ஆன்மிகம்
இஸ்லாம்

செய் நன்றி மறவாமை

Published On 2020-03-06 03:40 GMT   |   Update On 2020-03-06 03:40 GMT
உன்னதமான நன்மைகளை மானசீகமாகக் கடைபிடித்து வாழ்ந்த குறைஷிப் பிரமுகர் தான் அபுல் புக்தரி. இஸ்லாத்தின் ஆரம்பம் முதலே நபிகளாரையோ முஸ்லிம்களையோ அவர் தொந்தரவு செய்ததில்லை.
பத்ருப் போர் முடிவடைந்த நேரம். நபிகளாருக்கும் தோழர்களுக்கும் அவசரமாக செய்து முடிக்க வேண்டிய பணிகள் நூற்றுக்கணக்கில் இருந்தன. இதற்கிடையே நபி (ஸல்) அவர்களிடம் ஒவ்வொருவராக வந்து தங்களுடைய போர் அனுபவங்களை விவரித்துக்கொண்டிருந்தனர்.

முஜத்தர் பின் ஸியாத் (ரலி) எனும் நபித்தோழரும் நபிகளாருக்கு முன்னால் வந்து நின்றார். போரில் கிடைத்த வெற்றி உள்ளுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், முகத்தில் கடும் துக்கத்தின் ரேகைகள் தெரிந்தன.

“அல்லாஹ்வின் தூதரே!” முஜத்தர் (ரலி) விசும்பலுடன் அழைத்தார். நபிகளார் திரும்பிப் பார்த்தார்கள். நபிகளாரைப் பார்த்ததும் விசும்பல் கண்ணீராக மாறத் தொடங்கியது. கூறத்தொடங்கினார்: “நடைபெற்ற போரில் அபுல் புக்தர் பின் ஹிஷாமை கொல்லக் கூடாது என்று தாங்கள் ஆணை பிறப்பித்திருந்தீர்கள். ஆனால் அவரை நான்தான் போரில் எதிர்கொண்டேன். போர்க்களத்தில் எனக்கு முன்னால் அவர் வாளுயர்த்தி வந்தபோதெல்லாம் இயன்றவரை அவரை நான் தவிர்த்தேன்”.

அப்போது அவர் கேட்டார்: “நீ ஏன் என்னோடு சண்டை செய்ய மறுக்கின்றாய்?”

“தங்களை போர்க்களத்தில் கண்டால் கொல்லக்கூடாது என்று எங்கள் நபி (ஸல்) ஆணை பிறப்பித்துள்ளார்கள்”.

“என்னுடன், எனது நண்பன் ஜினாதா பின் மலீஹாவும் உண்டு. அவருக்கும் இது பொருந்துமா?”

“உங்கள் நண்பரைக் குறித்து நபிகளார் எதுவும் கூறவில்லை. ஆகவே அவரை நாங்கள் நிச்சயம் பொருட்படுத்தமாட்டோம்”.

“அவ்வாறாயின் நாங்கள் இருவரும் சேர்ந்து உங்களுடன் போர் செய்வோம். ‘ஆபத்து வேளையில் நண்பரைக் கைவிட்டவன்’ என்று மக்கத்துப் பெண்கள் கூறும் இழி சொல்லை என்னால் கேட்க முடியாது”.

“இவ்வாறு கூறியவாறு அவர் என்னோடு நேருக்கு நேர் மோதுவதற்காகத் தயாராக நின்றார். அவரை எப்படியாவது கைது செய்து தங்களுக்கு முன்னர் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நான் கடுமையாக முயன்றேன் அல்லாஹ்வின் தூதரே! ஆயினும் அது பலிக்கவில்லை. எனது உயிரைக் காப்பதற்காக அவரை நான் கொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அல்லாஹ்வின்தூதரே!”

இத்தனையையும் கூறி முடிக்கும்போது முஜத்தர் (ரலி) அவர்களுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இந்த விஷயத்தில் தங்களை நான் குற்றம் சுமத்த மாட்டேன். அபுல் புக்தரிக்கு நாம் செய்ய வேண்டிய பெரும் நன்றிக்கடனை நினைத்துதான் அவ்வாறு ஆணை பிறப்பித்தேன்”.

யார் அந்த அபுல் புக்தரி? அல்லாஹ்வின் தூதரும் அன்புத் தோழர்களும் அபுல் புக்தரிக்கு அப்படி என்ன நன்றிக்கடன் ஆற்ற வேண்டியிருந்தது? தெரிந்துகொள்ள வேண்டாமா?

உன்னதமான நன்மைகளை மானசீகமாகக் கடைபிடித்து வாழ்ந்த குறைஷிப் பிரமுகர் தான் அபுல் புக்தரி. இஸ்லாத்தின் ஆரம்பம் முதலே நபிகளாரையோ முஸ்லிம்களையோ அவர் தொந்தரவு செய்ததில்லை.

