ஆன்மிகம்

பொறுமையை கடைப்பிடிப்பது, கோபத்தை அடக்குவது

Published On 2019-06-18 04:31 GMT   |   Update On 2019-06-18 04:31 GMT
‘இறை நம்பிக்கையாளர்களே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் (என்னிடம்) உதவி தேடுங்கள். இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 2:153)
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான பொறுமையை கடைப்பிடிப்பது மற்றும் கோபத்தை அடக்குவது குறித்த தகவல்களை காண்போம்.

பொறுமை என்பது இறைகுணம். இறைவனிடமிருந்து வரும் ஒரு அருள் குணம். இதற்கு எதிர்மறையான குணங்கள் என்று வரும்போது அவசரம், ஆத்திரம், உணர்ச்சிவசப்படுதல், கோபம் போன்றவை அடங்கும்.

எங்கும், எதிலும், எப்போதும், பொறுமை அவசியம். குறிப்பாக, இறை நம்பிக்கையாளர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். இதனால்தான் இறைவன் தன்னிடம் உதவி கோரும்போது ‘முதலில் பொறுமையைக் கொண்டும், பிறகு தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்’ என்று வற்புறுத்துகிறான்.

‘இறை நம்பிக்கையாளர்களே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் (என்னிடம்) உதவி தேடுங்கள். இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 2:153)

பொறுமை இருந்தால்தான் முழுமையான முறையில் நேரம் தவறாமல் தொழ முடியும்; கடுமையான கோடை காலங்களில் கடமையான நோன்புகளை நோற்கமுடியும். நாம் நேசிக்கும் செல்வத்தை நம்மிடம் யாசிக்கும் ஒருவருக்கு ஜகாத், ஸதகா மூலம் வழங்கமுடியும்; பிரியமானவர்களிடமிருந்து பிரிந்து சென்று ஹஜ் செய்யமுடியும்.

இப்படிப்பட்ட பொறுமை பலவிதமான சந்தர்ப்பங்களில் தேவைப்படுகிறது. விலக்கப்பட்டதை விடுவதற்கு, நஷ்டம், தோல்வியை சந்திக்கும் போது, விபத்து, ஆபத்து, நோய், சோதனை, வேதனை ஆகியவை தொடரும் போதும் பொறுமை அவசியம். இதுபோன்ற தருணங்களில் பொறுமையை கடைப்பிடிக்கும் போது இக்கட்டான நிலையை மிக எளிதில் கடந்து விட முடிகிறது. எதையும் தாங்கும் இதயம் மனவலிமையில் மட்டுமல்ல. பொறுமையிலும் அடங்கியுள்ளது.

‘பொறுமை ஒரு அருட்கொடை. யார் பொறுமையை மேற்கொள்ள முயல்கிறாரோ அவரை இறைவன் பொறுமையாளராக ஆக்குவான். மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ (ரலி), புகாரி)

‘ஓர் இறை நம்பிக்கையாளரின் நிலையானது இளம்பயிர் போன்றதாகும். காற்றடிக்கும் திசையில் அதன் இலை சாயும். காற்று நின்றுவிட்டால் நேராக நிற்கும். இவ்வாறுதான் இறை நம்பிக்கையாளரும் சோதனைகளின் போது அலைக்கழிக்கப்படுகிறார். எனினும், அவர் பொறுமை காப்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரலி), புகாரி)

பொறுமை என்பது துன்பம், துயரம் நடக்கும் சமயத்தில் முதன்முதலில் கடைப்பிடிப்பதாகும். பொறுமையை இழந்து, அழுது புலம்பி, ஆடி அடங்கி, ஓடி ஒடுங்கி, தெம்பு குறைந்த பிறகு, மூச்சுவிட சக்தி இல்லாத போது இப்போது நான் பொறுமை காக்கிறேன் என்று கூறுவது போலியான பொறுமையாகும்.

‘பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைக்கொள்வதேயாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)

வாழ்க்கையில் சோதனைகளைச் சந்திக்கும்போது பதற்றப்படாமலும், இறைவனை நிந்திக்காமலும் மனஉறுதியுடன் நிதானம் தவறாமல் பிரச்சினைகளை எதிர்கொள்வதே பொறுமை எனப்படும். நபி (ஸல்) அவர்களுக்கு பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு திருக்குர்ஆனில் இருபதுக்கும் அதிகமான இடங்களில் இறைவன் கட்டளை பிறப்பித்துள்ளான்.

