ஆன்மிகம்
இஸ்லாம்

பொறுமை கொள்வோம்

Published On 2020-05-02 06:05 GMT   |   Update On 2020-05-02 06:05 GMT
‘நம்பிக்கையாளர்களே (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 2:153)
புனித ரமலான் போதிக்கும் பண்புகளில் மிகமுக்கியமான ஒன்று பொறுமை. ‘ஸப்ர்’ எனும் பொறுமை குணம் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று.

‘(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையை கடைப்பிடித்து தொழுது(இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால் நிச்சயமாக இது உள்ளச்ச முடையவர்களுக்கே அன்றி ( மற்றவர்களுக்கு) மிகப்பளுவாகவே இருக்கும்.(திருக்குர்ஆன் 2:45)

‘நம்பிக்கையாளர்களே (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 2:153)

மேற்கண்ட வான்மறை வசனங்கள் இரண்டும் பொறுமையின் அவசியத்தையும்,  அதன் பலன்களையும் விவரிக்கின்றன. நாம் கடைபிடிக்கும் இந்த நோன்பு உண்மையிலேயே நாம் பொறுமையாய் இருப்பது எப்படி என்ற பாத்தை நமக்கு நன்கு கற்றுத்தருகிறது.

இதனால் தான் இந்த மாதத்திற்கு ‘பொறுமையின் மாதம்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

“நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் போது உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்து விட்டால் ‘ நான் நோன்பாளி’ என கூறுங்கள்” என நபிகளார் சொல்லிக்கொடுத்தார்கள் என்றால் இந்த நோன்பு எவ்வளவு சிறப்பு மிக்கது என்று நாம் அறிய முடிகிறதல்லவா. எனவே நாம் இந்த பொறுமையின் மாதத்தில் வீண் சண்டை, சச்சரவுகளை விட்டு முற்றும் விலகியிருக்க வேண்டும். நம்மை மீறி நம்மிடம் யாராவது சண்டைக்கு வந்தாலும் பொறுமையுடன் அதை கையாள வேண்டும் என்றும் நபிகளார் நமக்கு கற்றுத்தருகிறார்கள்.

புனித நோன்பை வைத்து கொண்டு ஒருவர் பொறுமையிழந்து விட்டால் அதை விட அவருக்கு கைசேதம் வேறு என்னவாக இருக்கப்போகிறது?

அதனால் தான் நபிகள் நாயகம் இந்த பொறுமையை ‘ஈமான்’ எனும் இறை விசுவாசத்தின் ஒரு பகுதி என்று கூறினார்கள். எனவே இந்த பொறுமையை மீட்டெடுப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும.

அதுவும் இந்த பொறுமை என்பது இறையச்சமுள்ளவர்களின் குணங்களில் ஒன்று என்று பின்வரும் வான்மறை வசனம் வாசித்து காட்டுகிறது..

“கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையை கடைப்பிடித்தவர்களும் ஆகிய (இவர்கள் தான் நல்லோர்கள்). இவர்கள் தாம் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள் தான் இறையச்சமுடையவர்கள்” (திருக்குர்ஆன் 2:177)

நோன்பு நோற்பதின் மூலம் நாம் இறையச்சத்தை பெறுவதை போலவே நமது மனதை அடக்கி பொறுமை காப்பதன் மூலமும் இறையச்சத்தை நாம் பெறலாம் என்றறிய முடிகிறது. எனவே பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வாறே பொறுத்தவர் தம் மனதையும் ஆள்வார் என்பதும் உண்மை. இத்தனை சிறப்பு மிக்க பொறுமையை இனியேனும் நாம் நாள்தோறும் கடைப்பிடிப்போமாக.

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3
Tags:    

Similar News