ஆன்மிகம்
இஸ்லாம்

அமானிதம் காப்போம்

Published On 2020-05-06 05:24 GMT   |   Update On 2020-05-06 05:24 GMT
அமானிதம் எனும் பாதுகாப்பு தன்மை அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒன்று. குறிப்பாக ரமலான் நோன்புகள் ஒவ்வொன்றும் நமக்கு அமானிதம் தான்.
அமானிதம் எனும் பாதுகாப்பு தன்மை அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒன்று. குறிப்பாக ரமலான் நோன்புகள் ஒவ்வொன்றும் நமக்கு அமானிதம் தான்.

இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விட வேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்பு கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான், நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு(இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான். நிச்சயாக அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.(திருக்குர்ஆன் 4:58)

எனவே அமானிதம் என்பது நமக்கு மிகவும் முககியமான ஒன்று. ஒருவரிடம் நம்பத்தன்மை இல்லையென்றால் அவரிடம் நாம் எப்படி எதார்த்தத்துடன் நடந்து கொள்ள முடியும்?. எனவே தான் இந்த அமானிதம் முதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இதனால் தான் நபிகள் நாயகம் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று : பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் மாறுசெய்வான், நம்பிக்கை வைத்தால் மோசடி செய்வான்.(நூல்:புகாரி)

எனவே நம்பிக்கை என்பது நமக்கு மிகமிக முக்கியமான ஒன்று. அந்த நம்பிக்கையை இந்த நோன்பு கற்றுத்தருகிறது. ஒருவர் நோன்பு வைத்திருக்கிறார், அவர் நினைத்தால் யாருக்கும் தெரியாமல் உண்ணலாம். பருகலாம். ஆனால் அவர் அப்படியெல்லாம் செய்வதில்லை. காரணம் அல்லாஹ் தன்னை நம்பி இந்த நோன்பை ஒப்படைத்துள்ளான். அதை நாம் சரியாக முறையாக நிறைவேற்ற வேண்டும் என்ற அவனது அமானிதத் தன்மை தான்.

இந்த தன்மை தான் இன்றைக்கு மிக அவசியமானதாக இருக்கிறது. நட்பு, கடன், கல்வி, குடும்பம், வணிகம் என அனைத்திலும் நம்பகத்தனம் அவசியமாகிறது. அவற்றில் சற்று சந்தேகம் வந்து விட்டால் பிறகு அது நீடித்து நிலைப்பது என்பது முடியாத ஒன்று தான், ஆகவே தான்  அண்ணலார் இப்படி எச்சரித்தார்கள். அமானிதத் தன்மை இல்லாதவர் ஈமான் எனும் இறைவிசுவாசமற்றவர்.

ஒரு முஸ்லீமுக்கு இறை விசுவாசம் என்பது முக்கியமான ஒன்று. அதன் இருப்பை அவரது அமானிதத் தன்மை தான் தீர்மானிக்கிறது. இப்படியானால் ஒரு முஸ்லீமிடம் கட்டாயம் அமானிதம் இருக்க வேண்டும் என்பதை விட அந்த அமானிதத்துடன் இருப்பவர் தான் முழு முஸ்லீமாக இருக்க முடியும் என்பதையும் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.

இன்றைக்கு எல்லாத்துறைகளிலும் மோசடிகள் பெருகிக்போனதற்கு என்ன காரணம்? அந்த அமானிதங்கள் அனைத்து குறைந்து போனதும் அழிந்து போனதும் தான் காரணம்.

 எனவே நமது ஈமானை அடையாளப்படுத்தும் மனித குலத்தை நேர்மைப்படுத்தும் அமானிதத்தை ஒருபோதும் நாம் கைவிடக்கூடாது.ஆகவே புனிதநோன்பு கற்றுத்தரும் அமானிதங்களை கட்டாயம் கற்போம். கடைசி வரை கட்டிக்காப்போம்.

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
Tags:    

Similar News