ஆன்மிகம்
‘ஹஜ்’ பயணம் தரும் படிப்பினைகள்

‘ஹஜ்’ பயணம் தரும் படிப்பினைகள்

Published On 2019-08-09 03:18 GMT   |   Update On 2019-08-09 03:18 GMT
பொதுவாக எல்லாப் பிரச்சினைகளுக்கும் எது காரணமாக இருக்கும் என்று சற்று யோசித்துப் பார்க்கையில் அங்கு முன்னிலை வகிப்பது, நமது கெட்ட குணங்களே என்றால் அது மிகையல்ல.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகும். ‘ஹஜ்’ என்ற அரபுச் சொல்லிற்கு ‘சந்தித்தல்’ என்று பொருள். சவுதி அரேபியாவில் இறையில்லமாக இலங்கும் கஅபாவை சில பாரம்பரியமான முறைகளின் படி வலம் வந்து, சில இடங்களில் தங்கி, இறைவனை வழிபட்டு வருவதற்கு ‘ஹஜ்’ என்று பெயர்.

ஹஜ் என்பது சுற்றுலாப்பயணமல்ல. தினமும் நடைபெறும் ஐங்காலத் தொழுகைகளைப் போல அதுவும் ஒரு புனிதமான வணக்கம் தான். நமது வணக்கங்களின் வடிவங்கள் தான் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றனவே தவிர அனைத்து வணக்கங்களின் அடிப்படை நோக்கமும் இறையச்சம் ஒன்று தான்.

“ஒருவர் ஹஜ் செய்து விட்டு ஊர் திரும்பும் போது அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார்” என்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள். அப்படியானால், அந்த ஹஜ் அவரது அனைத்து பாவக்கறைகளையும் போக்கிவிடுகிறது என்று தானே அர்த்தம்.

ஹஜ் குறித்து கூறும் திருக்குர்ஆன் வசனங்கள் சில...

“அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால் எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறை ஏற்படப்போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் எவரின் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 3:97)

“ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது (நன்மையானது), தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே, எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 2:197)

“ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜின் காரியங்களை முடித்ததும், நீங்கள் (இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்- இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்”. (திருக்குர்ஆன் 2:200)

நமது புனித ஹஜ்ஜுப் பயணம் எப்படி அமைந் திருக்க வேண்டும் என்று மேற்கண்ட வசனங்கள் தௌிவுபடுத்துகின்றன.

அவசரமான இன்றைய காலச்சூழலில் ஹஜ் ஒரு இன்றியமையாத ஒரு வாய்ப்பாகும். மன நிம்மதியைத் தேடி மனிதன் அங்குமிங்கும் ஓடியாடி அலைகின்றான். அவனுக்கான முழு நிம்மதி இந்த ஹஜ்ஜில் இருக்கின்றது என்றால் அது மிகையல்ல.

செல்வங்களை நாம் சேர்த்து வைத்து என்ன செய்யப்போகிறோம்.? புனிதப் பயணங்களுக்கும், நற்காரியங்களுக்கும் அவற்றை நாம் பயன்படுத்தினால் தான் நாம் நமது வாழ்வில் நல்ஈடேற்றம் பெறமுடியும்.

இது குறித்துப்பேசும் இறைமறை வசனங்கள் இதோ:

“அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை (நன்மை செய்வோரை) நேசிக்கின்றான்”. (திருக்குர்ஆன் 2:195)

நம்பிக்கை கொண்டோரே, பேரங்களும், நட் புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த (இறுதித்தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்”. (திருக்குர்ஆன் 2:254)

“(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மைபயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்”. (திருக்குர்ஆன் 2:272)

ஹஜ் என்பது வெறும் பயணமல்ல, படிப்பினைகள் பல நிறைந்த பயிற்சியும், பாடமும் ஆகும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது, சுய விருப்பு, வெறுப்புகளை விட்டு விடுவது, இருப்பதை வைத்து வாழப்பழகுவது, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது, தவறுகளை மன்னிப்பது, நட்புறவை பலப்படுத்துவது, நல்லதையே நாடுவது, நல்லதைச் செய்வது, இறைஞாபகத்திலும், தியானத்திலும், வணக்க வழிபாடுகளிலும் எப்போதும் ஈடுபடுவது, கொஞ்ச நாள் ஊரையும், உறவையும் பிரிந்திருப்பது, அயல்தேசத்தவர் களின் பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்வது, பொறுமையாகயிருப்பது, தூய்மையாகயிருப்பது, பொறாமைப்படாமல் இருப்பது, ஒருவருக்கொருவர் உதவி செய்வது, என எண்ணற்ற நல்லபல நற்குணங்களை ஹஜ் பயணம் கற்றுக்கொடுக்கிறது.

காரணம், “நற்குணங்களால் நல்லழகு பெற்றவர்கள் தான் இறைநம்பிக்கையில் நிறைவு பெற்றவர்கள்” என நபிகளார் கூறியிருப்பதேயாகும்.

புனித ஹஜ்ஜின் மையக்கருத்தும் நற்குணத்துடன் வாழ்வோம், வாழ்விப்போம் என்பது தான். பொதுவாக எல்லாப் பிரச்சினைகளுக்கும் எது காரணமாக இருக்கும் என்று சற்று யோசித்துப் பார்க்கையில் அங்கு முன்னிலை வகிப்பது, நமது கெட்ட குணங்களே என்றால் அது மிகையல்ல.

இவற்றை எல்லாம் மீட்டெடுக்கும் ஒரு அற்புதமான களம் தான் புனித ஹஜ்.

வாருங்கள் தூய புனிதர்களைப் போற்றுவோம், தீய மனிதர்களை மாற்றுவோம்.

மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3. 
Tags:    

Similar News