ஆன்மிகம்
இஸ்லாம் தொழுகை

நோன்பின் மாண்புகள்: நன்றி செலுத்துவோம்

Published On 2020-05-22 05:42 GMT   |   Update On 2020-05-22 05:42 GMT
நாம் நமது வணக்கங்களின் வழியாக நன்றி செலுத்தினால் மட்டும் போதாது. நம்மை சுற்றியிருப்பவர்கள் நமக்கு செய்த நற்காரியங்களுக்கு முதலில் நாம் நன்றி செலுத்த வேண்டும்.
நன்றி கூர்தல் என்பது நற்குணங்களில் முக்கியமான ஒன்று. நன்றி மறப்பது நன்றன்று என்பது நாமறிந்த ஒன்று. இது போன்ற ரமலானிய காலங்களில் கட்டாயம் நாம் இறைவனுக்கு இதர மக்களுக்கும் மனதார நன்றி செலுத்த வேண்டும்.

இதுகுறித்து இறைமறை கூறுவதைப்பாருங்கள்: நீங்கள் நன்றி செலுத்துவீர்களென்று இதற்குப்பின்னும் நாம் உங்களை மன்னித்தோம். (திருக்குர்ஆன் (2,52)

நம்பிக்கையாளர்களே நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவைகளில் இருந்தோ புசியுங்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (திருக்குர்ஆன் 2:172)

அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்கு பயந்து (வழிபட்டு) நடங்கள். (திருக்குர்ஆன் 3:123)

நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் விரைவில் நற்பலனை வழங்குவோம். (திருக்குர்ஆன் 3:145)

நீங்கள் (இவ்வாறு) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டும், அவனுக்கு நன்றி செலுத்தி கொண்டுமிருந்தால் உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன (லாபம்) அடைப்போகிறான்? அல்லாஹ்வோ( நீங்கள் செய்யும் ஒரு சொற்ப) நன்றிக்கும் கூலி கொடுப்பவனாகவும், யாவையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன்: 4:147)

நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை)அதிகமாக்குவேன்: (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக்கடுமையானதாக இருக்கும் என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூருங்கள்) (திருக்குர்ஆன் 14:7)

மேற்கண்ட வான்மறை வசனங்கள் நன்றி கூர்வதைப்பற்றி தெள்ளத்தெளிவாக நமக்கு கூறிக்காட்டுகின்றன. எனவே நன்றி கூறுவதையும் நன்றி செலுத்துவதையும் ஒருபோதும் நாம் கைவிட்டுவிடக்கூடாது.

நபிகள் நாயகம்கூறினார்கள்: எவர் மக்களுக்கு நன்றி செய்யவில்லையோ அவர்  அல்லாஹ்வுக்கு நன்றி செய்தவராக ஆக முடியாது (நூல்:அஹ்மது)

நாம் நமது வணக்கங்களின் வழியாக நன்றி செலுத்தினால் மட்டும் போதாது. நம்மை சுற்றியிருப்பவர்கள் நமக்கு செய்த நற்காரியங்களுக்கு முதலில் நாம் நன்றி செலுத்த வேண்டும்.

ஒருமுறை நபிகளார் கூறினார்கள்: ஆச்சரியம் தான் ஒரு இறைவாசிக்கு (நல்லதோ, கெட்டதோ) என்ன ஏற்பட்டாலும் அவனுக்கு நல்லது தான். எப்படி என்றால் அவனுக்கு நல்லது நடந்தால் நன்றி செலுத்துவான். இது அவனுக்கு நல்லது தானே. அவனுக்கு கெட்டது நடந்தால் பொறுமையாக இருப்பான். இதுவும் அவனுக்கு நல்லது தானே. (நூல்:முஸ்லிம்)

எனவே நாம் நம்மை படைத்த இறைவனுக்கும், நம்மை சுற்றயுள்ள மக்களுக்கும் மனப்பூர்வமாக நன்றி செலுத்தி நன்மக்களாக வாழ்வோமாக

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3

Tags:    

Similar News