ஆன்மிகம்
பாவங்களின் பரிகாரம்-தான தர்மங்கள்

பாவங்களின் பரிகாரம்-தான தர்மங்கள்

Published On 2019-10-18 03:09 GMT   |   Update On 2019-10-18 03:09 GMT
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்காகவே தான, தர்மங்கள் என்ற இரண்டு நிலைகளை இஸ்லாம் வலியுறுத்திச் சொல்கிறது.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்காகவே தான, தர்மங்கள் என்ற இரண்டு நிலைகளை இஸ்லாம் வலியுறுத்திச் சொல்கிறது. ஏழை-பணக்காரன் என்பது முதல் வாழ்க்கையின் பல்வேறு தரப்பிலும் மனிதர்களிடம் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அந்த வேறுபாடுகளை களைவதற்கு, தான-தர்மங்கள் என்ற இரண்டையும் ‘ஜகாத்’, ‘ஸதகா’ என்ற சொற்களின் மூலம் அடையாளப்படுத்துகிறது இஸ்லாம்.

ஒருவன் தன் வாழ்வில் சம்பாதிக்கும் செல்வங்களில் தன் தேவைக்குப்போக மீதி இருக்கும் தொகையில் 2½ சதவீதம் பணத்தை தானமாக கொடுத்து விட வேண்டும். ‘ஜகாத்’ என்ற இந்த தானத்தை ஒவ்வொரு இஸ்லாமியர்களும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்.

செல்வங்கள் என்று சொல்லும் போது பணம், நகைகள், அசையா, அசையும் சொத்துக்கள் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒன்றாக கருதப்படும். உதாரணமாக, ஒருவரிடம் ஒரு ஆண்டில் 80 கிராம் வெள்ளி அல்லது அதற்கு இணையான பணம், இதில் எது மிஞ்சுகிறதோ அப்போது அவர் மீது ‘ஜகாத்’ கடமையாகி விடும்.

‘ஜகாத்’ என்ற தானத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, அதனை யாருக்கு கொடுக்க வேண்டும்?, எப்படி கொடுக்க வேண்டும், என்பதை அல்லாஹ் திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளான்.

‘(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின்பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (திருக்குர்ஆன் 9:60)

இவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு கொடுக்கப்படுவது ‘ஸதகா’ என்ற உபரி தர்மத்தைச் சாரும். ‘ஜகாத்’ கட்டாய கடமை, ‘ஸதகா’ நினைத்தால் செய்யக்கூடிய தர்மம். இந்த இரண்டிற்கும் வரையறுக்கப்பட்ட நன்மைகளும் வெவ்வேறானது.

தர்மத்தைப் பற்றி குறிப்பிடும் போது திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“(நபியே! பொருள்களில்) ‘எதைச்செலவு செய்வது?, (யாருக்குக் கொடுப்பது?)’ என்று உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: (நன்மையைக் கருதி) ‘நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதனைத்) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குக் கொடுங்கள். இன்னும், நீங்கள் (வேறு) என்ன நன்மையைச் செய்தபோதிலும் அதனையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான்”. (திருக்குர்ஆன் 2:215)

‘ஜகாத்’ என்ற தானத்தை சமுதாயத்திற்காக செலவிடுங்கள், என்று சொல்லி விட்டு, ‘ஸதகா’ என்ற தர்மத்தை சொந்தங்களுக்காக செல விடுங்கள் என்கிறது திருக்குர்ஆன். அடுத்துச் சொல்லும் போது, இதையும் தாண்டி நன்மைகளை நாடி நல்ல செயல்களில் ஈடுபடும் போது அவற்றை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான் அதற்குரிய நன்மைகளைத் தனியே தருவதாகவும் சொல்கிறான்.

அதுபோல சிரமத்தில் இருப்பவர்களுக்கு உதவும்படியும், அவ்வாறு உதவி செய்வது அல்லாஹ்வுக்கே கடன்கொடுப்பது போன்றது என்றும் திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.

‘சிரமத்தில் இருப்பவர்களுக்கு தர்மம் கொடுப்பதன் மூலம் அழகான முறையில் அல்லாஹ்விற்கு கடன் கொடுப்பவர் யார்? அதை அவன் அவர்களுக்கு பன் மடங்கு அதிகரிக்கும்படி செய்வான்’. (திருக்குர்ஆன் 2:245).

தர்மமாக எதைக்கொடுக்க வேண்டும் என்று சொல்லும் போது, “உங்களிலுள்ள நல்லவற்றையே தர்மமாக செலவு செய்யுங்கள். அவற்றில் கெட்டவற்றை கொடுக்க விரும்பாதீர்கள். ஆகவே நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாக கொடுக்காதீர்கள்” (திருக்குர்ஆன் 2:267) என்று சொல்லி நல்ல பொருள் களையே தர்மம் செய்ய வேண்டும் என்று கட்டளைப் பிறப்பிக்கின்றான்.

மேலும், தர்மம் செய்பவர்களை வறுமை நெருங்காது என்றும் அருள்மறையிலே அல்லாஹ் சொல்கின்றான்.

“(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை சைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தர்மங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்”. (திருக்குர்ஆன் 2:268)

அதுபோல தர்மம் எப்படி செய்யவேண்டும் என்றும் இறைவன் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

“தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 2:271)

இப்படி எல்லா வகையிலும் சிறப்புற்ற இந்த தர்மங்களை மக்கள் செய்யும் போது அவர் களுக்கு கைமாறாக அல்லாஹ் எதனை வழங்குகின்றான் என்று திருக்குர்ஆன் இவ்வாறு சொல்கிறது:

“அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணி களைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்”. (திருக்குர்ஆன் 2:261)

அல்லாஹ் வழங்கும் இந்த வாக்குறுதி உண்மையானது. எனவே ஜகாத் என்ற தானத்தை நிறைவேற்றும் நாம், ஸதகா என்ற தர்மங்களை நிறைவேற்றவும் அதிக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் நம் உற்றார், உறவினர், சுற்றத்தார், ஏழைகளின் மனங்களை குளிர்விப்பதுடன், மறுமையில் அதிகமான நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அது உறுதுணையாக நிற்கின்றது. அது மட்டுமல்லாமல் நம் பாவங்களுக்கும் பரிகாரமாக அமைகின்றது.

மு.முகமது யூசுப், உடன்குடி.
Tags:    

Similar News