ஆன்மிகம்
இஸ்லாம்

உறவுகளை நேசிப்போம்

Published On 2020-05-12 05:49 GMT   |   Update On 2020-05-12 05:49 GMT
புனித ரமலானில் மனித உறவுகளை மேம்படுத்தும் போது தான் நமது நோன்பு மாண்பு பெறும். இதுகுறித்து வான்மறை பேசுகிறது இப்படி:
உறவுகளின்றி உயிர்களில்லை. எனவே உறவினர்களை ஆரத்தழுவி, ஆதரிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கிருக்கிறது. அதுவும் புனித ரமலானில் மனித உறவுகளை மேம்படுத்தும் போது தான் நமது நோன்பு மாண்பு பெறும். இதுகுறித்து வான்மறை பேசுகிறது இப்படி:

மனிதர்களே உங்கள் இறைவனுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான், பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச்செய்தான்: ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள், அவனை கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளை) கேட்டுக்கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்)ரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.(திருக்குர்ஆன் 4:1)

உறவுகள் புனிதமானவை அவற்றை நாம் கடைசிவரை கட்டிக்காக்க வேண்டும் என்பது குர்ஆன் கூறும் உண்மை.

இறைவனுக்கு அடுத்தபடியாக நாம் அதிகம் பயப்பட வேண்டியது நமது உறவுகளுக்குத்தான். ஆம் அவர்களது ஆனந்தத்தில் தான் அல்லாஹ்வின் ஆனந்தம் இருக்கிறது. அவர்களது அதிருப்தியில் அல்லாஹ்வின் அதிருப்தி தான் இருக்கிறது என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் கூறினார்கள்: உங்களுக்கு வாழ்வாதாரம் பெருக வேண்டுமா? இன்னும் ஆயுள் அதிகரிக்க வேண்டுமா? உங்களது உறவுகளை இணைத்து வாழுங்கள். (நூல்:புகாரி, முஸ்லிம்)

மனித வாழ்விற்கு இந்த இரண்டும் முக்கியம் தான். அதை நாம் தங்கு தடையின்றி பெற வேண்டுமானால் அதற்கு நாம் செய்ய வேண்டியது நமது உறவுகளை உடையாமல் பார்த்து கொள்வது தான். உறவுகளுக்குள் அவ்வப்போது சண்டை, சச்சரவுகள் வரத்தான் செய்யும். அவற்றை நாம் தான் மனதார மன்னித்து மறந்து விட வேண்டும். என்றோ நடந்தவைகளை திரும்பத்திரும்ப சொல்லி காட்டிக்கொண்டே இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதை இஸ்லாம் விரும்பவும் இல்லை.

உறவுகளை துண்டித்து வாழ்ந்தால் என்ன நடக்கும் தெரியுமா? நபிகள் நாயகம் கூறினார்கள்: உலகத்திலேயே ஒருவருக்கு தண்டனை வழங்கப்படுகிறது என்றால் அது உறவுகளை துண்டித்து வாழ்வதற்குத்தான் வழங்கப்படும. ( நூல்:அபூதாவூது)

உறவுகளுடன் இணைந்திருப்பது தான் நமக்கு நல்லதொரு பலன். அந்த  உறவுகள் ஒருபோதும் அறுந்து போவதில்லை. நாம் வேண்டுமானால் உறவுகளை மறுக்கலாம். புறக்கணிக்கலாம். ஆனால் உறவுகள் ஒருபோதும் நம்மை மறுப்பதில்லை. புறக்கணிப்பதும் இல்லை.

எனவே உன்னதமான உறவுகளுக்கு கைகொடுக்க வேண்டும். உடைந்த நம் உறவுகளை சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த புனிதமான ரமலான் மாதத்தை மிகச்சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இனியேனும் நாம் நமது உறவுகளை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து நேசிப்போமாக.

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3

Tags:    

Similar News