நபி (ஸல்) அவர்களையும் அன்னாரது ரத்த பந்த உறவினர்களான பனூ ஹாஷிம், பனூ முத்தலிப் குடும்பத்தாரை அபூதாலில் எனும் பள்ளத்தாக்கில் குறைஷிகள் மூன்று வருடகாலம் ஊர் விலக்குச் செய்திருந்தனர். ஊர்விலக்கு செய்யப்பட்டவர்களுடன் பேசக்கூடாது; அவர்களுடன் சேர்ந்து இருக்கக் கூடாது; அவர்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடக்கூடாது; திருமண பந்தம் எதுவும் வைக்கக் கூடாது; அத்துடன் அவர்கள் மீது எக்காரணம் கொண்டும் கருணை காட்டக் கூடாது என்ற கட்டுப்பாட்டு விதிகளை எழுதி கஅபாவில் தொங்கவிட்டனர் குறைஷிகள்.

இந்தத் தடை மூலம் நபிகளாரும் குடும்பமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். ஊர்விலக்கு செய்யப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவடையும் தருவாயில் ஒருநாள் இரவு வேளையில் கதீஜா (ரலி) அவர்களுடைய உறவினரான ஹகீம் பின் ஹிஷாம் அவர்கள், உணவுப் பொதி ஏற்றிய ஓட்டகத்துடன் அங்கு வந்தார். காவலுக்கு நின்றிருந்த அபூஜஹ்ல் முடியாது என்று தடுத்தான். அபுல் புக்தரி அவர்கள் உடனடியாக அங்கு வருகை தந்தார்.

அபூஜஹ்லிடம் கோபத்துடன் கேட்டார்: “ஒருவர் தமது ரத்த பந்த உறவுகளுக்குக் கருணையின் அடிப்படையில் உதவ முன் வருவதையும் நீர் தடுக்கின்றீரா?”.

ஆனால் அபூஜஹ்லில் காதுகளில் எதுவும் விழவில்லை. கையில் கிடைத்த ஏதோ ஒரு பொருளை எடுத்து அபூஜஹ்லுடைய உடலில் ஓங்கி அடித்தார் அபுல் புக்தரி. இத்தனைக்கும் அபுல் புக்தரியைவிட அபூஜஹ்ல் வயதில் மூத்தவன். (அபுஜஹ்லுடைய மகன் இக்ரிமா (ரலி) அவர்கள் நபி களாரைவிட மூன்று வயது இளையவர் என்பதிலிருந்தே அபூஜஹ்லுடைய வயதை கணக்கிட்டுக்கொள்ளலாம்)

விடவில்லை அபுல் புக்தரி. ஊர்விலக்கு எனும் அந்த அந்த அநியாய அறிவிப்பை முடிவுக்குக் கொண்டு வந்தே தீரவேண்டும் என முடிவு செய்தார். அதற்கான நடவடிக்கையில் புத்திசாலித்தனமாகவும் துரித கதியிலும் ஈடுபட்டார். இறுதியில் அது முடிவுக்கு வந்தது. அது ஒரு பெரும்கதை. ஊர்விலக்கை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் முன்னணியில் நின்று நட வடிக்கை எடுத்த ஆறு நபர்களில் அபுல் புக்தரி அவர்கள் முக்கியப் பங்கு வகுத்தார்.

இவ்வளவு சீரிய நற்குணங்கள் கொண்ட அபுல் புக்தரி முழுமையான இணைவைப்பாளராகவே இருந்தார். இந்த நல்லவர், முஸ்லிம்களுடைய கரங்களால் கொல்லப்படக் கூடாது என்று நபிகளார் பெருவிருப்பம் கொண்டிருந்தார்கள்.

காலம் மாறியது. தேசமும் மாறியது. ஹிஜ்ரத் என்ற நாடு துறத்தலின் மூலம் முஸ்லிம்கள் மதீனா வந்தடைந்தனர். ஆயினும் அபுல் புக்தரி என்ற நல்ல மனிதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடத்திலும் முஸ்லிம்களிடத்திலும் எப்போதும் நினைவு கூரப்படும் நபராகவே திகழ்ந்தார். நன்றி மறத்தல் ஒரு முஸ்லிமின் பண்பல்லவே. பத்ருப் போரில் ‘அவரைக் கொல்லக் கூடாது’ என்ற உத்தரவின் மூலம் அந்த நன்றி மறவாமையை நபிகளார் நிறைவேற்றினார்கள். ஆம், அபுல் புக்தரியை எங்கு கண்டாலும் யாரும் கொல்லக் கூடாது என்பதுதான் அந்த உத்தரவு.

அபுல் புக்தரி குறித்த பெருமானாருடைய இந்த ஆணை, செய் நன்றி மறவாமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
Tags:    

Similar News