ஆன்மிகம்
இஸ்லாம்

கனிவுடனும், நன்மதிப்புடனும் நடந்து கொள்வது

Published On 2019-09-17 05:01 GMT   |   Update On 2019-09-17 05:01 GMT
இறை நம்பிக்கைகளில் ஒன்றான எஜமானர்கள் அடிமைகளிடம் கனிவுடனும், அடிமைகள் எஜமானர்களிடம் நன்மதிப்புடனும் நடந்து கொள்வது குறித்த தகவல்களை காண்போம்.
எஜமானர்கள் அடிமைகளிடம் கனிவாக, அன்பாக, கண்ணியமாக நடந்து கொள்வதும் இறை நம்பிக்கையே. இந்த இறை நம்பிக்கை உடல் சார்ந்து இருப்பதினால் எஜமானர்களின் உடல் ரீதியான எந்தத் தொந்தரவுகளும், மனித உரிமை மீறல்களும் அடிமைகளை பாதிப்புக்குள்ளாகி விடக்கூடாது.

அடிமைகளிடம் மோசமாக நடந்து கொள்வது இறைநம்பிக்கைக்கு எதிரானது. இறைநம்பிக்கைக்கு எதிரான எந்த ஒரு செயலும் இறை நம்பிக்கையாளரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படாது. இது குறித்த எச்சரிக்கையை நபி (ஸல்) அவர்கள் கடின வார்த்தைகளால் பிரயோகிக்கிறார்கள்.

‘கஞ்சனும், மகா மோசடிப் பேர்வழியும், தன் அடிமைகளை மோசமாக நடத்துகின்ற உரிமையாளனும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூபக்ர் (ரலி), நூல்:அஹ்மது).

‘அடிமைகளை மோசமாக நடத்துகின்ற உரிமையாளர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ஒருவர் ‘இறைவனின் தூதரே, இந்தச் சமுதாயம் அடிமைகளும், அநாதைகளும் நிறைந்த சமுதாயம் என்று எங்களிடம் கூறினீர்களே?’ என்று கேட்டார். ‘ஆம், அவர்களை உங்களின் பிள்ளைகளைப் போன்று கண்ணியப்படுத்துங்கள். நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கும் உண்ணக்கொடுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘இறைவனின் தூதரே, இவ்வுலகில் எங்களுக்குப் பயன் அளிப்பவை எவை?’ என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபிகளார் ‘இறைவனின் பாதையில் அறப்போரில் ஈடுபடுத்த நீ ஆயத்தம் செய்து வைத்திருக்கும் ஆரோக்கியமான குதிரையும், உமது அடிமையும் உமக்குப் போதும். அடிமை, தொழுகையை நிறைவேற்றினால், அவன் உமது சகோதரன் ஆவான்’ என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூபக்ர் (ரலி), நூல்: அஹ்மது)

மேற்கூறப்பட்ட நபிமொழியில் இரண்டு விஷயங்கள் கூறப்படுகிறது. 1) அடிமைகளை தமது பிள்ளைகளைப் போன்று எஜமான் நடத்த வேண்டும், 2) உங்களைப் போன்று அடிமைகளும் தொழுது வந்தால், அவர்கள் உங்களது சகோதரர்கள் ஆவர்.

மஃரூர் (ரஹ்) கூறுகிறார்: ‘நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும், அவ்வாறே அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் இருப்பதைப் பார்த்தேன். நான் ஆச்சரியப்பட்டு அதைப்பற்றி அவரிடம் கேட்டதற்கு, நான் ஒரு தடவை ஒரு மனிதரை (எனது அடிமையை) ஏசிவிட்டு, அவரின் தாயையும் குறை கூறிவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அபூதர், அவரையும், தாயையும் சேர்த்து குறை கூறி விட்டீரே.

நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர். உங்களது அடிமைகள் உங்களின் சகோதரர்கள் ஆவர். இறைவன் தான் அவர்களை உங்களின் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால், அவர் தாம் உண்பதிலிருந்தே அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்தே அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால், நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என கூறினார்கள். ‘இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்’ என அபூதர் (ரலி) கூறினார். (நூல்: புகாரி)

இந்த நபிமொழி எஜமானரின் கனிவான நடத்தையும், அடிமைகளின் உரிமைகளையும் அழகாக போதிக்கிறது. அடிமையை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், கேட்பதற்கு ஆள் கிடையாது என நினைத்து எஜமான் வரம்பு மீறி நடக்கக் கூடாது. நாளை மறுமையில் இதை தட்டி கேட்பதற்கு இறைவன் இருக்கிறான். அடிமைகளின் உரிமை விஷயத்தில் இறைவனை அஞ்சி நடக்க வேண்டும்.

இதுகுறித்த நிகழ்வு ஒன்றைக் காண்போம்:

‘ஒரு நபித்தோழர், நபி (ஸல்) அவர்களுக்கு முன் அமர்ந்து ‘இறைத்தூதர் அவர்களே, எனக்கு பல அடிமைகள் உண்டு. அவர்கள் யாவரும் என்னை பொய்ப்படுத்துகிறார்கள்; மேலும் எனக்கு மோசடியும் செய்கிறார்கள்; எனக்கு மாறும் செய்கிறார்கள். இதனால் நான் அவர்களை அடிக்கவும் செய்கிறேன்; அவர்களை திட்டவும் செய்கிறேன். அவர்களின் விஷயத்தில் நான் எப்படி ஒழுங்காக நடக்கிறேனா?’ என்று கேட்டார்.

‘அவர்களின் பொய்க்கும், அவர்களின் மோசடிக்கும், அவர்களின் மாறுபுரிதலுக்கும் தகுந்த மாதிரி உமது தண்டனை அவர்களுக்கு அமைந்திருந்தால் அதுவே உமக்கும் போதும், அவர்களுக்கும் போதும். யாரின் மீதும் ஒன்றுமில்லை. உமக்கு அவர்கள் செய்த துரோகத்தை விட அவர்களுக்கு உமது தண்டனையின் அளவு குறைவாக இருந்தால், அது உமக்கு மேல் மிச்சமான நன்மை. அவர்களின் பாவத்தை விட உமது தண்டனை கூடுதலாக அமைந்துவிட்டால், உம்மிடமிருந்து நன்மை எடுக்கப்பட்டு, அது அவர்களுக்கு கொடுக்கப்பட்டு நீர் பழி வாங்கப்படுவாய்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது, அவர் நபிக்கு முன்பு சப்தமிட்டு அழுதார்.

அவருக்கு நபிகளார், பின்வரும் இறைவசனத்தை படிக்கவில்லையா?, “மறுமைநாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்தபோதும் அதையும் நாம் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்” (திருக்குர்ஆன் 21:47) என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் ‘இறைவனின் தூதரே, இவர்களை விடுவிப்பதை விட சிறந்த நன்மை வேறெதையும் நான் பெற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் அனைவரையும் நான் விடுதலை செய்கிறேன். அதற்கு நீங்களே சாட்சி, என்று அவர் கூறினார்.’ (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மது).

‘தொழுகையைப் பேணுங்கள், தொழுகையைப் பேணுங்கள். உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட அடிமைகள் விஷயத்தில் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்’ என்பது தான் நபி (ஸல்) அவர்களின் இறப்புத் தருவாயில் பேசிய இறுதிப் பேச்சாக இருந்தது’. (அறிவிப்பாளர்: அலி (ரலி), நூல்: அஹ்மது)

எந்த நிலையிலும் கைவிடக்கூடாத கடமை தொழுகை. அது போன்று மனித உரிமைகள் தொடர்புடைய அடிமைகளின் நலனும் எந்நிலையிலும் பேணப்பட வேண்டும் என்பதற்காகவே தொழுகையுடன் அடிமைகளின் உரிமைகளையும் இணைத்துத் தமது இறுதிப்பேச்சில் நபி (ஸல்) அவர்கள் அறைகூவல் விடுத்து இறைவனடி சேர்ந்தார்கள். தமது இறப்பின் இறுதியிலும் அடிமைகளின் உரிமைக்காக போராடி மாண்டவர் தான் மாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்.

