ஆன்மிகம்
இஸ்லாம்

நோன்பின் மாண்புகள்: நல்லிணக்கம் பேணுவோம்

Published On 2020-05-18 05:39 GMT   |   Update On 2020-05-18 05:39 GMT
புனித ரமலானில் நாம் பேண வேண்டிய காரியங்களில் நல்லிணக்கமும் ஒன்று. நாம் வாழும் இந்த பன்மை சமூகத்தில் அனைத்து சமயத்தவர்களுடனும் இணங்கி, இணைந்து வாழ வேண்டும்.
புனித ரமலானில் நாம் பேண வேண்டிய காரியங்களில் நல்லிணக்கமும் ஒன்று. நாம் வாழும் இந்த பன்மை சமூகத்தில் அனைத்து சமயத்தவர்களுடனும் இணங்கி, இணைந்து வாழ வேண்டும். தனித்து வாழ்வதை இஸ்லாம் ஒருபோதும் விரும்பியதும் இல்லை. இது குறித்து இறைமறைக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

(நம்பிக்கையாளர்களே) அல்லாஹ் அல்லாத எவறை அவர்கள்(கடவுள் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால் அறிவாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக்கி வைத்திருக்கின்றோம். பின்னர் அவர்கள் தங்கள் இறைவனிடமே செல்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயலைப்பற்றி (அவற்றின் நன்மை எவை, தீமை எவை என்பதை) அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான். (திருக்குர்ஆன் 6:108)

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்: எனக்கு என்னுடைய மார்க்கம். (திருக்குர்ஆன் 109:6)

மேற்கண்ட வான்மறை வசனங்கள் சகோதர சமயத்தவர்களுடன் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதையும் சொல்லி காட்டுகிறது.

குறிப்பாக ஒவ்வொரு சமயத்தவர்களின் வழிபாட்டுத்தலங்களையும் அவரவர்கள் என்னென்ன பெயர்களில் அழைப்பார்களே அவ்வாறே அல்லாஹ் பெயர் குறிப்பிட்டு சொல்வது நாம் ஆழ்ந்து சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று. கூடவே ஒவ்வொரு சமயத்தவர்களும் இதர சமயத்தவர்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

நபிகள் நாயகமும், நாயகத்தோழர்களும் சமய நல்லிணக்கத்துடன் தான் நடந்து கொண்டார்கள். அதன் வழியாக வந்த சூபிகளும் இறைநேசச் செல்வர்களும் இதே நல்லிணக்கத்தை தான் நமக்கு வலியுறுத்தினார்கள்.

ஒருமுறை இறந்து போன யூதர் ஒருவரின் சடலம் வீதி வழியே வந்த போது நபிகளார் எழுந்து நின்றார்கள். இதை கண்ட நாயகத்தின் தோழர்கள் நாயகமே அவர் யூதராயிற்றே நீங்கள் எப்படி? என்று ஆச்சரியமாய் வினவியபோது அவரும் நம்மைப்போல மனிதர் தானே என்றார்கள். (நூல்:மிஷ்காத்)

இன்னொரு முறை தன்னிடம் பணிபுரிந்த யூதச்சிறுவன் ஒருவன் உடல் நலமில்லாமல் இருந்த போது அந்தச்சிறுவனின் வீட்டுக்கு சென்று உடல்நலம் விசாரித்தார்கள். (நூல்:மிஷ்காத்)

இன்றைக்கு நாம் செய்ய வேண்டியதும் கடைப்பிடிக்க வேண்டியதும் இந்த அற்புதமான பல்சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும் தான். இது  தான் என்றைக்கும் நிலையானது, நீடிக்கக்தக்கது. அது தான் மெய்யானதும் கூட. நாம் நம்மை சுற்றியிருப்பவர்களை மதித்து நடக்கும் போது தான் நம்மை சுற்றியிருப்பவர்களும் நம்மை மதித்து நடப்பார்கள்.

எனவே நாம் நம்மைச்சுற்றி இருப்பவர்களோடு ஜாதி, மத, இன, மொழி, நிற வேறுபாடு பார்க்காமல் நல்லிணக்கம் பேணி வாழ்வோமாக.

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
Tags:    

Similar News