ஆன்மிகம்
இஸ்லாம்

இனிய வாழ்வு தரும் இறைநம்பிக்கை: நோன்பு நோற்பது

Published On 2019-08-13 04:43 GMT   |   Update On 2019-08-13 04:43 GMT
நடப்பு ரமலான் மாதத்தை அடைந்தவர்கள் இறைவனுக்காக நோன்பிருந்து, நோன்பு ஏற்படுத்தும் மாற்றத்தையும் பெற்று, புனிதர்களாக, இறைநேசர்களாக, சொர்க்க வாசிகளாக, மனித நேயமுள்ளவர்களாக வாழ சபதம் ஏற்போம்.
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘நோன்பு நோற்பது’ குறித்த தகவல்களை காண்போம்.

புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பது உடல் சார்ந்த இறைநம்பிக்கையாக அமைந்துள்ளது. ரமலானில் பகல் காலங்களில் முஸ்லிம்கள் உண்ணாமலும், பருகாமலும், மனோ இச்சைகளை அனுபவிக்காமலும் நோன் பிருந்து இறைநம்பிக்கையை வெளிப்படுத்து கிறார்கள்.

நோன்பு உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாக இருப்பதால், அவரவர் உடல் நலம் சார்ந்து நோன்பு நோற்பதும், நோன்பை விடுவதும், அதை நிரந்தரமாக விடுவதும், அல்லது தற்காலிகமாக கை விட்டு, பிறகு வைப்பதும் போன்ற பலவிதமான சூழ்நிலைகள் ஏற்படுகிறது.

உள்ளம் சார்ந்த, நாவு சார்ந்த இறைநம்பிக்கையில் இத்தகைய பலவிதமான சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்பில்லை. நோன்பு உடல் சார்ந்த வணக்கமாக இருப்பதால் நோய் போன்ற காரணங்களினாலும், முதுமை போன்ற கஷ்டங்களாலும், பயணம் போன்ற அசவு கரியங்களாலும் நோன்பை தற்காலிகமாக விட்டு விடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியும், சலுகையும் உண்டு.

சிரமங்கள் நீங்கியதும் விடுபட்டு போன நோன்புகளை நடப்பு ரமலான் முடிந்தபிறகு எதிர்வரும் ரமலானுக்குள் நிறைவேற்றிட வேண்டும்.

அவரவரின் உடல் அவருக்கு நன்றாக ஒத்துழைக்கும் நேரம் பார்த்து, வசதி வாய்ப்பை பெற்று, சீதோஷண நிலையையும் கருத்தில் கொண்டு விடுபட்டு போன நோன்புகளை நோற்பதில் அவர் மீது எந்தத் தவறும் கிடையாது. இஸ்லாம் மனித உடல் நலன்களை பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

இறைநம்பிக்கைக்குப் பிறகு செல்வங்களில் சிறந்த செல்வம் உடல் ஆரோக்கியமே என இஸ்லாம் சிறப்பித்து கூறுகிறது.

‘நீங்கள் இறைவனிடம் மன்னிப்பையும், உடல் சுகத்தையும் கேளுங்கள். ஏனெனில் இறைநம்பிக்கைக்குப் பிறகு உடல் சுகத்தை விட சிறந்ததொரு பாக்கியம் யாருக்கும் வழங்கப்படவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூபக்கர் (ரலி), நூல்: திர்மிதி, இப்னுமாஜா)

‘மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1) ஆரோக்கியம், 2) ஓய்வு, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), புகாரி)

கஷ்டப்பட்டு நோன்பு நோற்பதை இஸ்லாம் விரும்பவில்லை. நலமாக, இஷ்டப்பட்டு நோன்பு நோற்பதை தான் இஸ்லாம் விரும்புகிறது.

சிறுவர்கள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள், வயது முதிர்ச்சி, நீங்காத நோய் ஆகியவற்றின் காரணமாக நோன்பு நோற்க சக்தியில்லாதவர்கள் மீது நோன்பை இஸ்லாம் கட்டாயப்படுத்தவில்லை.

85 கி.மீ. தூரம் பயணம் செய்பவர்கள், மாத விலக்கு அல்லது பேறுகால உதிரப்போக்கு உடைய பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள், நோன்பு நோற்பதால் நோய் குணமாகுவது தாமதமாகலாம் என அஞ்சும் நோயாளிகள் ஆகியோர் நோன்பை தற்காலிகமாக விட்டு விட்டு, பிறகு நோற்க வேண்டும். தள்ளாத வயது, நீங்காத நோய் கொண்டவர்கள் நோன்பை நிரந்தரமாக விட்டுவிடலாம். பிறகு இவர்கள் நோன்பு நோற்க வேண்டிய அவசியமில்லை.

எனினும், நாள் ஒன்றுக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். தானியமாக இருந்தால் நாள் ஒன்றுக்கு 600 கிராம் வழங்கிட வேண்டும். இது குறித்து இறைவன் விளக்குவதை விவரமாகக் காண்போம்.

