ஆன்மிகம்
இஸ்லாம்

சோதனைகளை ஏற்போம்

Published On 2020-05-08 06:03 GMT   |   Update On 2020-05-08 06:03 GMT
சோதனை என்பது நம்மைச்சுற்றி இருக்கவே செய்கிறது. சோதனைகளிலிருந்து இறைத்தூதர்களும், அறைநேசர்களும் தப்பிக்கவில்லை. எனவே இறைவன் நமக்கு வழங்கும் சோதனைகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனந்தமாக வாழ்ந்து வரும் வாழ்வில் இடையே திடீரென சிரமங்கள் சில வருவதுண்டு. துன்பம் வந்தவுடன் ஏனோ மனிதன் சட்டென துவண்டு போய் விடுகிறான். அதை எதிர் கொள்வதற்கு அவனால் முடிவதில்லை. இதனால் தான் இஸ்லாம் இது போன்ற நோன்புகளை நமக்கு கடமையாக்கி “சில சிரமங்களை தாங்கிக் கொள்” என நமக்கு பயிற்சியளிக்கிறது. இனி இறைமறை கூறுவதை கேளுங்கள்:

(நம்பிக்கையாளர்களே) பயம், பசி மேலும் பொருட்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளை கொண்டு நிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம். (நபியே இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்கங்களை) சகித்து கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.  (சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்ட போதிலும் நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம் என கூறுவார்கள். (திருக்குர்ஆன் 2:155,156)

உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 8:28)

எனவே சோதனை என்பது நம்மைச்சுற்றி இருக்கவே செய்கிறது. சோதனைகளிலிருந்து இறைத்தூதர்களும், அறைநேசர்களும் தப்பிக்கவில்லை. எனவே இறைவன் நமக்கு வழங்கும் சோதனைகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருமுறை நபிகளார் கூறினார்கள்: ‘ஆச்சர்யம் தான். ஒரு இறைவாசிக்கு (நல்லதோ, கெட்டதோ) என்ன ஏற்பட்டாலும் அவனுக்கு நல்லது தான். எப்படி என்றால்  அவனுக்கு நல்லது நடந்தால் நன்றி செலுத்துவான். இது அவனுக்கு நல்லது தானே. அவனுக்கு கெட்டது நடந்தால் பொறுமையாக இருப்பான். இதுவும் அவனுக்கு நல்லது தானே’. (நூல்:முஸ்லிம்)

ஆகவே சோதனைகளை கண்டு நாம் சுருண்டுவிடத்தேவையில்லை. அதை பக்குவமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி சோதனைகள் வரும் நேரத்தில் நாம் சொல்ல வேண்யதெல்லாம்‘இன்னா லில்லாஹிவ இன்னா இலைஹிராஜிஊன்’ (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம் என்பதைத் தவிர வேறில்லை).

‘இன்னாலில்லாஹி’ என்பது நாம் மரணச்செய்தியை கேட்கும் போது மட்டும் கூற வேண்டிய வார்த்தையல்ல. சிறுசிறு சிக்கல்கள், சிரமங்கள், சங்கடங்கள் என சோதனைகள் நம் வாழ்வில் நிகழும் போதெல்லாம் சொல்ல வேண்டிய ஒரு சொல் தான் அது. அப்படி கூறுவதன் மூலம் அல்லாஹ் விரைவில் நமக்கு நல்லதொரு சூழ்நிலையை உடனடியாக ஏற்படுத்திக் தருவான் என்பது அனுபவப்பூர்வமான உண்மை.

எனவே, இப்புனித ரமலானில் சோதனைகள் எதுவானலும் அவற்றை மனப்பூர்வமாக ஏற்று நற்சாதனைகளாக மாற்றிடுவோமாக.

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
Tags:    

Similar News