ஆன்மிகம்
உறவோடு உறவாடு, சமூக உறவை பசுமையாக்கு

உறவோடு உறவாடு, சமூக உறவை பசுமையாக்கு

Published On 2019-09-24 04:06 GMT   |   Update On 2019-09-24 04:06 GMT
பிரிந்து போன உள்ளங்கள், தொலைந்து போன உறவுகள், எதிரும் புதிருமாக உள்ள சமூகங்கள் ஒன்றிணைந்து, புதியதோர் வரலாற்றை படைக்க ஆயத்தமாக வேண்டும்.
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான உறவோடு உறவாடு, சமூக உறவை பசுமையாக்கு என்பது குறித்த தகவல்களை காண்போம்.

சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய லட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் அவசியம். சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை உருவாக்கிட வேண்டும்.

குடும்ப உறவு என்று வரும் போது அதில் பலவிதமான உறவுகள் உறவாடுகின்றன. அதில் ரத்த உறவு, சம்பந்த உறவு, சமூக உறவு, நெருங்கிய உறவு, தூரத்து உறவு, நட்புறவு, வெளியுறவு போன்றவைகள் ஐக்கியமாகின்றன.

இவற்றில் ரத்த உறவு மட்டும் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. நமக்கான ரத்த உறவை இறைவன் தேர்வு செய்கின்றான். இது குறித்து இறைவனின் கூற்றை பார்ப்போம்.

‘அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான். அவனுக்கு ரத்த சம்பந்தமான உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 25:54)

உறவு என்பது இறைநம்பிக்கையின் ஒரு கிளை. மற்ற உறவுகளை நாம் மாற்றிவிடலாம். மற்ற உறவுகளை உறவில் இருந்து கழற்றிவிடலாம். ஆனால், ரத்த உறவுகளை நாம் மாற்ற முடியாது. அதன் பந்தத்தை நாம் அறுத்துவிடவும் முடியாது.

இந்த உறவைப் பேணி வாழ்வது வெறும் கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்காகவோ, சமூகக் கட்டமைப்பிற்காகவோ மட்டும் அல்ல. அது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாக இருப்பதால், உறவைப் பேணி வாழ்வது இஸ்லாத்தில் அவசியமாக உள்ளது.

‘யார் இறைவனையும், மறுமை நாளையும் நம்பிக்கொள்கிறாரோ, அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி).

‘உறவு என்பது இறையருளின் ஒரு கிளை. எனவே அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக்கொள்ளும் நபரை நானும் முறித்துக் கொள்வேன்’ என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி).

இது குறித்த நபிமொழி வருமாறு:

‘இறைவன் படைப்பினங்களை படைத்து முடித்த போது, உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) ‘உறவுகளைத் துண்டிப்பதில்இருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்’ என்று கூறி மன்றாடியது.

‘ஆம், உன்னை (உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்திஅளிக்கவில்லையா?’ என்று இறைவன் கேட்டான்.

அதற்கு உறவு ‘ஆம், திருப்தியே என் இறைவா’ என்று கூறியது.

இறைவன் ‘இது உனக்காக நடக்கும்’ என்று சொன்னான்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் விரும்பினால், ‘(நயவஞ்சகர்களே) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடவும் முனை கிறீர்களா?’ எனும் (திருக்குர்ஆன் 47:22-வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

‘எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த இறைவனை அஞ்சுங்கள். மேலும் (உங்கள்) ரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்), நிச்சயமாக இறைவன் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 4:1)

‘உறவு முறை அறிவோம்’

உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு முன்பு யார் யார் எந்த உறவுமுறை என்பதை நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

‘தமது வம்ச வழிகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் உங்கள் சொந்த பந்தங்களோடு சேர்ந்து வாழ ஏதுவாக இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அலா பின் காரிஜா (ரலி), தப்ரானீ)

உறவுமுறை என்பது இருவரும் பரஸ்பரம் நல்லமுறையில் நடந்து கொள்வது என்பதல்ல. ஒருவர் தவறாக நடந்தாலும், உறவை முறித்தாலும் அவரையும் மற்றவர் அரவணைத்துச் செல்வது தான் உண்மையான உறவுமுறைக்கு சிறந்த முன்னுதாரணமாகும்.

‘பதிலுக்குப் பதில் உறவாடுகிறவர் உண்மையில் உறவைப் பேணுகிறவர் அல்லர் ; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), புகாரி)

‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ‘இறைவனின் தூதரே, எனக்கு உறவினர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடன் நான் ஒட்டி உறவாடுகிறேன். ஆனால், அவர்கள் எனது உறவை முறிக்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு தீங்கு விளைவிக்கின்றனர். (என்னைப் புண்படுத்தும் போது) அவர்களை நான் சகித்துக் கொள்கிறேன். ஆனாலும், அவர்கள் என்னிடம் அறியாமையோடு நடந்து கொள்கின்றனர்’ என்றார்.

