ஆன்மிகம்
இஸ்லாம்

‘ஸலாம்’ எனும் முகமனுக்கு பதில் கூறுவது

Published On 2019-12-31 03:43 GMT   |   Update On 2019-12-31 03:43 GMT
வாருங்கள் ஸலாம் கூறுவோம். அதற்கு அழகான பதில் கூறுவோம். சாந்தியை வையகம் முழுவதும் பரப்புவோம். சாந்தி, சமாதானத்துடன் சுமுகமாக வாழ்வோம்.
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 -க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறும்போது அருகில் இருப்பவர் ‘யர்ஹமுகல்லாஹ்’ என பதில் கூறுவது, ஸலாம் எனும் முகமனுக்கு பதில் கூறுவது குறித்த தகவல்களை காண்போம்.

தும்மல் குறித்து இஸ்லாமிய பார்வை வியப்பானது. தும்மல் என்பது இயற்கையான ஒன்று. காற்றைத்தவிர வேறு எந்த ஒரு வெளிப்பொருளும் மூக்கில் நுழைந்தால், மூக்கு அதை ஏற்காது. உடனே அது ஒரு எதிர் வினையை உருவாக்கும். அதுதான் தும்மல். உள்ளே நுழையும் பொருளை வெளியே தள்ள நடக்கும் முயற்சி அது.

இறைவன் ஏற்பாடு செய்த இந்த அருட்கொடையை நினைத்து, இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு தும்மல் வரும்போது ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப்புகழும் இறைவனுக்கே) என்று தும்மியவர் கூறிடவேண்டும் என இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.

அதுபோல, ஒருவர் தும்மியவுடன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு இஸ்லாமியரும் ‘யர்ஹமுகல்லாஹ்’ (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என மறுமொழி கூறுவது அவசியமாகும்.

இவ்வாறு கூறுவது உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்தாக பராஉபின் ஆஸிப் (ரலி) கூறியிருப்பதாவது:

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி கட்டளையிட்டார்கள். 1) நோயாளிகளை நலம் விசாரிப்பது, 2) பிரேதங்களைப் பின் தொடர்ந்து செல்வது, 3) தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறும்போது, அவருக்காக ‘யர்ஹமுகல்லாஹ்’ என்று மறுமொழி கூறுவது, 4) நலிந்தவருக்கு உதவுவது, 5) அநீதியிழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது, 6) மக்களிடையே ‘ஸலாம்’ எனும் சாந்தியைப் பரப்புவது, 7) சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது’. (நூல்: புகாரி)

தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறாதபோது அவருக்கு மறுமொழி கூறவேண்டிய அவசியமில்லை. இதுகுறித்த நபிமொழி வருமாறு:

‘நபி (ஸல்) அவர்களுக்கருகில் இருவர் தும்மினர். அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) மறுமொழி கூறினார்கள். மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லை. இது குறித்து அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் ‘இவர் தும்மியவுடன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று இறைவனைப் புகழ்ந்தார். அவர் அவ்வாறு புகழவில்லை. எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். அவருக்கு பகரவில்லை’ என்று விளக்கமளித்தார்கள்.’ (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

ஒருவர் மூன்று தடவைக்கு மேலே தும்மினால் அவருக்கு பதில் கூறவேண்டிய அவசியமில்லை. அவருக்கு ஜலதோஷம் வந்துள்ளது. அது நிவாரணம் அடைய அவருக்காக பிரார்த்திக்க வேண்டும்.

தும்மல் என்பது இறையருட்கொடை. அதிலே நன்மையும், பிரார்த்தனையும்தான் இடம்பிடிக்கிறது. அதை கெட்ட சகுனமாக பார்க்கக்கூடாது.

‘ஸலாமுக்கு பதில் கூறுவது’

‘ஸலாம்’ என்பதன் பொருள் ‘சாந்தி நிலவட்டும்’ என்பதாகும். ‘ஸலாம்’ என்பது இறை வனின் 99 திருப்பெயர்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இறைவன் படைப்பினங்களுக்கு இடையே சாந்தி அளித்து வருவதால் இப்பெயர் அவனுக்கே உரித்தாகி விட்டது.

இரண்டு இறைநம்பிக்கையாளர்கள் சந்திக்கும்போது ஒருவர் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ (உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்) என்று கூறி பேச்சை துவங்கிட வேண்டும். மற்றொருவர் ‘வ அலைக்கும் ஸலாம்’ (உங்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று அதையே பதிலாக, வாழ்த்தாக தெரிவிக்க வேண்டும்.

ஸலாம் எனும் முகமன் கூறுவது நபிவழி. அதற்கு பதில் வாழ்த்து கூறுவது கடமை. ‘ஒரு முஸ்லிம் தம் சகோதரருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று முகமனுக்குப் பதிலுரைப்பது ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

ஸலாம் எனும் முகமனுக்கு பதில் அளிப்பது உடல் சார்ந்த இறைநம்பிக்கையாக அமைந்துள்ளது.

