ஆன்மிகம்
இஸ்லாம்

நோன்பு காலத்தில் நல்லதை செய்வோம்

Published On 2020-05-07 04:10 GMT   |   Update On 2020-05-07 04:10 GMT
நற்செயல் என்பதற்கு அளவுகோல் என்று எதுவுமில்லை. எனவே இப்புனித நோன்பு காலத்தில் இயன்றவரை அதிகமதிகம் நற்செயல்கள் பல புரிந்து நற்பேறுகள் பற்பல பெறுவோமாக.
நல்ல காரியம் என்று எது வந்தாலும் அதை நாம் முன்னின்று செய்ய வேண்டும். நல்ல காரியங்கள் என்றைக்கும் நல்ல காரியங்கள் தான்.

நற்செயல்களை செய்வதற்கு நீங்கள் முந்திக்கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 2:148)

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை செய்கின்றார்களோ அவர்களின் (நற்) கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாக வழங்குவான். அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 3:57)

எவரேனும் வருத்தப்பட்டு (பாங்களில் இருந்து) விலகி நற்செயல்களை செய்தால் (அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுவான்)
ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.(திருக்குர்ஆன் 3:89)

ஆணாயினும் பெண்ணாயினும் எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களை செய்கின்றார்களோ அவர்கள் தான் சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் அற்ப அளவுக்கு அநீதி செய்யப்பட மாட்டார்கள் (திருக்குர்ஆன் 4:124)

எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களை செய்கின்றார்களோ அவர்களுடைய் கூலிகளை அவன் அவர்களுக்கு முழுமையாக அளித்து தன் அருளால் மென்மேலும் அவர்களுக்கு அதிகப்படுத்துவான் (திருக்குர்ஆன் 4:173)

மேற்கண்ட இறைமறை வசனங்கள் நல்ல காரியங்களை செய்ய வேண்டும். அதுவும் உடனடியாக செய்ய வேண்டும் அதுதான் இறையருளை பெறவும் சொர்க்கத்தை பெறவும் காரணமாக இருக்கும் என்பதை அறிய முடிகிறது.

நபிகள் நாயகம் கூறினார்கள்: எவர் ஒரு நற்காரியத்தை செய்யத் தூண்டுகிறாரோ, அவர் அந்தக்காரியத்தை செய்தவர் போன்றவராவார் (நூல்:முஸ்லிம்)

ஒருமுறை நபிகள் நாயகம் என்னிடம் இப்படி கூறினார்கள்: அபூ தர்ரே, நீர் எந்தவொரு நற்காரியத்தையும் இழிவாக கருதாதீர். அது உன் நண்பனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும சரியே. (நூல்:முஸ்லிம்)

நண்பர்களை காணும் போதெல்லாம் மலர்ச்சியுடன் முகத்தை வைத்துக்கொண்டால் கூட போதும் அதுவும் ஒரு நற்செயல் தான் என்கிறார்கள் நமது நபிகள் நாயகம்.

நபிகள் நாயகம் கூறினார்கள்: ஒருவர் ஒரு பாதைவழியே சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் முள் மரக்கிளை ஒன்று நடப்பவர்களுக்கு இடையூறளித்து கொண்டிருந்தது. அதைக்கண்ட அவர் அவ்வழியிலிருந்து அம்முள்கிளையை அகற்றிப்போட்டார். இந்த நற்செயலின் காரணமாக இறைவன் அவருக்கு நன்றி கூறி அவரது பாவங்களை மன்னித்து கவனத்தில் நுழைய செய்தான்.

ஆக நற்செயல் என்பதற்கு அளவுகோல் என்று எதுவுமில்லை. எனவே இப்புனித நோன்பு காலத்தில் இயன்றவரை அதிகமதிகம் நற்செயல்கள் பல புரிந்து நற்பேறுகள் பற்பல பெறுவோமாக.

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3

Tags:    

Similar News