நீர் சொன்னதைப் போன்று நீர் நடந்திருந்தால், அவர்களது வாயில் நீர் சுடுசாம்பலைப் போட்டவரைப் போன்றுதான். இதேநிலையில் நீர் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக உம்முடன் இருந்து கொண்டேயிருப்பார்’ என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்).

‘தம் வாழ்வாதாரம் விசாலமாக்கப்படுவதும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)

“ஒருவர் நபிகளாரிடம் ‘என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு நற் செயலை எனக்குக் கூறுங்கள்’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீர் இறைவனை வணங்க வேண்டும், அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும், ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; உறவைப் பேணி வாழ வேண்டும்’ என்று கூறிவிட்டு ‘உமது வாகனத்தை உமது வீடு நோக்கி செலுத்துவீராக’ என்று கூறினார்கள்” (அறிவிப்பாளர்: அபூ அய்யூப் (ரலி), புகாரி).

உறவுகளுடன் அழகிய முறையில் உறவாடும் போது அளவில்லாத நன்மைகள் இறையருளால் நிச்சயம் கிடைக்கும். அதேநேரத்தில் உறவுகளை வெட்டியும், உதாசீனப்படுத்தியும் வாழும் போது அவருக்கு இவ்வுலகிலேயே அதற்கான தண்டனைகள் வழங்கப்படும். மறுமையிலும் அவருக்கு தண்டனைகள் கிடைக்கும். அவரால் சொர்க்கத்தில் பிரவேசிக்க முடியால் போய்விடும்.

‘உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஜூபைர் பின் முத்யிம் (ரலி), புகாரி)

சமூக உறவை பசுமையாக்குவது

ரத்த உறவு என்பது குறிப்பிட்ட நெருங்கிய சில குடும்ப உறவுகளைக் குறிக்கும். சமூக உறவு என்பது பலதரப்பட்ட உறவுகளையும், தூரத்து உறவுகளையும் குறிக்கும். பல்வேறு குடும்பங்களை, பல்வேறு குழுக்களை, பல்வேறு கோத்திரங்களை ஒன்றிணைப்பதுதான் சமூக உறவு. சமூகங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தி, அதன் உறவை பசுமையாக்குவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

சமூகம் என்பது மனிதத் தொடர்புகள் முழுமையையும் குறிக்கும். நமது தொடர்பில் உள்ள அனைவரிடமும் நமது நல்லுறவை பசுமையாக்கி, அறுந்துவிடாத அளவுக்கு காலத்தால் அதை பாதுகாக்க வேண்டும்.

‘நிச்சயமாக நீங்கள் எகிப்தைக் கைப்பற்றுவீர்கள். அப்போது அவர்களுடன் மிகவும் இங்கிதமாக நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுக்கு அவர்களுடன் குடும்ப உறவும், திருமண உறவும் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம்)

நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் அன்னை ஹாஜிராவும், நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராகீம் தாய் மாரிய்யதுல் கிப்தியாவும் ‘கிப்தி’ வம்சத்தைச் சார்ந்தவர்கள். இவர்களின் பூர்வீகம் எகிப்து நாடாகும். இதை கருத்தில் கொண்டே நபி (ஸல்) அவர்கள் தமக்கு முன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அன்னை ஹாஜிரா (ரலி) அவர்களின் குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பின்வரும் காலங்களில் இங்கிதமாக நடந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறார்கள்.

சமூகம் என்று வரும்போது அதில் கலாசாரம் மாறுபாடு கொண்ட பல மக்கள் இருப்பார்கள். இருந்தாலும் அவர்களிடையேயும் சமூக உறவைப் பேணி வாழ வேண்டும் என்பதுதான் இஸ்லாமியக் கொள்கையாகும். இதை நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.

உறவுகள் கசந்து விடக்கூடாது, அதை காய்ந்து கருகிவிடச் செய்யவும் கூடாது. உறவுகளை பசுமைப்படுத்திட வேண்டும். பிரிந்து போன உள்ளங்கள், தொலைந்து போன உறவுகள், எதிரும் புதிருமாக உள்ள சமூகங்கள் ஒன்றிணைந்து, புதியதோர் வரலாற்றை படைக்க ஆயத்தமாக வேண்டும். உறவு களை முறிக்கும் செயல்களைத் தகர்ப்போம், உறவுகளை இணைக்கும் செயல்களை கட்டமைப்போம்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
Tags:    

Similar News