ஆன்மிகம்
இஸ்லாம்

மன்னிக்கும் பண்பே வெற்றிகளைத்தரும்

Published On 2019-08-02 03:14 GMT   |   Update On 2019-08-02 03:14 GMT
காரணம் மக்கள் அனைவருமே தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே. எத்தனை விசாலமான மனசு. அந்த அன்பே அவர்களின் வெற்றிக்கு காரணம்.
இந்த உலகையும், உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்த அல்லாஹ், ஒட்டுமொத்த மனிதர்கள் அனைவர் மீதும் கருணையைப் பொழிகின்ற குணம் நிறைந்த மனிதராக கண்மணி நாயகம் முகம்மது நபி (ஸல்) அவர்களைப் படைத்து உலகிற்கு அனுப்பினான். அதற்கு ஏற்ப, எல்லோர் மீதும் அன்பை பொழிகின்ற, யார் மீதும் எந்த நிலையிலும் வெறுப்பைக் காட்டாத அழகிய நற்குணத்தைக் கொண்டவர் களாக நபிகளார் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டினார்கள்.

திருக்குர்ஆனில் நபிகளார் குறித்து இறைவன் குறிப்பிடும்போது, “நபியே, நீங்கள் நற்குணங்கள் நிறைந்தவர்களாக இருக்கின்றீர்கள்” என்று குறிப்பிடுகின்றான்.

இஸ்லாத்தின் சிறப்புகளை மக்கா நகர மக்களிடம் எடுத்துச்சொல்ல எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் நபிகளாருக்கு அதில் வெற்றி கிடைக்கவில்லை. எனவே அண்ணல் எம்பெருமானார் (ஸல்) மக்கா அருகில் உள்ள தாயிப் நகருக்கு சென்று ஏகத்துவ கொள்கையை எடுத்துச்சொல்ல முயன்றார்கள். அந்த நகர மக்கள் இதை ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல் நபிகள் நாதரை கல்லால் எறிந்து காயப் படுத்தினார்கள்.

ரத்தம் சொட்ட சொட்ட ஊரின் கடைக்கோடியில் வந்து ஒரு பாறையில் அமர்ந்தவர்களாக. “இறைவா, நான் பலவீனப்பட்டு போனேன். இந்த அறியாத மக்களுக்கு ஏகத்துவத்தை எப்படி எடுத்துச் சொல்வது என்பது எனக்கு சரிவரத்தெரியவில்லை. என்னுடைய பலவீனத்தைப் போக்கி என் கரங்களை உறுதிப்படுத்து ரஹ்மானே” என்று இருகரம் ஏந்தி பிரார்த்தித்தார்கள்.

அப்போது, வானவர் தலைவர் ஜிப்ரீல் தோன்றி, “நபியே, அநியாயம் செய்த இந்த ஊர் மக்களை இந்த இரண்டு மலைகளைக் கொண்டு இறுக்கி அழித்து விடட்டுமா?. எனக்கு உத்தரவு இடுங்கள் நபியே” என்று வேண்டி நின்றார்கள்.

“வேண்டாம் வானவத் தூதுவரே, என் ஒருவன் பொருட்டால் இத்தனை மக்களை அழிக்க வேண்டுமா?, இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். இவர்கள் சந்ததிகள் ஏக இறைவன் அல்லாஹ் என்று ஏற்றுக்கொள்வார்கள். அவர்களை விட்டு விடுங்கள்” என்றார்கள் கருணையே உருவான நபி பெருமானார் (ஸல்) அவர்கள்.

இதற்கு பலனும் கிடைத்தது. ஒரு சில ஆண்டுகளிலே தாயிப் நகரம் முழுவதும் இஸ்லாமிய பேரொளி வீசியது.

உக்கிரமான உஹது போர் வெற்றியை சுவைத்த போர் வீரர்கள், அண்ணலாரின் கட்டளையை மறந்து விட்ட ஒரு சோதனையான நிலையில், போரின் முடிவு மாற்றமாக அமைந்து விட்டது. அண்ணலாருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதிலெல்லாம் பேரிழப்பாக ஹம்ஸா (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

சில ஆண்டுகள் கழித்து மக்கா நகரம் வெற்றிகொள்ளப்பட்டது. வெற்றி முழக்கத்துடன் நபிகளாரின் படை வீரர்கள் மக்கா நகருக்குள் நுழைந்தனர். நபிகளாருக்கு எதிராக செயல்பட்ட குரைஷியர்கள் அனைவரும் தங்களுக்கு மரண தண்டனை நிச்சயம் என்று பயந்திருந்தனர்.

