ஆன்மிகம்
இஸ்லாம்

வினையாகும் விளையாட்டு

Published On 2019-11-16 03:56 GMT   |   Update On 2019-11-16 03:56 GMT
உமர் (ரலி) கூறினார்கள்: உங்கள் குழந்தைகளுக்கு நீச்சல், ஈட்டி எறிதல் போன்றவற்றை கற்றுக்கொடுங்கள். குதிரை மீது குதித்து ஏறுவதற்கு அவர்கள் பயிற்சி எடுக்கட்டும்.
மனிதனின் மனமும் குணமும் காலச்சூழ் நிலைக்கு ஏற்ப மாறுபடும். சிலபோது மிதமிஞ்சிய போக்கையும் இன்னும் சிலபோது மந்த நிலையையும் மேற்கொள்ளும். இதனை அன்றாட நடைமுறையில் தினமும் காணலாம்.

சமூகத்தில் மிகவும் முக்கியமான விவகாரங்கள் பேசுபொருளாக இருக்கும் சமயத்தில் அதிலிருந்து மக்களை திசைத் திருப்ப, அதிலும் குறிப்பாக இளைய சமூகத்தை திசைதிருப்புவை சமூக வலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளே.

‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழிக்கு ஏற்ப, இளைஞர்களின் கைகளில் இருக்கும் விளையாட்டுச் செயலிகள் நஞ்சாக மாறிக்கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை.

உலகத்தையே உள்ளங்கையில் கொண்டு வரும் அளவுக்கு தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. கற்பனைக்கு எட்டாததை எல்லாம் கண் முன்னே கொண்டு வந்து நிகழ்த்திக்காட்டத் தொடங்கிவிட்டனர். ஆகவே சாதாரண விளையாட்டுதானே என்று விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் இவற்றை விளையாடும் இளைஞர்களை கொஞ்சம் கருத்தூன்றி கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இணைய விளையாட்டுகள்

இன்று பகிரங்கமாக நடக்கும் கொலைகளைவிட ரகசியமாக நடக்கும் கொலைகளே அதிகம். கத்தி, துப்பாக்கி, அரிவாள் போன்ற எந்தவொரு ஆயுதமும் இன்றி தங்களிடம் இருக்கும் கைப்பேசிகள் மூலமாகவே பல இளைஞர்கள் கொலை செய்யப்படுகின்றார்கள்.

கைப்பேசி வழியாகத் திருட முடியும், கொள்ளையடிக்க முடியும் என்று ஒருகாலத்தில் சொன்னால், சொன்னவரைப் பார்த்து சிரிப்பார்கள். ஆனால் அவை எல்லாம் இப்போது உண்மையாகி வருகின்றது. அப்படித்தான் கைப்பேசி மூலமாக நடைபெறும் கொலைகளும்.

என்னதான் ஜல்லிக்கட்டு, சிலம்பம், கபடி, ஓட்டப்பந்தயம் போன்ற பாரம்பரியம் மிக்க வீரத்தை நிலைநாட்டும் விளையாட்டுகள் இம்மண்ணில் இருந்தாலும் மேலைநாட்டுக்காரன் உருவாக்கிய விரல் வித்தை விளையாட்டுகளே மனிதனை மயக்குகிறது.

வினையாகும் விளையாட்டுகள்

சாதாரண மனிதனின் மூளையை சலவை செய்து அதற்கு அடிமையாக்கி உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு இந்த இணைய விளையாட்டுகள் செல்கின்றன. தற்போது இணையதளங்களில் வந்து கொண்டிருக்கின்ற விளையாட்டுக்களை பதிவிறக்கம் செய்து அவற்றில் உள்நுழைந்தாலே நம்முடைய கைப்பேசியில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் விவரங்களையும் உடனடியாக அவர்கள் எடுத்துக்கொள்கின்றார்கள். பதிவிறக்கம் செய்த விளையாட்டுக்களை நாம் விளையாடுமுன்னரே அவர்கள் நம்மை வைத்துவிளையாடத் தொடங்கிவிடுகின்றனர்.

கைப்பேசியில் இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை திருடி அதை இணைய தளங்களில் விட்டுவிடவா என்று நம்மை மிரட்டுவார்கள். வேண்டாமென்றால் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுவார்கள். இந்த மிரட்டல்களுக்கு சிலர் அடிபணிந்து விடுவார்கள். வசதியற்றவர்கள் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து வாழ்வை முடித்துக்கொள்கின்றார்கள்.

தடுக்கும் முறை

இவ்வாறு ஆபத்தாக மாறும் இணையதள விளையாட்டுகளை நம்மால் தடுத்துநிறுத்த முடியாது. ஆயினும் அவற்றில் இருந்து நம்மால் தப்பித்துக்கொள்ள முடியும். உன்னிப்பான கண்காணிப்புகள் மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இணையதள விளையாட்டுகளில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும். ஏனெனில் ஒரே இடத்தில் உட்கார்ந்து விளையாடுவதால் எப்பயனும் ஏற்படப்போவதில்லை. இதற்கு மாறாக ஓடியாடி விளையாடும் விளையாட்டுகளை விளையாடுமாறு தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் தூண்டவேண்டும். அவை உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்ல பயிற்சியைத் தருகின்றன. மூளையை சுறுசுறுப்பாக்குகின்றன, உடலும் ஆரோக்கியம் பெறுகிறது.

ஓடியாடும் இதுபோன்ற விளையாட்டுக்களையே இஸ்லாமும் வலியுறுத்துகிறது. நபித்தோழர்கள் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டவர்களை நபி (ஸல்) அவர்களே உற்சாகப்படுத்தியும் உள்ளார்கள். நபித்தோழர்களிலேயே அதிக வேகத்தில் ஓடக்கூடியவராக அலி (ரலி) திகழ்ந்தார்கள்.

தோழர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காகவும், உற்சாகத்திற்காகவும் மனைவியை மகிழ்விப்பதற்காகவும் நபி (ஸல்) அவர்களேகூட அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

நபி (ஸல்) அருளினார்கள்: அம்பெய்வதை விட்டுவிடாதீர்கள். நிச்சயமாக அது மிகச் சிறந்த விளையாட்டு. (தபரானி, பஸ்ஸார்)

மற்றொரு முறை நபிகளார் கூறினார்கள்: அம்பெய்தல், குதிரையேற்றம் போன்றவற்றில் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். (முஸ்லிம்)

உமர் (ரலி) கூறினார்கள்: உங்கள் குழந்தைகளுக்கு நீச்சல், ஈட்டி எறிதல் போன்றவற்றை கற்றுக்கொடுங்கள். குதிரை மீது குதித்து ஏறுவதற்கு அவர்கள் பயிற்சி எடுக்கட்டும்.

இதுபோன்ற பயனுள்ள விளையாட்டுகள் எத்தனையோ இருக்க நாம் ஏன் இணையதள விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும்? உடலுக்கு திடகாத்திரத்தையும் மனதிற்கு உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய இந்த விளையாட்டுகளை நாம் ஏன் அலட்சியம் செய்யவேண்டும்?

எனவே, திரையில் விளையாடும் விளையாட்டுக்களை மறந்துவிட்டு, தரையில் விளையாடும் விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்!

முஹம்மத் பாசித்,

அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி.
Tags:    

Similar News