ஸலாம் கூறுவது குறித்து திருக்குர்ஆன் (4:86) இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘உங்களுக்கு ஸலாம் கூறப்படும்பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள்’.

ஸலாம் குறித்த நபிமொழிகள் வருமாறு:-

“ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்றார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் கூறிவிட்டு ‘பத்து நன்மைகள்’ என்றார்கள். மற்றொருவர் வந்து ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்’ என்று ஸலாம் கூறினார். நபியவர்கள் அவருக்கும் பதில் கூறி, ‘இருபது நன்மைகள்’ என்றார்கள். பிறகு மூன்றாம் நபர் வந்து ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ’ (உங்களின் மீது சாந்தியும், இறைவனின் கருணையும், அவனின் அபிவிருத்திகளும் நிலவட்டும்) என்றார். அவருக்கும் நபி (ஸல்) பதில் கூறிவிட்டு ‘அவருக்கு முப்பது நன்மைகள்’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹூஸைன் (ரலி), நூல்: திர்மிதி, அபூதாவூத்).

சொர்க்கத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாழ்த்து மடல் தான் ‘ஸலாம்’ எனும் ஒரு அற்புதமான வார்த்தை. சொர்க்கம் முழுவதும் இந்த வாழ்த்து கோஷங்கள் திரும்பிய இடங்களிலெல்லாம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும். அதிலும் குறிப்பாக இறைவனே சொர்க்கவாசிகளிடம் காட்சி தந்து, அவனே அவர்களுக்கு ஸலாம் கூறுவான். இது எப்படிப்பட்ட பாக்கியம். இதுகுறித்து இறைவன் கூறுவதை கேளுங்கள்.

‘ஸலாமுன்’ என்று நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு’. (திருக்குர்ஆன் 36:58)

‘அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் ‘ஸலாமுன்’ (உங்களுக்குச் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக) என்பதுவே (அவர்களுக்குக் கிடைக்கும்) சோபனமாகும்’. (திருக்குர்ஆன் 33:44)

இத்தகைய அற்புதமான வாழ்த்துக்களை எப்போது வேண்டுமானாலும் கூறலாம். எப்படி வேண்டுமானாலும் கூறலாம். ஸலாம் என்று கூறலாம். ஸலாமுன் அலைக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் என்றும் கூறலாம். நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதைத்தான் அதிகமான சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்கள்.

இந்த வாழ்த்து எல்லாச்சூழ்நிலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றமானது. துக்கமாக இருப்பவர்களிடமும் கூறலாம். மகிழ்ச்சியாக இருப்பவர்களிடமும் கூறலாம். காலை, மாலை, இரவு எந்த நேரங்களிலும் மொழியலாம். முஸ்லிம் அல்லாதோர் நமக்கு ஸலாம் கூறினால் நாமும் அவர்களுக்கு பதில் கூறவேண்டும். இதுதான் நபி (ஸல்) காட்டிய வழி. இதுதான் இறைநம்பிக்கையின் வழிமுறை. எந்த ஒரு வீட்டில் நுழைவதற்கும் அனுமதி பெறும் வார்த்தையாகவும் ‘ஸலாம்’ திகழ்கிறது.

‘சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறுகுழுவினர் பெருங்குழுவினருக்கும் முதலில் ஸலாம் கூறட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

‘வாகனத்தில் செல்பவர், நடந்து செல்பவருக்கு முதலில் ஸலாம் சொல்லட்டும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

‘ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘பசித்தவருக்கு உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும், அறிமுகம் இல்லாதவருக்கும் ஸலாம் கூறுவதாகும்’ என்று பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

இப்படிப்பட்ட ஸலாமை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும். வெப்பமயமான பூமியை சாந்திமயமாக நிரப்ப வேண்டும். இவ்வாறு பரப்புவது இறைநம்பிக்கையின் ஒரு சிறு பகுதியாக அமைந்துள்ளது.

‘நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும் நீங்கள் ஒருவருக்கொருவர் நேசிக்காத வரை இறைநம்பிக்கையாளராக ஆகமுடியாது. உங்களுக்கு நான் ஒன்றை அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் நீங்கள் ஒருவருக்கொருவர் பிரியமானவர்களாக மாறிவிடுவீர்கள். அதுதான் நீங்கள் உங்களுக்கிடையே ஸலாமை பரப்பிட வேண்டும்’ என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

வாருங்கள் ஸலாம் கூறுவோம். அதற்கு அழகான பதில் கூறுவோம். சாந்தியை வையகம் முழுவதும் பரப்புவோம். சாந்தி, சமாதானத்துடன் சுமுகமாக வாழ்வோம்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
Tags:    

Similar News