்தர்ப்பங்களிலும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:9)

மேற்கண்ட வான்மறை வசனங்கள் அனைத்தும் நீதியின் அவசியத்தை நமக்கு வலியுறுத்திக் காட்டுகின்றன.

இந்த உலகம் சீராக சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் உலகம் முழுவதும் நீதி நிலை நாட்டப்பட வேண்டும்.

இதில் உயர்ந்தவர்-தாழ்ந்தவர். ஏழை-பணக்காரன், நகரவாசி- கிராமவாசி, உள்ளூர்காரன்-வெளியூர்காரன் என்ற எந்த ஒரு சின்னஞ்சிறு வேறுபாடும் இல்லை.

எங்கும் நிழலில்லாத மறுமைநாளில் இறைவனின் சிம்மாசனத்தின் கீழ் ஏழு வகையான மனிதர்களுக்கு நிழல் கிடைக்கும் என்று கூறி பட்டியலிட்ட நபிகள் நாயகம் அதில் முதல் நபராக நீதியுள்ள தலைவர் என்று குறிப்பிட்டார்கள்.

எனவே நீதி என்பது முக்கியமானது. கட்டாயம் நிலைநிறுத்தப்பட வேண்டியது. நீதி இந்த உலகில் மட்டுமல்ல நாளை மறு உலகிலும் நம்மை காப்பற்றும்.
 
நபிகள் நாயகம் கூறினார்கள்: நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு மத்தியில் நீதியாக நடந்து கொள்ளுங்கள். (நூல்:மிஷ்காத்)

எனவே நீதியை முதலில் நமது வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். ஒவ்வொரு வீடும் சரியாக விட்டால் நமது நாடும் சரியாகி விடும். அதுதானே இன்றைய தேவையும் கூட.

நபிகள் நாயகம் கூறினார்கள்: அல்லாஹ் எனக்கு ஒன்பது காரியங்களை கட்டளையிட்டான். கோபமான நிலையிலும் திருப்தியான நிலையிலும் நீதமான வார்த்தைகளைத்தான் நான் பயன்படுத்த வேண்டும் என்பது அதில் ஒன்று. (நூல்:மிஷ்காத்)

நாம் பேசும் வார்த்தைகளில் கட்டாயம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் வார்த்தைகள்நமது இருப்பை தீர்மானிக்கின்றன.

எனவே இனியேனும் நமது காரியகங்கள் அனைத்திலும் நீதியுடன் பேசி, நீதியுடன் நடந்து, நீதியின் வழியில் வாழ்வோமாக.

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
Tags:    

Similar News