‘இறை நம்பிக்கை கொண்டோரே, உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருப்பது போன்று உங்கள் மீதும் விதியாக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தமானவர்களாகக் கூடும்’. (திருக்குர்ஆன் 2:183)

‘(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது. நீங்கள் (நோன்பின் பலனை அறிந்தால்) நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்’. (திருக்குர்ஆன் 2:184)

ஆயிஷா (ரலி) கூறுவது:-

“ஹம்ஸா பின் அம்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் ‘பயணத்தில் நோன்பு நோற்கலாமா?’ என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘நீ விரும்பினால் நோன்பு நோற்றுக்கொள்; நீ விரும்பினால் விட்டுவிடு’ என்றார்கள்”. (புகாரி)

“நபி (ஸல்) அவர்கள் ரமலானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். ‘கதீத்’ எனும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டார்கள். மக்களும் நோன்பை விட்டார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), புகாரி)

நோன்புக்கு அரபியில் ‘ஸவ்ம்’ என்பதாகும். இதற்கு ‘தடுத்து நிறுத்துதல்’ என்று பொருள். வாயையும், வயிற்றையும், பாலின உறுப்பையும் உணவு, குடிப்பு, இச்சை கொள்வது ஆகியவற்றை விட்டும் தடுத்துக் கொள்வதுதான் நோன்பு என நாம் நினைப்பது முற்றிலும் தவறு.

நோன்பு உடல் சார்ந்த வணக்கமாகவும், இறை நம்பிக்கையாகவும் இருப்பதால் உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் கட்டுப்பாடுடன் இருந்து, தேவையில்லாதவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.

நோன்பின் ஒழுக்கங்கள் 8, அவை: வயிற்றைப் பேணுதல், கண்களைப் பேணுதல், காதுகளைப் பேணுதல், மூக்கைப் பேணுதல், நாவைப் பேணுதல், கைகளைப் பேணுதல், கால் களைப் பேணுதல், மறைவிடத்தைப் பேணுதல்.

ஒட்டு மொத்தத்தில் பார்த்தறிதல், கேட்டறிதல், சுவைத்தறிதல், நுகர்ந் தறிதல், தொட்டறிதல் ஆகிய ஐம்புலன்களையும் அடக்கி ஆளுமை செலுத்துவதுதான் உண்மையான நோன்பு.

வயிறு: விலக்கப்பட்டவைகளை உண்ணுவது, பருகுவது ஆகியவற்றை விட்டும் தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

கண்கள்: விலக்கப்பட்ட அனாச்சாரங்கள், ஆபாசங்கள், அருவெறுக்கத்தக்கவைகளை பார்ப்பதை விட்டும் தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

காதுகள்: பொய், புறம், கோள், அவதூறு, ஆபாசம், தீச்சொல், இசை போன்ற விலக்கப்பட்டவைகளை கேட்பதை விட்டும் தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

மூக்கு: தடை செய்யப்பட்ட மது வகைகள், புகையிலை பொருட்கள், போதையூட்டும் பொருட்கள் போன்றவற்றை நுகர்வதை விட்டும் தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

நாவு: பொய், புறம், கேள், அவதூறு, தீச்சொல், அறிவற்ற பேச்சுக்கள் ஆகியவற்றை பேசுவதை விட்டும் தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

கைகள்: அனுமதிக்கப்படாத பொருட்களை தொடுதல், லஞ்சம் வாங்குதல், வரதட்சணை வாங்குதல், வட்டி வாங்குதல், கொடுத்தல், வட்டிக்கு சாட்சி கையெழுத்திடுதல், திருடுதல், வழிப்பறி, கொலை, கொள்ளை ஆகியவற்றி லிருந்து தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

கால்கள்: தடை செய்யப்பட்ட இடங்கள் அனைத்திற்கும் செல்வதை விட்டும் தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

மறைவிடம்: பாலியல், பலாத்காரம், வன்புணர்ச்சி, தகாத உறவு போன்றவற்றிலிருந்து தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

பசித்திருப்பது, தாகித்திருப்பது மட்டும் நோன்பல்ல. தகாத காரியங்கள் அனைத்தில் இருந்தும் உடல் உறுப்புக்களை பேணி பாதுகாப்பதுதான் உண்மையான நோன்பு என்பதை உத்தம நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:

‘எத்தனையோ நோன்பாளிகளுக்கு, அவர் களின் நோன்பிலிருந்து பசியையும், தாகத்தையும் தவிர வேறெதும் (கூலி) கிடைப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: தாரமீ)

அழகான முறையில் நோன்பை கடைபிடிக்கும் நோன்பாளிகளுக்கு இறைவனிடத்தில் மகத்தான கூலி உண்டு.

‘எவர் ரமலான் மாதம் (இறைவனின் நற்கூலி கிடைக்கும் என்ற அவனின் வாக்குறுதியை) நம்பியும், நன்மையை நாடியும் நோன்பிருக்கிறாரோ அவருக்காக அவர் முன் செய்த (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)

‘ஆதமுடைய மகன் செய்கின்ற ஒவ்வொரு செயலும், அவனுக்கே இருக்கிறது. எனினும் நோன்பைத் தவிர. நோன்பு எனக்கு உரியது. அதற்கு நானே கூலி வழங்குகிறேன் என இறைவன் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கிறார்கள்’. (நூல்: புகாரி, முஸ்லிம்)

‘எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகிறார். நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ (நூல்: புகாரி) என்றும், மற்றொரு அறிவிப்பில் ‘அதற்கு நானே கூலியாக இருப்பேன்’ என்றும் இறைவன் கூறியதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இத்தகைய நோன்புகளை காரணமில்லாமல் விடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. காரணமின்றி ஒரு நோன்பை விட்டு விட்டு அதை வாழ்நாள் முழுவதும் நிறைவேற்றினாலும், அந்த ஒரு நோன்புக்கு ஈடாக முடியாது.

நடப்பு ரமலான் மாதத்தை அடைந்தவர்கள் இறைவனுக்காக நோன்பிருந்து, நோன்பு ஏற்படுத்தும் மாற்றத்தையும் பெற்று, புனிதர்களாக, இறைநேசர்களாக, சொர்க்க வாசிகளாக, மனித நேயமுள்ளவர்களாக வாழ சபதம் ஏற்போம்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
Tags:    

Similar News