ஆன்மிகம்
இஸ்லாம்

குழந்தைச் செல்வம்

Published On 2019-09-06 02:57 GMT   |   Update On 2019-09-06 02:57 GMT
பிள்ளைகள் வளரும் பருவத்தில் அவர்களுக்கு ஆடை, உணவு, அரவணைப்பு தரும் அதே நேரத்தில் ஒரு சிற்பியைப் போல அவர்களுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் சீர்படுத்துவதில் அதிக கவனமும், அக்கறையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நம்மில் பலரும் நம்மிடம் இல்லாதவற்றை எண்ணி, எண்ணி புலம்புபவர்களாக இருக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்று அவர்களுடன் நம்மை ஒப்புமைப்படுத்திப் பார்ப்பதால் நமக்கென அல்லாஹ் அருளியுள்ளவைகளின் அருமை, பெருமைகளை அறியாதவர்களாக இருக்கிறோம்.

அதனாலேயே அல்லாஹ் நமக்கென அருளியுள்ளவற்றுள் மிகச் சிறந்த செல்வமான குழந்தைச் செல்வத்தைப் போற்றிக்கொண்டாட நமக்கு நேரமில்லாமல் போய்விட்டது.

மனிதர்கள் அனைவருக்கும் பிள்ளைச்செல்வம் கிடைப்பதில்லை. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கே குழந்தைச் செல்வத்தை அளிக்கிறான். சிலருக்கு இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அருளியது போல ஆண் மக்களாகக் கொடுக்கிறான். அல்லது லூத் (அலை) அவர்களுக்கு அளித்தது போல் பெண் மக்களாகக் கொடுக்கிறான். இன்னும் சிலருக்கோ நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கியது போல் ஆண் மக்களையும், பெண் மக்களையும் கலந்து கொடுக்கிறான்.

எனினும், மக்கள் ஆண் பிள்ளைகளையே விரும்புபவர்களாக இருக்கின்றனர். ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் உள்ள குடும்பங்களில் சில பெற்றோர் மகன்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை, பெண் மக்களுக்குத் தருவதில்லை.

இன்னும் அல்லாஹ் நாடியதாலேயே நம்மை, மனிதர்களாகப் படைத்துள்ளான். இவ்வுலகில் உயர்ந்த படைப்பாக மனிதர்கள் கருதப்படுகிறார்கள். மனிதப் படைப்பைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு சொல்லிக் காட்டுகிறான்.

‘நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம்’. (திருக்குர்ஆன் 95:4).

இன்னும் நம்மில் பலர் நம்முடைய குழந்தைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் பிரார்த்தனை செய்பவர்களாக இருக்கிறோம். ஆனால் அதையும் தாண்டி, மறுமை நாள் வரை நம்மிலிருந்து வரக்கூடிய நம்முடைய சந்ததியினர் அனைவருக்கும் ‘துஆ’ (பிரார்த்தனை) செய்பவர்களாக இருக்க வேண்டும்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை புரிபவர்களாக இருந்தார்கள்: “மேலும் அவர்கள், ‘எங்கள் இறைவா, எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக. இன்னும், பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக’, என்று பிரார்த்தனை செய்வார்கள்” (திருக்குர்ஆன் 25:74).

“என் இறைவனே, என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே, என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக’ (திருக்குர்ஆன் 14:40).

“ஒருவர் தன் மனைவியிடம் நெருக்கமாக இருக்கும் நேரத்தில் ‘பிஸ்மில்லாஹ், இறைவா, சைத்தானை எங்களிடமிருந்து விலகி இருக்கச் செய். நீ எங்களுக்கு அளிக்கும் சந்ததியினரிடமிருந்தும், சைத்தானை விலகியிருக்கச் செய்’ என்று பிரார்த்தனை புரிந்து, பிறகு அவர்களுக்குச் சந்ததி அளிக்கப்பட்டால், அந்தச் சந்ததிக்கு சைத்தான் தீங்கு செய்யமாட்டான்’’ என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பெற்றோர்கள் தங்களுக்கு குழந்தைகள் பிறப்பதற்கு முன்பாகவே அவர்களுக்காக ‘துஆ’ செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். ஜக்கரியா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் தனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியை தங்களின் முதுமைக்காலத்தில் கேட்டபொழுது, ஈசா (அலை) அவர்களின் வருகையை முன்னறிவிப்புச் செய்யக்கூடியவரான யஹ்யா (அலை) அவர்களை, அல்லாஹ் மகனாக வழங்குகிறான்.

