ஆன்மிகம்
இஸ்லாம்

தீமைகளை களைவோம்

Published On 2020-05-09 05:53 GMT   |   Update On 2020-05-09 05:53 GMT
புனிதமிகு ரமலானில் நாம் நற்காரியகங்களில் ஈடுபடுவதை போலவே நம்மைச்சுற்றி நடைபெறும் தீயகாரியங்களையும் கட்டாயம் தடுக்க முயற்சிக்க வேண்டும்.
நற்காரியங்கள் தூண்டப்படுவதை போல் தீயகாரியங்கள் தடுக்கப்படவும் வேண்டும். தீமைகள் தடுக்கப்படாமல் நன்மைகளுக்கு அர்த்தமில்லை. நாமும் தீமைகளிலிருந்து விலக வேண்டும். நம் சகோதர்களை விலக்கவும் வேண்டும். இது பற்றி இறைமறை கூறுவதைப்பாருங்கள்:

(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதை கொண்டு (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றவர்கள். (திருக்குர்ஆன் 3:104)

எவரேனும் யாதொரு நன்மையானவற்றுக்கு சிபாரிசு செய்தால் அந்த நன்மையில் ஒரு பங்கு அவருக்குண்டு. (அவ்வாறே) யாதொரு தீய விஷயத்திற்கு யாரும் சிபாரிசு செய்தால் அத்தீமையில்  இருந்தும் அவருக்கொரு பங்குண்டு. அல்லாஹ் அனைத்தையும் முறைப்படி கவனிப்பவனாக  இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:85)

தீமையை விட்டு விலக்கிக்கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையை கொடுத்தோம். (திருக்குர்ஆன் 7:165)

தீமைகள் கேடுவிளைவிப்பவை தீமையைத் தூண்டுவதும் தீமைதான் தீமையை தடுப்பதும் ஒரு நற்காரியம் தான் என்றெல்லாம் மேற்கண்ட வான்மறை வசனங்கள் கூறுகின்றன. எனவே நாம் தீமையான காரியங்களில் ஈடுபடும் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செடிகளிடையே வளர்ந்து விட்ட ஒரு முள் செடி எவ்வளவு அபாயகரமானதோ, அது போன்றது தான் நம்மிடமுள்ள நமது தீமைகள். அவை கொஞ்சம் கொஞ்சமாக நம்மையே அழித்துவிடும்.

நபிகள் நாயகம் கூறினார்கள்: உங்களில் ஒருவர் வெறுப்பான காரியத்தை கண்டால் தன் கையால் அதை தடுக்கட்டும். அதற்கு முடியாவிட்டால் தன் நாவால் (பேசித்)தடுக்கட்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் வெறுக்கட்டும். (நூல்:முஸ்லிம்)

இன்னொருமுறை நபிகளார் இப்படி சொன்னார்கள்: (மக்களே) நிச்சயமாக நீங்கள் நன்மைகளை ஏவுங்கள் தீமைகளை விலக்குங்கள். (இல்லையெனில்) இறை வேதனை உங்கள் மீது இறங்கும், பிறகு உங்களது பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கப்படாது. (நூல்:திர்மிதி)

ஆக தீமை என்பது மிகவும் மோசமான ஒன்று. நமது பிரார்த்தனைகளையே இறைவனிடம் அங்கீரமில்லாமல் செய்து விடுகின்றது என்றால் அது எவ்வளவு மோசமானது. எனவே தீமைகளை தடுப்பதில் கட்டாயம் தீவிரம் காட்ட வேண்டும். இல்லையெனில் நன்மைகளை செய்வதில் மட்டும் நற்பலன் முழுமையாக கிடைப்பதில்லை.

புனிதமிகு ரமலானில் நாம் நற்காரியகங்களில் ஈடுபடுவதை போலவே நம்மைச்சுற்றி நடைபெறும் தீயகாரியங்களையும் கட்டாயம் தடுக்க முயற்சிக்க வேண்டும். முன்னதாக நாமும் கெட்ட செயல்களிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

எனவே இனியேனும் நாம் தீமைகளை தீவிரமாக களைவோமாக..

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
Tags:    

Similar News