ஆன்மிகம்
இஸ்லாம்

மன்னிப்பை தேடுவோம்

Published On 2020-05-05 06:07 GMT   |   Update On 2020-05-05 06:07 GMT
நபிகள் நாயகம் கூறினார்கள்: ஆதாமின் அனைத்து பிள்ளைகளும் தவறு செய்பவர்கள் தான், அவர்களில் பாவ மன்னிப்பு தேடுபவர்கள் தான் மிகச் சிறந்தவர்கள்.
இன்று முதல் ‘மஃபிரத்’எனும் நடுப்பத்து நாட்கள் ஆரம்பம். எனவே இந்நாட்களை அதிகமதிகம் நாம் மன்னிப்பை தேட பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

‘அல்லாஹ்வோ தன் அருளால் சொர்க்கத்திற்கும் (தன்னுடைய) மன்னிப்புக்கும் (உங்களை) அழைக்கின்றான்’.(திருக்குர்ஆன் 2:221)

‘அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன்2:199)

‘உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சுவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானம், பூமியின் விசாலத்தை போன்றது. (அது) இறைஅச்சம் உடையவர்களுக்காகவே தயார்படுத்தப்பட்டுள்ளது’. (திருக்குர்ஆன் 3:133)

எவரேனும் ஒரு தீமையைச்செய்து அல்லது தமக்குத்தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக ) அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பாரானால் அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார். (திருக்குர்ஆன்: )

மானக்கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்து விட்டாலும் அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தனக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத்தேடுவார்கள். அல்லாஹ்வை தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும் அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ)காரியங்களில் நீடித்திருக்கவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 3:135)

மேற்கொண்ட இறைவசனங்கள் அனைத்தும் நாம் நமது பாவங்களுக்காக நிச்சயம் அல்லாஹ்விடத்திலே பாவ மன்னிப்பு தேட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

நபிகள் நாயகம் கூறினார்கள்: ஆதாமின் அனைத்து பிள்ளைகளும் தவறு செய்பவர்கள் தான், அவர்களில் பாவ மன்னிப்பு தேடுபவர்கள் தான் மிகச் சிறந்தவர்கள்.

ரப்பி ஃபிர்லீ வதுப் அலைய்ய, இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம் அல்லது அஸ்தஃபிருல்லாஹ், அல்லதீ லா இலாஹி அல்லது சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, அஸ்தஃபிருல்லாஹ் வஅதுபு இலைஹி என்று இம்மூன்றில் ஏதேனும் ஒன்றை ஓதலாம். தமிழிலும் நமது குற்றங்களை அல்லாஹ்விடம் மனம் விட்டு கூறி தன்னை மன்னிக்கும் படி அழுது புலம்பி தவ்பா செய்ய வேண்டும். நிச்சயம் அல்லாஹ் நம்மை மன்னிப்பதற்கு தயாராகத்தான் இருக்கிறான் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.

நமது பாவங்களுக்காக நாம் வருத்தப்படுவதும் கூட ஒரு தவ்பா தான் என்ற நபிகளார் கூறியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. எனவே இந்த ரமலானில் நமது பாவங்களுக்காக வருத்தப்பட்டு இறைவனிடத்தில் நாம் அதிகமதிகம் பாவ மன்னிப்பு தேடுவோமாக

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
Tags:    

Similar News