ஆன்மிகம்
வீண் பேச்சுக்களை தவிர்ப்பது, வீண் கேளிக்கைகளில் இருந்து விலகியிருப்பது

வீண் பேச்சுக்களை தவிர்ப்பது, வீண் கேளிக்கைகளில் இருந்து விலகியிருப்பது

Published On 2019-07-30 04:53 GMT   |   Update On 2019-07-30 04:53 GMT
வீணான கேளிக்கைகளில் மனிதர்கள் மூழ்கிக் கிடப்பது ஆபத்தானது. அது அவர்களை நரகத்தில் கொண்டு போய் தள்ளும். அவற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாப்போம்.
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான வீண் பேச்சுக்களை தவிர்ப்பது, வீண் கேளிக்கைகளில் இருந்து விலகியிருப்பது ஆகியவை குறித்த தகவல்களை காண்போம்.

வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நாவு சார்ந்த இறைநம்பிக்கை என்றால், வீண் கேளிக்கைகளில் இருந்து விலகியிருப்பது உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது.

வீண் விரயம் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. பொருளாதாரம், நீர், உணவு தானியங்களில் மட்டுமல்ல, எதிலும் வீண் விரயம் கூடவே கூடாது என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது.

‘உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’ என்று திருக்குர்ஆன் (7:31) கட்டளையிடுகிறது.

பேச்சிலும் கூட உண்மையை, நேர்மையை, அழகை, கனிவை, அன்பை, நியாயத்தை, தர்மத்தை, சத்தியத்தை பேசும்படி இஸ்லாம் ஆதரிக்கிறது. அதே வேளையில் வீண் பேச்சுக்களான பொய், புறம், அவதூறு, ஆபாசமாக பேசுவது, சபிப்பது, அரட்டை அடிப்பது போன்றவற்றை இஸ்லாம் எதிர்க்கிறது.

நல்லவற்றை பேசி இறைநம்பிக்கையை வளமாக்க வேண்டும். வீணானவற்றை பேசி இறைநம்பிக்கையை பாழாக்கி விடக்கூடாது. இதனால் தான் பேசினால் உண்மையை பேசுங்கள், நேர்மையாகப் பேசுங்கள் என்று திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்துகிறது, மேலும் அவ்வாறு உண்மையுடன் நடந்து கொண்டால் என்ன பயன் கிடைக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது:

‘இது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன்தரும் நாள். அவர்களுக்குச் சொர்க்கச்சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை இறைவன் பொருந்திக்கொண்டான். அவர்களும் இறைவனை பொருத்திக்கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும் என்று இறைவன் கூறுவான்’. (திருக்குர்ஆன் 5:119)

‘நம்பிக்கை கொண்டோரே, இறைவனை அஞ்சுங்கள், நேர்மையான சொல்லையே கூறுங்கள்’ (திருக்குர்ஆன் 33:70)

‘உறவினராக இருந்தாலும் பேசும்போது நீதியை பேசுங்கள்’. (திருக்குர்ஆன் 6:152)

‘இன்சொல்லும் தர்மம் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)

அழகிய முறையில் பேசுவது சொர்க்கம் செல்லும் வழியை எளிதாக்கி வைத்து விடுகிறது.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்லும் வழியை கேட்டபோது அவருக்கு நபியவர்கள் அழகிய முறையில் பேசும்படி கட்டளையிட்டார்கள்.

இறைநம்பிக்கையின் ஒரு பகுதி வீண் பேச்சுக்களை தவிர்ந்திருப்பதாக உள்ளதால் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்று பேசினால் நல்லதை பேசட்டும். இல்லையென்றால் வாய்மூடி இருந்து கொள்ளட்டும். கண்டதை பேசி வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்பது நபிமொழியாகும்.

‘இறைவனையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)

வீணானவற்றை பேசுவதிலிருந்து தவிர்ந்திருப்பது இறைநம்பிக்கைக்கு பாதுகாப்பு அரணாக அமையும்.

‘கெட்டவார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் ஒரு பகுதியாக உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதி)

கேலி செய்யாதே, குறை கூறாதே, பட்டப்பெயர்களால் குத்திக் காட்டாதே, துருவித்துருவி ஆராயாதே, புறம் பேசாதே. இவை யாவும் வீண் பேச்சுக்களே. இவற்றை தவிர்ந்திடுவீர் என்று திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:

‘நம்பிக்கை கொண்டோரே, ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். உங்களுக்குள் நீங்கள் குறைகூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக்காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்’.

