ஆன்மிகம்
தினமும் ஓதுவோம் திருக்குர்ஆன்

தினமும் ஓதுவோம் திருக்குர்ஆன்

Published On 2020-04-27 11:01 IST   |   Update On 2020-04-27 11:01:00 IST
தினமும் நாம் குர்ஆனை ஓதுவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நபிமொழி நமக்கு உணர்த்திக்காட்டுகிறதல்லவா?. எனவே தினமும் குர்ஆன் ஓதுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
திருக்குர்ஆன் இறங்கிய மாதம் இது. எனவே தினமும் நாள் தவறாமல் குர்ஆனை நாம் கட்டாயம் ஓதி வரவேண்டும். இதர காலங்களில் நாம் ஓதும் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து பத்து நன்மைகள் என்றால் ரமலானில் ஒன்றுக்கு எழுபது நம்மைகள். அப்படியானால் திருக்குர்ஆன் முழுவதும் எத்தனை ஆயிரம் எழுத்துக்கள் உள்ளன. அதற்கு எத்தனை ஆயிரம் நன்மைகள் கிடைக்கும் என்பதை நாம் நிதானமாக யோசித்து பார்க்க வேண்டும்.

தண்ணீர் பட்டால் எப்படி இரும்பு துருவித்து விடுகிறதோ, அவ்வாறு தான் இந்த இதயமும் துரு விடித்து விடும் என்றார்கள் நபிகள் நாயகம். உடனே தேழர்கள் கேட்டார்கள் தூதரே அதை நீக்குவது எப்படி? அதிகமாக மரணத்தை நினைப்பதும், அதிகமாக குர்ஆன் ஓதுவதும் தான் அதற்கு ஒரே வழி என்று பதிலளித்தார் நபிகளார் அவர்கள்(நூல்: பைஹகி)

தினமும் நாம் குர்ஆனை ஓதுவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நபிமொழி நமக்கு உணர்த்திக்காட்டுகிறதல்லவா?. எனவே தினமும் குர்ஆன் ஓதுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் கூறினார்கள்: ’குர்ஆனை ஓதுங்கள் நிச்சயமாக அது தன்னை ஓதக்கூடியர்களுக்கு மறுமை நாளில் ஷஃபா அத் எனும் பரிந்துரை செய்யக்கூடியதாக வரும்’. (நூல்; முஸ்லீம்)

மறுமை நாள் என்பது ‘எனக்கு என்ன ஆகுமோ?’ என்று ஒவ்வொருவரும் யோசித்துக் கொண்டிருக்கும் போது உதவிக்கு யாரும் வரமாட்டார்ள்.  அந்த நெருக்கடியான நேரத்தில் சட்டென வந்து உதவி செய்யும் ஒன்று தான் இந்த குர்ஆன்?

நபிகள் நாயகம் கூறினார்கள்: குர்ஆனை மனப்பாடமாக ஒதுவது ஆயிரம் மடங்கு சிறந்தது. ஆனால் குர்ஆனை பார்த்து ஓதுவது இரண்டாயிரம் மடங்கை விட சிறந்தது.(நூல்: பைஹகி)

எனவே குர்ஆனை நாம் ஓத வேண்டும் அதுவும் பார்த்து ஓத வேண்டும். அது தான் சிறப்பிலும் சிறப்பு.

மேலும் நபிகள் நாயகம் கூறினார்கள்: ‘எவர் குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்கிறாரோஅவரது பெற்றோர்கள் நாளை மறுமையில் கிரீடம் அணிவிக்கப்படுவார்கள். அதன் ஒளி சூரீயனை விட மிகப்பிரகாசமாக இருக்கும்’(நூல்: அஹ்மது)

எனவே, குர்ஆன் ஓதுவது மட்டும் சிறப்பல்ல அதன் படி நாம் செயல்படவும் வேண்டும். அது தான் நாம் குர்ஆனுக்கு செய்யும் முதல் மரியாதை.

நபிகள் நாயகம் கூறினார்கள்: ‘குர்ஆனை கற்று அதை பிறருக்கும் எவர் கற்றுக் கொடுக்கிறாரோ அவர் தான் உங்களில் சிறந்தவர்’. (நூல்: புகாரி)

நிறைவாக நாம் ஓதி செயல்பட வழிவகுத்துத்தந்த குர்ஆனை நாம் மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே குர்ஆனுக்கு நாம் செய்யும் நிறைவு கடமையாகும். அதை இந்த ரமலானில் செய்வது தான் கூடுதல் சிறப்பு. வாருங்கள் குர்ஆனை ஓதலாம்.

மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3

Similar News