ஆன்மிகம்
புனிதப்பயணம் மேற்கொள்வது

புனிதப்பயணம் மேற்கொள்வது

Published On 2019-10-29 04:45 GMT   |   Update On 2019-10-29 04:45 GMT
‘ஹஜ் செய்வது முந்திய பாவங்கள் அனைத்தையும் அது அழித்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘புனிதா உம்ரா, ஹஜ் பயணம் மேற்கொள்வது’ குறித்த தகவல்களை காண்போம்.

புனித உம்ரா பயணமும், புனித ஹஜ் பயணமும் இறைநம்பிக்கை சார்ந்த உடல் ரீதியான பயணம் ஆகும். இந்த பயணங்களில் உடல்சார்ந்த இறைநம்பிக்கை அனைத்து வழிபாடுகளிலும் பிரகாசிக்கிறது.

இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் மூன்று விதமாக அமைந்துள்ளது. 1) உடல் சார்ந்தது, 2) பொருள் சார்ந்தது, 3) உடலும், பொருளும் சார்ந்தது.

உடல் சார்ந்த இறைவணக்கம் மற்றும் இறைநம்பிக்கையாக தொழுகை அமைந்துள்ளது. பொருள் சார்ந்த இறைவணக்கமும், இறைநம்பிக்கையும், ‘ஸதகா’ எனும் தர்மநிதியும், ‘ஸகாத்’ எனும் கடமையான ஏழைவரியும் ஆகும். மேலும், ‘ஸதகத்துல் பித்ர்’ எனும் நோன்புப் பெருநாள் தர்மமும், அழகிய கடனும், குடும்பத்தினருக்கு செய்யப்படும் செலவும், தமது சொத்துக்களை இறைவனுக்காக ‘வக்பு’ எனும் நிலையான தர்மமாக அர்ப்பணிப்பதும், கல்வி நிதியுதவியும், மருத்துவ நிதியுதவியும் பொருள் சார்ந்த இறைவணக்கம் ஆகும்.

உடலும், பொருளும் சார்ந்த இறைவணக்கமும், இறைநம்பிக்கையும் யாதெனில் புனித உம்ரா பயணமும், புனித ஹஜ் பயணமும் ஆகும். இது குறித்து இறைவன் தரும் விளக்கத்தை இறைமறையாம் திருக்குர்ஆனில் பார்ப்போம்:

‘இன்னும் இறைவனுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது அதன் பால் சென்று வர சக்தி பெற்றவர் மீது கடமையாகும்’. (திருக்குர்ஆன் 3:97)

புனித மக்கா சென்று இஸ்லாம் கூறும் சில வணக்க வழிபாடுகள் செய்வதற்கு ‘உம்ரா’ என்றும், ‘ஹஜ்’ என்றும் கூறப்படுகிறது. உடல் பலமும், பொருள் வளமும் தன்னிறைவு பெற்ற இஸ்லாமியர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு தடவையாவது ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும். உம்ராவை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் நிறைவேற்றலாம்.

‘ஹஜ்ஜையும், உம்ராவையும் இறைவனுக்காக சம்பூரணமாக நிறைவேற்றுங்கள்’ என்று திருக்குர்ஆன் (2:196) குறிப்பிடுகிறது.

‘உம்ரா’

‘உம்ரா’ என்றால் ‘தரிசனம் செய்வது’ என்று பொருள். புனித கஅபாவை தரிசனம் செய்வதற்கு உம்ரா என்று கூறப்படும். இந்த தரிசனம் ஆண்டு முழுவதும் செய்யலாம். இந்த தரிசனத்திற்கு குறிப்பிட்ட மாதங்கள் என்பதெ
ுச் சென்று குறிப்பிட்ட சில வணக்கங்களை நிறைவேற்றுவது ‘ஹஜ் பயணம்’ என்று சொல்லப்படும்.

ஆண்டு முழுவதும் நினைத்த போதெல்லாம் ஹஜ் செய்ய முடியாது. அதற்கென்று குறிப்பிட்ட சில மாதங்கள் உண்டு. அந்த மாதங்களில்தான் ஹஜ் செய்ய முடியும். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிட்ட மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் புரிவதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை இறைவன் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள். திரட்டிக்கொள்ள வேண்டியவற்றில் இறையச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே, என்னை அஞ்சுங்கள்’. (திருக்குர்ஆன் 2:197)

அது என்ன மாதங்கள்? என்ற விவரம் இந்த நபிமொழியில் வருகிறது.

‘ஹஜ்ஜின் மாதங்கள் ஷவ்வால் மாதம், துல்கஅதா மாதம், துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள் என இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள்’. (நூல்: புகாரி). இவை அரபி மாதங்களில் 10 மற்றும் 11, 12-வது மாதங்களாகும்.

ஹஜ் கடமையை நிறைவேற்ற உடல் வலிமையும், உடல் ஆரோக்கியமும் அவசியம் தேவை. மேலும், தமது கடனை நிறைவேற்றி விட்டு, 70 நாட்கள் குடும்பத்தினருக்குத் தேவையான நிதி ஆதாரத்தை வைத்து விட்டு, தமது உணவிற்கும், வாகனத்திற்கும், பயணச் செலவிற்கும் தேவையான நிதியைக் கொண்டு ஹஜ் செய்ய வேண்டும்.