நபி (ஸல்) அவர்களுக்கு தமது மனைவி அன்னை கதீஜா (ரலி) அவர்களின் மூலமாக அன்பளிப்பாக வழங்கப்பட்டவர் அடிமை ஜைத் (ரலி). இவரை நபி (ஸல்) அவர்கள் விடுதலை செய்து விட்டார்கள். இருந்தாலும் அவரை, நபி (ஸல்) அவர்கள் தனது வளர்ப்பு பிள்ளையாக கனிவுடன் கவனித்துக் கொண்டார்கள். சிறந்த கோத்திரமாக விளங்கிய குறைஷி குலத்தைச் சார்ந்த தமது மாமி மகளான ஜைனப் பின்த் ஜஹ்ஷை தமது முன்னாள் அடிமை ஜைத் (ரலி)க்கு தாமே பேசி மணமுடித்துக் கொடுத்தார்கள்.

கி.பி. 629-ம் ஆண்டு சிரியா நாட்டின் பல்கா மாநிலத்தின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள ‘முஅத்தா’ எனும் இடத்தில் போர் நடந்தது. இந்தப் போரில் சுமார் 3000 வீரர்கள் கொண்ட இஸ்லாமியப் படைக்கு நபி (ஸல்) அவர்களின் முன்னாள் அடிமையாக இருந்த ஜைத் (ரலி)யை தளபதியாக நியமிக்கப்பட்டார்.

எஜமான் வாகனத்தின் மீதும், அவனின் அடிமை அவருக்குப் பின்னால் நடந்தும் செல்வதையும் கண்ட அபூஹுரைரா (ரலி), எஜமானைப் பார்த்து ‘இறையடியானே, உமக்குப் பின்னால் உமது அடிமையையும் சவாரி செய்ய வை. அவனும் உமது சகோதரன் தான். அவனது உயிரும் உனது உயிரைப் போன்று தான்’ என்றார். இவ்வாறு எஜமானர்கள் அடிமைகளிடம் கனிவுடன் நடக்கும் வரலாற்றுச் சான்றுகள் ஏராளம்.

எஜமானர்கள் அடிமைகளிடம் கனிவாக நடந்து கொள்வது போன்று, அடிமைகளும் எஜமானர்களிடம் நன்மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அடிமைகள் நடப்பதும் இறை நம்பிக்கையை கடைப்பிடிப்பதாகவே அமையும். அதுகுறித்து ஒரு சில தகவல்களைப் பார்ப்போம்.

‘மூன்று மனிதர்களுக்கு இறைவனிடம் இரண்டு விதமான கூலிகள் உள்ளன. ஒருவர் வேதக்காரர்களில் தம் சமூகத்தாருக்கு அனுப்பப்பட்ட தூதரையும், முஹம்மதையும் (ஸல்) நம்பியவர். மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடமுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சியளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களையும் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர். இம்மூவருக்கும் இரண்டு கூலிகள் உண்டு என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூ மூஸா அஷ்அரீ (ரலி), புகாரி)

‘உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவார். அடிமை தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), புகாரி)

‘நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘எந்த நற்செயல் சிறந்தது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இறைவனின் மீது நம்பிக்கை வைப்பதும், அவனது பாதையில் அறப்போர் புரிவதும்’ என்றார்கள். நான் ‘எந்த அடிமையை விடுதலை செய்வது சிறந்தது?’ என்று கேட்டேன். ‘அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும், தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் தான் சிறந்தவர்கள்’ என நபி (ஸல்) பதில் உரைத்தார்கள். (அறிவிப்பாளர்: அபூதர் (ரலி), புகாரி)

‘தம் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், தம் உரிமையாளருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றியிருந்தால், சொர்க்கத்தின் கதவை முதலில் தட்டுபவர்கள் அடிமைகளாகத்தான் இருப்பர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூபக்ர் (ரலி), அஹ்மது).

அடிமைகளும் எஜமானர்களிடம் நன்மதிப்புடன் நடந்து கொள்ளும்போது இறைவனிடம் ஈடு இணையில்லாத நற்கூலி அவர்களுக்கும் உண்டு.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
Tags:    

Similar News