‘நம்பிக்கை கொண்டோரே, ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக்கொள்ளுங்கள். சில ஊகங்கள் பாவமாகும். துருவித்துருவி ஆராயாதீர்கள். உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள். உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா?, அதை வெறுப்பீர்கள். இறைவனை அஞ்சுங்கள். இறைவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்’. (திருக்குர்ஆன் 49:11,12)

‘நம்பிக்கை கொண்ட வெகுளிகளான, ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு’. (திருக்குர்ஆன் 24:23)

‘நிச்சயமாக இறைவன் மூன்று செயல்களை வெறுக்கிறான். 1) இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார் என ஆதாரமின்றிப் பேசுவது, 2) பொருள்களை வீணாக்குவது, 3) அதிகமாக (பிறரிடம்) யாசிப்பது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முகீரா (ரலி) புகாரி)

‘விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். நாவும் கூட விபசாரம் செய்கிறது. அது செய்யும் விபசாரம் பாலுணர்வைத் தூண்டும் பேச்சாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல் புகாரி)

‘தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ள நாவிற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ள பாலின உறுப்பிற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருக்கு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), புகாரி)

‘கோள் சொல்கிறவன் சொர்க்கம் செல்லமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), புகாரி)

மேற்கூறப்பட்டவைகளில் நல்லவற்றை பேசுவதும், வீணானவற்றை தவிர்ந்து நடப்பதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதால் பேண வேண்டியதை பேணி, வீணானவற்றை விட்டு விலகி நடக்க வேண்டும். பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் எதையும் பேசக்கூடாது.

இத்துடன் நாவு சார்ந்த இறைநம்பிக்கையின் அம்சங்கள் நிறைவு பெற்றுவிட்டது. இனி உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் அம்சங்கள் தொடர்கின்றன.

அவற்றில் முதலாவதாக நாம் பார்க்கப் போவது ‘வீண் கேளிக்கைகளில் இருந்து விலகியிருப்பது’ குறித்து பார்ப்போம். மேற்கூறப்பட்ட வீணான பேச்சுகள், வீணானவை நடைபெறும் இடங்களிலிருந்து விலகியிருப்பதுதான் உடல் சார்ந்த இறைநம்பிக்கை ஆகும்.

நாம் நேரத்தை நல்ல வழியில், பயனுள்ள முறையில் செலவளிக்க வேண்டும். இரவு விடுதி, மதுபான விடுதி, உல்லாச விடுதி, சூதாட்ட விடுதி, ஆபாச விடுதி போன்றவற்றில் கலந்து கொண்டு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், காமகளியாட்டம், நக்கல், நையாண்டி, கேலி கிண்டல் போன்ற வீண் கேளிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும். இப்படிப்பட்ட கேளிக்கைகள் இறைநம்பிக்கையை முற்றிலும் பாழாக்கிவிடும்.

கேளிக்கை பிரியர்கள் நம்மை அழைத்தாலோ, அல்லது அவர்களை நாம் கடந்து சென்றாலோ ஒன்று நாம் அவர்களை திருத்த முயலவேண்டும். அல்லது நாம் அந்த இடங்களை புறக்கணித்து சென்றுவிட வேண்டும். இவ்வாறு நாம் செய்வது தான் இறைநம்பிக்கையை பாதுகாக்கும் சிறந்த வழியாக அமையும். இது குறித்து இறைவன் கூறுவதை கேட்போம்.

“வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ‘எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்’ எனவும் கூறுகின்றனர்”. (திருக்குர்ஆன் 28:55)

‘(இறையடியார்கள்) வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்’. (திருக்குர்ஆன் 25:72)

‘இறைவனை நினைவுபடுத்தாத யாவும் வீண் விளையாட்டே. பின்வரும் நான்கு செயல்களைத் தவிர. அவை: 1) கணவன் மனைவியிடம் அன்பாக விளையாடுவது, 2) ஒருவர் குதிரைக்கு பயிற்சி அளிப்பது, 3) இரண்டு இலக்குகளுக்கிடையே ஒருவர் மற்றவரிடம் போட்டி போட்டு நடப்பது, 4) ஒருவர் நீந்த கற்றுக் கொடுப்பது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அதாஉபின் அபிரபாஹ் (ரலி), நூல்: அஹ்மது)

“குற்றவாளிகளைக் குறித்து, சுவர்க்கச் சோலைகளில் இருப்பவர்கள் விசாரித்தும் கொள்வார்கள். ‘உங்களை நரகத்தில் நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்). ‘நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை (வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன் நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்’ என நரகவாசிகள் கூறுவார்கள்”. (திருக்குர்ஆன் 74:40-45).

வீணான கேளிக்கைகளில் மனிதர்கள் மூழ்கிக் கிடப்பது ஆபத்தானது. அது அவர்களை நரகத்தில் கொண்டு போய் தள்ளும். அவற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாப்போம்.

மவுலவி அ.செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
Tags:    

Similar News