ஆன்மிகம்
பிரார்த்தனை செய்திடுவோம்

பிரார்த்தனை செய்திடுவோம்

Published On 2020-04-28 10:19 IST   |   Update On 2020-04-28 10:19:00 IST
“உங்கள் இறைவன் கூறுகிறான் என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள் நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்” (திருக்குர்ஆன் 40:60).
துஆ எனும் பிரார்த்தனை மிகவும் அவசியமான ஒன்று. ‘ஒரு இறை விசுவாசியின் ஆயுதம் அவனது பிரார்த்தனை தான்’ என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனம் கூர்ந்து சிந்திக்கத்தக்க ஒன்று.

“உங்கள் இறைவன் கூறுகிறான் என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள் நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்” (திருக்குர்ஆன் 40:60).

“(நபியே) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி கேட்டால் (நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்)என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்’. ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்(திருக்குர்ஆன்2:186)

நாம் செய்யும் எந்தவொரு பிரார்த்தனையும் நிச்சயம் வீண் போவதில்லை. அது கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உறுதியோடு செய்யும் போது தான் அது இறைவனிடத்தில் முழு அங்கீகாரம் பெறும்.

“இறைவா  நீ நாடினால் எனக்கு மன்னிப்பு வழங்கு! நீ நாடினால் எனக்கு இரக்கம் காட்டு! நீ நாடினால் எனக்கு உணவளி! என்றெல்லாம் நீங்கள் துஆ செய்யாதீர்கள் கட்டாயம் நமது துஆ இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உறுதியான உள்ளத்துடன் துஆ செய்யுங்கள்”. (நூல்:புகாரி) என்று நபிகளார் கூறி இருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இன்னொரு முறை நபிகளார் இப்படி கூறினார்கள்: ‘அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியத்திற்குரியது இந்த துஆவைத்தவிர வேறெதுவும் இல்லை’. (நூல்:திர்மிதி)

இதனால் தான் ‘பிரார்த்தனை அது ஒரு வணக்கம்’ என்று நபிகளார் கூறிச்சென்றுள்ளார்கள். எனவே துஆவை நாம் அலட்சியமாக கருதக்கூடாது. உதட்டிலிருந்து வரும் வார்த்தைகளை விட உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளுக்கு இறைவனின் சிம்மாசனத்தை தட்டும் அபார சக்தி உண்டு.

‘சிரமமான காலங்களில் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டுமா? அப்படியானால் சிரமமற்ற காலங்களில் நீங்கள் பிரார்த்தனையை அதிகப்படுத்துங்கள்’ (நூல்:திர்மிதி) என்று நபிகள் நாயகம் கூறியதும கூர்ந்து கவனிக்கத்தக்கது.

நபிகளார் கூறினார்கள்: ‘மூவரின் துஆ கட்டாயம் மறுக்கப்படாது: நோன்பு நோற்றவர் நோன்பு திறக்கும் நேரத்தில் செய்யும் துஆ, நீதமாக தலைவரின் துஆ, பாதிக்கப்பட்டவரின் துஆ.(நூல்:திர்மிதி)

இறைவனோடு தொடர்பு கொள்வதற்கு நமது பிரார்த்தனைகள் தான் முக்கியப்பாதையாய் இருக்கின்றன. அதிலும் முதன்மை பெற்றவர்கள் நோன்பு நோற்ற நிலையில் பிராத்தனை செய்யும் இந்த நோன்பாளிகள் தான் என்பதையும் இந்த நபிமொழி நமக்கு நன்கு உணர்த்திக் காட்டுகிறது.

எனவே இந்த நோன்பு காலங்களில் ஆதிகமதிகம் நாம் துஆ  செய்து கொண்டேபிருப்போமாக.

மவுலகி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3

Similar News