ஆன்மிகம்
இஸ்லாம்

அநாதைகளை ஆதரிப்போம்

Published On 2020-05-14 06:18 GMT   |   Update On 2020-05-14 06:18 GMT
அநாதைகளுடன் அன்பாக நடந்து அவர்களது கரம் பிடித்து இறுதிவரை அவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்து இன்முகத்துடன் இனிதே ஆதரிப்போமாக.
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதைப்போல் தமது பெற்றோரை இழந்தவர்களுக்குத்தான் தெரியும் அநாதைகளின் அருமை. இந்த ரமலான் அப்படிப்பட்ட அநாதைகளையும் சற்று நினைத்து பார்க்கச் சொல்கிறது. இவர்களை பற்றி குர்ஆன் கூறுகிறது:

(நபியே) நீர் அநாதையை கடிந்து கொள்ளாதீர். (திருக்குர்ஆன் 93:9)

(நபியே பொருள்களில்) எதை செலவு செய்வது? (யாருக்கு கொடுப்பது) என்று உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: (நன்மைகளை கருதி) நீங்கள் எத்தகைய பொருளை செலவு செய்தபோதிலும் (அதனை) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்கு கொடுங்கள். இன்னும் நீங்கள் (வேறு) என்ன நன்மையை செய்த போதிலும் அதனையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான். (திருக்குர்ஆன் : 2,215)

(நபியே) அநாதைகளை (வளர்ப்பதை) பற்றியும் உங்களிடம் கேட்கிறார்கள்(அதற்கு) நீங்கள் கூறுங்கள்: அவர்களை சீர்திருத்துவது மிகவும் நன்றே. மேலும் நீங்கள் அவர்களுடன் கலந்(து வசித்)திருக்க நேரிட்டால் (அவர்கள்) உங்களுடைய சகோதர்களே. (ஆதலால் அவர்களுடைய சொத்தில் இருந்து அவசியமான அளவு உங்களுக்காகவும் செலவு செய்து கொள்ளலாம்). ஆனால் நன்மை செய்வோம் என்று (கூறிக்கொண்டு) தீமை செய்பவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடினால் உங்களை (மீள முடியாத) கஷ்டத்திற்குள்ளாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (எவ்விதமும் செய்ய) வல்லவனும், நுண்ணறிவுடையவனுமாக இருக்கின்றான். (ஆகவே அநாதைகள் விஷயத்தில் மோசம் செய்யாது மிக்க அனுதாபத்துடனும் நீதமாகவும் நடந்து கொள்ளுங்கள்). (திருக்குர்ஆன் 2:220)

நீங்கள் அநாதைகளின் பொருள்களை (அவர்கள் பருவமடைந்த பின் குறைவின்றி) அவர்களுக்கு கொடுத்து விடுங்கள். (அதிலுள்ள) நல்லதுக்கு பதிலாக கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்களுடைய பொருள்களுடன் சேர்த்து விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாகும். (திருக்குர் ஆன் 4:2)

(அநாதைகளின் பொருளுக்கு பொறுப்பாளரான நீங்கள் அந்த அநாதைகள்) புத்திக் குறைவானவர்களாயிருந்தால், வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைந்திருககும் உங்களிடமுள்ள (அவர்களின்) பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனினும் (அவர்களுக்கு போதுமான) உணவையும், அவர்களுக்கு (வேண்டிய) ஆடைகளையும், அதிலிருந்து கொடுத்து அவர்களுக்கு அன்பான வார்த்தைகளை கூறி (நல்லறிவை புகட்டி) வருவீர்களாக (திருக்குர்ஆன் 4:5)

இப்படியாக அநாதைகள் விஷயத்தில் பேராதரவுடன் குர்ஆன் பேசுகிறது. எனவே அநாதைகளுடன்  அன்பாக நடந்து அவர்களது கரம் பிடித்து இறுதிவரை அவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்து இன்முகத்துடன் இனிதே ஆதரிப்போமாக.

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
Tags:    

Similar News