ஆன்மிகம்
இஸ்லாம்

புனித இரவில் புகழ்வோம்

Published On 2020-05-20 06:14 GMT   |   Update On 2020-05-20 06:14 GMT
கண்ணியமிக்க பாக்கியமிக்க இரவுகளில் பல நல்ல அமல்களை செய்தால் நாமும் நிச்சயம் கண்ணியம் மிக்கவர்களாக பாக்கியம் நிறைந்தவர்களாக மிளிர்வோம் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
லைலத்துல் கத்ர் எனும் புனித இரவு ஆயிரம் மாதங்களை விடச்சிறந்தது. இந்த இரவில் தான் திருக்குர்ஆன் இறங்கத் தொடங்கியது. விண்ணிலிருந்து மண்ணகத்திற்கு வானவர்களும் இந்த இரவில் தான் வருகை தருகிறார்கள். இது பற்றி குர்ஆன் கூறுகிறது:

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியம் மிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும்(ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளைப்படி (நடைபெற வேண்டிய)சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்): அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (திருக்குர்ஆன் 97:1-5)

ஆக கண்ணியமிக்க பாக்கியமிக்க இரவுகளில் பல நல்ல அமல்களை செய்தால் நாமும் நிச்சயம் கண்ணியம் மிக்கவர்களாக பாக்கியம் நிறைந்தவர்களாக மிளிர்வோம் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

நபிகளார் நவின்றார்கள்: இப்புனித இரவை கடைசி பத்து தினங்களில் நீங்கள் தேடி கொள்ளுங்கள். (நூல்:புகாரி)

இன்று புனித இரவு என்று தெரியவந்தால், அன்று நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆயிஷா(ரலி) கேட்டபோது இறைவா, நீயே மன்னிப்பவன். நீ மன்னிப்பை விரும்புவான், எனவே எனக்கு நீ மன்னிப்பு வழங்குவாயாக என்று நீ பிரார்த்தனை செய் என்று நபி அவர்கள் சொல்லிக்கொடுத்தார்கள். (நூல்: அஹ்மது, இப்னுமாஜா)

ஒருமுறை நபிகளார் இப்புனித இரவு மிகச்சரியாக எந்த இரவில் இருக்கிறது என்று சொல்ல ஆர்வமுடன் பள்ளிவாசலுக்கு வந்தபோது அங்கு அப்துல்லாஹ் இப்னு அபுஹத்ரத் மற்றும் கஅப் இப்னுமாலிக் ஆகிய இரு  நபித்தோழர்கள் குரலை உயர்த்தி சண்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள். இதை கண்ட நபிகளார், அந்த இரவு பற்றிய செய்தி நீக்கப்பட்டு விட்டது.(  அல்லது மறக்கடிக்கப்பட்டு விட்டது)அதுவும் உங்களுக்கு நல்லது தான் என்றார்கள். (நூல்:புகாரி)

இவ்வாறெல்லாம் கூறி கடைசி தினங்களை கைவிட்டு விடாதீர்கள் என்பதைதான் அழுத்தமாக சொல்கிறார்கள். எனவே தான் பாக்கியம் நிறைந்த அந்த கடைசி நாட்களில் ஜவுளிக்கடைகளில் ஷாப்பிங் மால்களில், உணவகங்களில் சுற்றித்திரியக்கூடாது என்பதற்காகத்தான் இக்திகாப் எனப்படும் தனித்திருத்தல் அவசியமாக்கப்பட்டிருக்கிறது.

காரணம் அந்த இரவில் முழுப்பலனை நாம் முழுமையாக அடையவேண்டும் என்பது தான். ஆனால் இன்றைக்கு நாம் எப்படியிருக்கிறோம் என்பதும் ஒரு கணம் சிந்தித்துப்பார்க்க தக்கது.

இனியேனும் நாம் இது போன்ற புனித தினங்களையும், இரவுகளையும் வீணடித்து விடாமல் மிகச்சரியாக பயன்படுத்தி தனித்திருந்து, விழித்திருந்து, பிரார்த்தனைகள் புரிந்து தான தர்மங்கள் செய்து இறைவனை புகழ்வோம். இதன் மூலம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாம் பெறுவோமாக

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
Tags:    

Similar News