ஹஜ் காலத்தில் ஹஜ் செய்பவர்கள் முதலில் உம்ராவை நிறைவேற்றுவார்கள். பிறகு ‘இஹ்ராம்’ எனும் வெள்ளாடைகளை களைந்துவிடுவார்கள். பிறகு துல்ஹஜ் 7-ம் நாள் ஹஜ்ஜுக்கென்று மக்காவிலிருந்து தனியாக ‘இஹ்ராம்’ எனும் வெள்ளாடைகளை கட்ட வேண்டும். துல்ஹஜ் 8-ம் நாள் காலையில் அதிகாலை தொழுகைக்குப்பின் ‘மினா’விற்குச் சென்று அன்றைய நாளின் தொழுகைகளை தொழுது விட்டு, அன்று இரவு அங்கே தங்கிட வேண்டும். துல்ஹஜ் 9-ம் நாள் காலையில் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றிட வேண்டும். சூரியன் உதயமான பிறகு அங்கிருந்து ‘அரபா’ மைதானத்திற்குச் சென்று கூடாரங்களில் தங்கவேண்டும் அரபாவில் தங்குவது கட்டாயம். அது இல்லாமல் ஹஜ் நிறைவேறாது. துல்ஹஜ் 9-ம் நாள் மாலை சூரியன் மறைந்தவுடன் ‘முஸ்தலிபா’ எனும் இடம் நோக்கி நடந்து சென்று, அன்றைய சூரிய அஸ்தமனத் தொழுகையையும், இரவு நேரத் தொழுகையையும் சேர்த்து தொழ வேண்டும். பிறகு அங்கேயே இரவு தங்கிட வேண்டும். துல்ஹஜ் 10-ம் நாள் அதிகாலை சூரியன் உதயமாகும் முன்பாக திரும்பவும் ‘மினா’ எனும் இடத்திற்கு வந்து, ‘ஜம்ரதுல்அகபா’ எனும் பெரிய சாத்தானின் தூணை நோக்கி ஏழு சிறிய கற்களை எறிய வேண்டும்.

பிறகு ‘உள்ஹிய்யா’ எனும் குர்பானியை நிறைவேற்ற வேண்டும். பிறகு தலைமுடிகளை முழுவதும் களைய வேண்டும். பிறகு மினாவிலிருந்து மக்காவுக்கு வந்து, புனித கஅபாவை 7 தடவை வலம் வரவேண்டும். இந்த வலம் வருதல் ஹஜ்ஜின் கடமைகளில் இதுவும் ஒன்று.

பிறகு ஸபா, மர்வா ஆகிய சிறு குன்றுகளுக்குஇடையே ஏழு தடவை விரைவாக நடக்க வேண்டும். இது முடிந்த பிறகு இஹ்ராமுடைய ஆடையை களைந்துவிட வேண்டும். அன்றைய இரவில் மினா சென்று அங்கே தங்கிட வேண்டும். துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களும் மினாவில் தங்கி சிறிய சைத்தான், நடு சைத்தான், பெரிய சைத்தான் ஆகிய மூன்று சைத்தான்களின் தூண்களில் ஒரு சைத்தானுக்கு 7 கற்கள் வீதம் மூன்றுக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 21 கற்கள் எறிய வேண்டும். இவ்வாறாக மூன்று நாட்கள் 63 கற்கள் எறிய வேண்டும். இதுவரைக்கும் தான் ஹஜ்ஜின் கிரியைகள். இத்துடன் ஹஜ் நிறைவு பெற்றுவிடும்

பிறகு மக்காவிலிருந்து தாயகம் திரும்ப நாடினால் இறுதியாக ‘தவாபுல்விதா’ புனித கஅபாவுக்கு பிரியாவிடை கொடுக்கும் முகமாக ஏழு தடவை கஅபாவை வலம் வரவேண்டும். மேற்கூறப்பட்ட ஹஜ்ஜின் கிரியைகளில் அதிக வேலை உடலுக்குத்தான், உடலுறுப்புகளுக்குத்தான். இந்த உடலுழைப்பிற்கு இறைவன் கொடுக்கும் சன்மானம் அந்த உடலை நரகம் தீண்டாது; அந்த உறுப்புகள் பாவ அழுக்குகளை சுமக்காது. ஹாஜிகள் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புகிறார்கள்.

இதுகுறித்த நபிமொழிகள் வருமாறு:

‘பாவச்செயல் கலந்திடாத ஹஜ்ஜின் கூலி சுவனம் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)

‘ஹஜ் செய்வது முந்திய பாவங்கள் அனைத்தையும் அது அழித்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)

‘ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் இறைவனின் தூதுக்குழுவினர் ஆவர். இறைவனிடம் அவர்கள் பிரார்த்தித்தால் அதை அவன் ஏற்றுக்கொள்கிறான்; இறைவனிடம் அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அவன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ, இப்னுமாஜா)

இத்தகைய சிறப்புகளை தன்னுள் புதையலாக புதைந்துள்ள சிறப்பான ஒரு செயல்தான் புனித ஹஜ். இந்த ஹஜ் வாழ்நாளில் ஒரே தடவை செய்தால் போதும். நபி (ஸல்) அவர்களும் தமது வாழ்நாளில் ஒரே ஒரு ஹஜ் மட்டும் செய்து, உலக முஸ்லிம்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்துள்ளார்கள்.
Tags:    

Similar News