ஆன்மிகம்
இஸ்லாம்

பெற்றோரை போற்றுவோம்

Published On 2020-05-11 05:08 GMT   |   Update On 2020-05-11 05:08 GMT
பெற்றோரின் திருப்தியில் இறைவனின் திருப்தியும், பெற்றோரின் கோபத்தில் இறைவனின் கோபமும் இருப்பதாக நபிகளார் சொன்னதும் இங்கு இணைத்து பார்க்கத்தக்கது.
ரமலான் சிறப்பு பெற்றதற்கு குர்ஆன் இம்மாதத்தில் இறங்கியதும் ஒரு காரணம். அந்த குர்ஆன் கூறும் கட்டளைகளில் பெற்றோரை பேணிப்பாதுகாப்பதும் ஒன்று. பெற்றோரை புறக்கணித்து விட்டு நோன்பின் பலன்களை நிச்சயம் ஒருவர் பெற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து இறைமறை கூறுவதை பார்ப்போம்:

“அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும், உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்: அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (ச்சீ) என்று (சடைந்தும்)  சொல்ல வேண்டாம் அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து ) விரட்ட வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக. இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காவும் நீர் தாழ்த்துவீராக: மேலும் என் இறைவனே நான் சிறு பிள்ளையாக இருந்து போது என்னை (பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல் நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக என்று கூறிப் பிரார்த்திப்பீராக“ (திருக்குர்ஆன் 17:23,24)

“நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது)பற்றி வஸிய்யத்துச் செய்(துபோதித்)தோம்: அவனுடைய தான் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்: இன்னும் அவனுக்கு பால் குடி மறந்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன:ஆகவே நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக: என்னிடமே உன்னுடய மீளுதல் இருக்கிறது”.

ஆனால் நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்:ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக்கொள்: (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக. பின்னர் உங்கள் ( அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்: நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன். .(திருக்குர்ஆன் 31:14,15)

இம்மூன்று வான்மறை வசனங்களும் நாம் நமது பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து  கொள்ளக்கூடாது என்பதை பற்றி தெளிவாக கூறிக்காட்டுகிறது.

 எனவே நமது பெற்றோர்கள் சாதாரணமானவர்களல்ல. அவர்களுக்கொன்று தனிமதிப்பும், மரியாதையும் இருக்கிறது. அதை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

பெற்றோரின் திருப்தியில் இறைவனின் திருப்தியும், பெற்றோரின் கோபத்தில் இறைவனின் கோபமும் இருப்பதாக நபிகளார் சொன்னதும் இங்கு இணைத்து பார்க்கத்தக்கது.

இனியேனும் நமது பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை கண்ணியப்படுத்தி போற்றிடுவோமாக.

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
Tags:    

Similar News