ஆன்மிகம்
இஸ்லாம்

இறையச்சம் கொள்வோம்

Published On 2020-05-04 05:12 GMT   |   Update On 2020-05-04 05:12 GMT
‘தக்வா’ எனும் இறையச்சம் நமக்கும், நமது செயல்களுக்கும் அவசியமான ஒன்று. “இறையச்சமில்லாத எந்தவொரு செயலும் இறைவனிடம் அங்கீகாரம் பெறுவதில்லை” என நபிகளார் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
‘தக்வா’ எனும் இறையச்சம் நமக்கும், நமது செயல்களுக்கும் அவசியமான ஒன்று. “இறையச்சமில்லாத எந்தவொரு செயலும் இறைவனிடம் அங்கீகாரம் பெறுவதில்லை” என நபிகளார் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

“உங்களால் இயன்றவரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்” (திருக்குர்ஆன் 64:16)

“உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ அவர் தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர்”. (திருக்குர் ஆன்49: 13)

“எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (சரியான ஒரு)வழியை உண்டாக்குவான். அவருக்கு அவர் எண்ணியிராத புறத்திலிருந்து  அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்”. (திருக்குர்ஆன் 65:3)

“ஈமான் கொண்டவர்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையை) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்: இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களை போக்கி உங்களை மன்னிப்பான். ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்”. (திருக்குர்ஆன் 8:59)

மேற்கண்ட இறைவசனங்கள் அனைத்தும் இறைவனுக்கு நாம் கட்டாயம் அஞ்சி வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அவர்களுக்கு தான் அல்லாஹ்விடத்தில் உயர்வான கண்ணியம் இருக்கிறது என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகத்தின் இறுதிப்பேருரை மிகவும் பிரபலமான ஒன்று, அந்த உரையை அண்ணலார் இப்படித்தான் ஆரம்பித்தார்கள்:‘நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிச் கொள்ளுங்கள். ஐவேளை தொழுங்கள். ரமலானில் நோன்பு வையுங்கள். உங்கள் பொருட்களுக்கான ஜகாத்தை கொடுத்து விடுங்கள். உங்கள் தலைவருக்கு கட்டுப்படுங்கள். (இப்படிச்செய்தால்) உங்களது இறைவனின் கவனத்தில் நீங்கள் நுழைவீர்கள்’(நூல்:திர்மிதி)

நபிகளாரின் பிரார்த்தனைகளில் மிகப்பிரபலமான பிரார்த்தனை இது:

‘நேர்வழியையும், இறையச்சத்தையும் பத்தினித்தனத்தையும், பிறரிடத்தில் கையேந்தாத நிலையையும் இறைவா உன்னிடத்தில் நான் கேட்கிறேன்‘.(நுல்:முஸ்லீம்)

ஆக எல்லாவற்றிலும் தக்வா எனும் இறையச்சத்தை தான் அல்லாஹ்யும், அவனது தூதரும் முன்னிலைப்படுத்தி இருப்பதிலிருந்தே அதன் முக்கியத்துவம் நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும். இதனால் தான் நோன்பை பற்றி குர்ஆன் கூறும் போது ‘இதன் மூலம் நிச்சயம் நீங்கள் இறையச்சத்தை பெறுவீர்கள்’ என்ற உறுதியளிக்கிறது.

எனவே புனித நோன்புகளை நோற்று இனிய இறையச்சத்தை இனிதே நாம் பெற்றிடுவோமாக.

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
Tags:    

Similar News