ஆன்மிகம்
இஸ்லாம்

சஹர் செய்திடுவோம்

Published On 2020-04-30 04:48 GMT   |   Update On 2020-04-30 04:48 GMT
நபிகள் நாயகம் கூறினார்கள்: நீங்கள் சஹர் செய்யுங்கள் நிச்சயமாக சஹர் (உணவு) சாப்பிடுவதில் ‘பரகத்’ எனும் அபிவிருத்தி இருக்கிறது. (நூல்:புகாரி)
அதிகாலை ‘அல்லாஹு அக்பர்’ என் ‘பாங்கு’ (தொழுகைக்கான அழைப்பு) சொல்லப்படுவதற்கு முன் ‘சஹர்’ எனப்படும் காலை உணவை உண்டு முடித்திட வேண்டும். எதுவுமே சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் நோன்பு வைப்பது நல்லதல்ல.

நபிகள் நாயகம் கூறினார்கள்: நீங்கள் சஹர் செய்யுங்கள் நிச்சயமாக சஹர் (உணவு) சாப்பிடுவதில் ‘பரகத்’ எனும் அபிவிருத்தி இருக்கிறது. (நூல்:புகாரி)

நபிகள் நாயகம் கூறினார்கள்:சஹர் உணவு சாப்பிடுவது தான் நமக்கும்  வேதக்காரர்களுக்கும் மத்தியிலுள்ள நோன்புகளை வித்தியாசப்படுத்திச் காட்டக்கூடியதாகும். (நூல்:முஸ்லீம்)

ஆக, சஹர் உணவு என்பது மிக முக்கியமான ஒன்று. இறையருள் இறங்கும் நேரம் அது. அதை நாம் மிகச்சரியாக பயன்படுததிக்கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் எழுந்திருப்பதும், காலைக் கடன்களை முடித்து உணவு சாப்பிடுவதும கடினம் தான். என்றாலும் சஹர் செய்ய வேண்டும் என்று நபிகளார் கூறி விட்ட பிறகு சஹர் செய்வதை விட்டு விடுவது கூடாது. காரணம் சில சிரமங்களின் பின்னணியில் தான் பல இன்பங்கள் ஒளிந்திருக்கின்றன. எனவே பின்னாட்களில் சிரமப்படாமலிருப்பதற்காக இந்நாட்களில் கொஞ்சம் சிரமங்களை ஏற்றுக்கொள்வது தான் நமக்கு நல்லது.

இறையச்சமுள்ளவர்களை பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது அவர்கள் சஹர் நேரங்களில் எழுந்து அழுது, தொழுது அல்லாஹ்விடத்தில் மன்றாடி மன்னிப்பு போட்டு துஆ செய்வார்கள் என்று குறிப்பிடுகிறது. இதோ அதுபற்றிய திருக்குர்ஆன் வசனம்:

“பொறுமையாளர்களாகவும், உண்மையே பேசுகின்றவர்களாகவும்,(இறைவனுக்கு) முற்றிலும் வழிபட்டு நடப்பவர்களாகவும், தானம் செய்கின்றவர்களாகவும், “சஹர்” நேரங்களில் (வைகறைப்பொழுதில் அல்லாஹ்விடம்) மன்னிப்பு கோருகின்றவர்களாகவும் இருக்கின்றனர்(திருக்குர்ஆன் 3:17)

சஹர் நேரம் என்பது சாதாராணமான ஒரு நேரமல்ல. குறிப்பாக இறைவணக்கத்திற்கும் இறைவனோடு தொடர்பு கொள்வதற்கும் ஏற்றமான நேரமும் அது தான்.

குர்ஆன் ஓதுவது, திக்ர் செய்வது, தஹஜ்ஜத் தொழுகை தொழுவது, பாவ மன்னிப்பு கேட்டு பிரார்த்தனை செய்வது போன்ற நல்ல பல நற்காரியகங்களில் நம்மை நாம் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

சஹர் நேரம் என்பது சாப்பிடுவதற்கு மட்டும் உரிய நேரமல்ல. நல்ல பல வணக்கங்களை செய்வதற்கும் தான். எனவே பொன்னான இந்த நேரத்தை அதுவும் ரமலானில் உள்ள சஹர் நேரத்தை நிச்சயம் மிகச்சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சஹர் உணவை நாம் வகை வகையாக உண்ணுவதைப் போல நமது வணக்கங்களையும் அந்த சஹர் நேரத்தில் செய்ய வேண்டும்.

எனவே ரமலானில் வைகறைபொழுதுகளை பொறுப்புணர்வுகளுடன் பேணிப்பாது காத்து நடந்திடுவோமாக

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3



Tags:    

Similar News