கருத்தரித்ததை அறிந்தவுடன் பெற்றோர் இருவரும் அக்குழந்தைக்காக ‘துஆ’ செய்ய வேண்டும். தாய்மைப்பேறு அடைந்தவர்கள், தொழுகைகளை விடாமல் தொழக்கூடியவர்களாகவும், குர்ஆனை ஓதக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். பொய், புறம் பேசாமல், நல்ல எண்ணங்களால் மனதை நிரப்புவதுடன், ‘திக்ர்’ செய்பவர்களாகவும் மாற வேண்டும்.

ஆறு மாதக்கருவாக சிசு இருக்கும் நிலையில் அதற்கு கேட்கும் சக்தியை அல்லாஹ் அளிக்கிறான். எனவே பயனற்ற பொழுதுபோக்குகளில் நேரத்தை வீணாக்காமல், நம் குழந்தைகளுக்கு நல்லவற்றைக் கேட்கும் பாக்கியத்தை வழங்குவது நம் கையிலேயே இருக்கிறது. இறைவன் தன் திருமறையில் குறிப்பிடுகிறான்:

‘உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் (உங்களுக்கு) ஒரு சோதனையாகவே உள்ளன. (இச்சோதனையில், நீங்கள் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு) அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி இருக்கின்றது’ (திருக்குர்ஆன் 64:15).

செல்வத்தை அல்லாஹ்விற்கு விருப்பமான வழியில் செலவழித்து, பிள்ளைகளையும் அவன் விரும்பும்படி வளர்க்கும் பெற்றோர்களுக்கு அல்லாஹ்விடம் மகத்தான கூலி உள்ளது என்ற இந்த வசனத்தின் மூலம் பிள்ளைகளை வார்த்தெடுப்பதில் நாம் தேர்ச்சி பெற்றால் மறுமை நாளிலும் அல்லாஹ்வினால் நற்கூலி கொடுக்கப்படுவோம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

மறுமையில் வெற்றி அடைவதற்கு பெற்றோர்கள் மட்டுமல்லாது, பிள்ளைகளும் தங்களின் அமல்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். சுவனத்திற்கு அனுப்பப்படும் பெற்றோர்களின், குறையற்ற அமல்களின் காரணமாக கருணையின் பெருங்கடலான அல்லாஹ் அவர்களின் பிள்ளைகளையும் அவர்களுடன் சேர்த்து வைக்கக் கூடியவனாக இருக்கிறான். அதுபோலவே பிள்ளைகளின் நல்ல அமல்களின் பொருட்டு அவர்களுடன் சேர்த்து அவர்களின் பெற்றோர்களும் சுவனம் அனுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது.

நம் பிள்ளைகள் நம்முடைய அமானிதமாகவும் இருக்கிறார்கள். நம்மிடம் கொடுக்கப்பட்ட ஒரு அமானிதப் பொருளை எப்படி பத்திரமாக, கொடுத்தவரிடம் திருப்பிக் கொடுக்கிறோமோ, அதுபோல நம்முடைய மக்களை, அல்லாஹ்விடம் நன்மக்களாகத் திருப்பித் தரும் கடமையை பெற்றோர் இருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

குழந்தை வளர்ப்பு என்பது இலேசான காரியம் அல்ல. பிள்ளைகள் வளரும் பருவத்தில் அவர்களுக்கு ஆடை, உணவு, அரவணைப்பு தரும் அதே நேரத்தில் ஒரு சிற்பியைப் போல அவர்களுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் சீர்படுத்துவதில் அதிக கவனமும், அக்கறையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக செல்லமும் ஆபத்து, அதிக கண்டிப்பும் ஆபத்து. அன்பையும், கண்டிப்பையும் தேவைக்கேற்ப கொடுத்து, அவற்றுடன் இஸ்லாம் கூறும் நெறி முறைகளையும், விழுமியங்களையும் கற்பித்து வளர்க்க வேண்டும்.

பெற்றோர்கள்தான் பிள்ளைகளின் முதல் ஆசான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஆகவே பெற்றோர்கள் சிறந்த ஆசிரியர்களைப் போல, மிகச் சிறந்த முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினால், அவர்கள் எதிர்காலத்தில் நல்ல மாணாக்கர்களாக, இம்மையிலும், மறுமையிலும் வெற்றி அடையக்கூடியவர்களாக மாறுவார்கள், இன்ஷாஅல்லாஹ்.

ம.அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை -7
Tags:    

Similar News