ஆன்மிகம்
இஸ்லாம்

நோன்பின் மாண்புகள்: ஒற்றுமையுடன் வாழ்வோம்

Published On 2020-05-21 05:25 GMT   |   Update On 2020-05-21 05:25 GMT
இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் நமக்காக செயல்பாடுகளாக இருந்தாலும், ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் இருப்பது என்பது மிகமிக அவசியம்.
‘ஜமாஅத்’ எனும் ‘ஒற்றுமை’ முக்கியமான ஒன்று. நாம் ஒரு காரியத்தை தனியாக செய்வதற்கும், கூட்டாக செய்வதற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறது. ரமலானில் நமது வணக்க வழிபாடுகளில் பலவும் கூட்டு வழிபாடுதான். அதற்குதான் பலன்களும் அதிகம்.

இது பற்றி வான்மறை கூறுகிறது இப்படி: நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத் (மார்க்க வரி) கொடுத்து வாருங்கள். (தொழுகையில் ஒன்று சேர்ந்து குனிந்து) ருகூஉ செய்பவர்களுடன் நீங்களும் (குனிந்து) ருகூஉ செய்யுங்கள். (திருக்குர்ஆன் 2:43)

நீங்கள் அனைவரும் ஒன்று சோர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாக பற்றி பிடித்து கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துகொண்டு) நீங்கள் பிரிந்து விட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும்  அருளை நினைத்து பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) எதிரிகளாக(ப் பிரிந்து) இருந்த சமயத்தில் உங்கள் உள்ளங்களுக்குள் அன்பை ஊட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே அல்லாஹ்வின் அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (திருக்குர்ஆன் 3:103)

நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு (உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் தர்க்கித்து கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து உங்கள் சக்தி(ஆற்றல்)போய்விடும். ஆகவே நீங்கள்(கஷ்டங்களை சகித்து கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 8:46)

மேற்கண்ட இறைமறை வசனங்கள் அனைத்தும் நாம் நமது வணக்க வழிபாடுகளிலும், நமது நடைமுறை வாழ்க்கையிலும் ஒற்றுமையாகதான் இருக்க வேண்டும். அதுதான் சிறந்தது. வலிமை மிக்கது. இறையருளை பெற்றுத்தரத்தக்கது என்றெல்லாம் கூறி ஒற்றுமையின் உயர்வை உணர்த்தி காட்டுகிறது.

நீங்கள் தனியாக தொழுவதை விட ஜமா அத்துடன் சேர்ந்து தொழுவதில் தான் இருபத்தேழு மடங்கு நன்மை அதிகமாக இருக்கிறது. என்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள் (நூல்:மிஷ்காத்)

நாங்கள் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் வயிறு நிரம்புவதில்லை. இதற்கு என்ன செய்வது? என்று நாயகத்தோழர் ஒருவர் நபிகளாரிடம் கேட்ட போது நீங்கள் தனித்தனியாக உணவுகளை உண்ணாதீர்கள் இனி அனைவரும் சேர்ந்து உண்ணுங்கள். அபிவிருத்தி செய்யப்படுவீர்கள் என்று பதிலளித்தார்கள். அவரும் அப்படியே செய்ய அவர்களது வயிறு ழுமுமையாக நிரம்பியது. அதற்கு பிறகு எங்களுக்கு உணவு போதவில்லை என்ற பிரச்சனையே ஏற்படவில்லை என்கிறார் அந்நாயகத் தோழர். (நூல்:மிஷ்காத்)

ஆக இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் நமக்காக செயல்பாடுகளாக இருந்தாலும், ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் இருப்பது என்பது மிகமிக அவசியம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது பெற்று மொழியல்ல வெற்றி மொழி. இனியேனும் நாம் அனைத்து காரியங்களிலும் வேற்றுமையிலும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து வாழ்வோமாக.

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
Tags:    

Similar News