ஆனால் நடந்தது என்ன?.

“இன்று முதல் மக்காவில் வாழும் அத்தனை குரைஷியர்களும் சுதந்திரமானவர்கள். யாரும் யாருக்காகவும் பழிக்குப்பழி வாங்கப்பட மாட்டார்கள். அத்தனை பேரையும் அவர்கள் செய்த குற்றங்களையும் மன்னித்து விட்டேன்” என்றார் நபிகள் நாயகம்.

இதற்கு காரணம், தங்கள் மன்னிப்பின் பொருட்டால் அத்தனைப் பேரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு மறுமையில் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே அவர்கள் பிரதான நோக்கமாய் இருந்தது.

“இத்தனை கொடுமைகள் செய்தும் நமக்கு மன்னிப்பா? என்று ஆச்சரியம் அடைந்த கொடியவர்கள் தங்கள் மறைவிடத்தில் இருந்து வெளியில் வந்தனர். அண்ணல் நபியின் கரங்கள் பிடித்து தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டனர். இந்த மாற்றத்தைத் தான் மாநபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.

மக்காவை விட்டு மதீனாவிற்கு ‘ஹிஜ்ரத்’ செல்லுமாறு நபிகளாருக்கு இறைவன் கட்டளையிட்டான். இதையடுத்து கஆபா சென்று தொழுதுவிட்டு செல்ல நபிகளார் விரும்பினார்கள். இதற்காக அதன் சாவியை வைத்திருந்த, உஸ்மான் இப்னு தல்ஹாவிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார்கள். ஆனால் தல்ஹா மறுத்துவிட்டார்.

அப்போது, நபிகள் நாயகம் (ஸல்), “ஒருநாள் வரும் நான் உன்னிடத்தில் இருப்பேன். நீ என்னிடத்தில் இருப்பாய். அந்த நாளைப் பயந்து கொள்” என்றார்கள்.

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் கஆபாவின் சாவி எம்பெருமானார் (ஸல்) அவர்களின் கரங்களுக்கு வருகிறது. அப்பாஸ், (ரலி), அலி (ரலி) போன்ற பெரும் பெரும் சஹாபாக்கள், ‘நாயகம் அவர்கள் தங்கள் கையில் கஆபாவின் சாவியைத் தருவார்கள்’ என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அருமை நபியவர்கள், ‘எங்கே உஸ்மான் இப்னு தல்ஹா?’ என்று கேட்டார்கள். பழைய சம்பவத்தை நினைத்து பயந்தவராக உஸ்மான் இப்னு தல்ஹா வந்தார். அவரது கையில் சாவியை கொடுத்த நபியவர்கள், ‘இன்று முதல் இந்த சாவி உன்னிடமே இருக்கட்டும். கியாமத் நாள் முடியும் வரை இது உன் சந்ததிகளிடமே இருக்கும்’ என்றார்கள்.

தனக்கு எதிராக செயல்பட்டவருக்கும் நன்மைகள் செய்த விசால மனம் கொண்டவர்களாக நபிகள் நாயகம் இருந்தார்கள் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

தனக்கு விஷம் வைத்து கொல்ல நினைத்த யூதப்பெண்ணை மன்னித்தார்கள், தலையில் குப்பைகளைக்கொட்டிய மூதாட்டி நோயுற்ற போது சென்று நலம் விசாரித்தார்கள், பத்ர் போரில் எதிரிகளை மன்னித்தார்கள்.

இப்படி நபிகளாரின் வாழ்நாட்களில் ஒவ்வொரு சோதனையான காலகட்டங்களில் எல்லாம் தன் அன்பினால் அவர்களை அரவணைத்தார்கள். அழகிய முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்கள்.

காரணம் மக்கள் அனைவருமே தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே. எத்தனை விசாலமான மனசு. அந்த அன்பே அவர்களின் வெற்றிக்கு காரணம்.

நபிகளாரின் துஆவை நாமும் பெற்று நாளை மறுமையில் ஈடேற்றம் பெறுவோம்.

மு. முகமது யூசுப் உடன்குடி.
Tags:    

Similar News