‘நீங்கள் பொறுமையை மேற்கொள்வதே உங்களுக்குச் சிறந்ததாகும்’. (திருக்குர்ஆன் 4:25)

நபியவர்கள் தமது வாழ்க்கையில் பலவிதமான சோதனைகளையும், துயரங்களையும் சந்தித்த போதெல்லாம் அழகிய முறையில் பொறுமையைத் தாமும் கடைப்பிடித்து, தமது தோழர்களையும் கடைப்பிடிக்கச் செய்தார்கள்.

‘ஓர் உண்மையான இறை நம்பிக்கையாளரின் நிலை ஆச்சரியம் நிறைந்ததாகும். இன்பமும், துன்பமும் அவருக்கு நன்மையாகவே முடிகின்றன. இன்பத்தைக் கண்டால் அவர் நன்றி செலுத்துகிறார்; துன்பத்தைக் காணும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: சுஹைப் (ரலி), முஸ்லிம்)

கோபம் வரும் போது பொறுமை தேவை

துன்பங்கள், சோதனைகள் வரும் காலகட்டத்தில் கடைப்பிடிக்கப்படும் பொறுமையை விட கோபம் வரும்போது கடைப்பிடிக்கப்படும் பொறுமையே சிறந்த செயல்.

கோபம் வரும் போது நிதானம், மென்மை, பொறுமை அவசியம். நிதானம் இழந்த கோபத்தால் சமூக நல்லிணக்கம் சீர் கெடுகிறது; குடும்ப உறவு சீர் குலைகிறது; நட்பு வட்டாரத்தில் விரிசல் ஏற்படுகிறது. கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக எதிர்மறையான, மோசமான விளைவுகளை உண்டாக்கி விடுகிறது.

“ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘எனக்கு அறிவுரை கூறுங்கள்’ என்றார்.

‘கோபத்தை கைவிடு’ என நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள். அவர் பலமுறை கேட்ட போதும் ‘கோபத்தை கைவிடு’ என்றே நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

கோபம் வரும் போது அதை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரே உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆவார். கோபத்தை அடக்கி வைப்பதுதான் உண்மையான இறை நம்பிக்கை ஆகும்.

‘(உண்மையான) இறை நம்பிக்கையாளர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரை இறைவன் நேசிக்கிறான்’. (திருக்குர்ஆன் 3:134)

“கோபம் வரும் போது அதை வெளிப் படுத்த சக்தி இருந்தும் எவர் அதை மென்று விழுங்குகிறாரோ, அவரை இறைவன் மறுமையில் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அழைத்து ‘சொர்க்கக் கன்னிகளில் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யும்படி அனுமதி வழங்குவான்’ என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: முஆத் (ரலி), அபூதாவூத்)

‘மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), புகாரி)

கோபம் வரும் போது அதைக் கட்டுப்படுத்த வேண்டும். வாய்க்கு வந்தபடி, கண்டவரை கண்டபடி வசை பாடுவதிலிருந்து மவுனம் காக்க வேண்டும். பிறரின் மீது ஏற்படும் கோபத்தை நாம் தடுத்து வைக்கும் போது நம் மீது இறைவனுக்கு ஏற்படும் கோபத்தையும் அவன் நிறுத்தி வைத்து விடுகின்றான்.

‘கற்றுக்கொடுங்கள்; நற்செய்தி கூறுங்கள்; சிரமத்தை தராதீர்கள்; உங்களில் ஒருவருக்கு கோபம் வந்தால், அவர் மவுனமாக இருந்து கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: பைஹகீ)

‘எவர் தமது கோபத்தை தடுத்துக் கொள்கிறாரோ, அவரை விட்டும் இறைவன் தமது வேதனையை மறுமையில் தடுத்துக்கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: பைஹகீ)

கோபம் சைத்தானின் குணம்

‘நிதானம் இறைவனிடமிருந்து வரும் குணம்; கோபம் சைத்தானிடமிருந்து வரும் குணம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: அபூயாலா)

‘நிச்சயமாக கோபம் சைத்தானின் குணம். சைத்தான் நெருப்பினால் படைக்கப்பட்டான். நீரைக் கொண்டுதான் நெருப்பை அணைக்க முடியும். எனவே உங்களில் ஒருவர் கோபப்பட்டால் ஒளு (உறுப்புக்களை நீரால் கழுவி சுத்தம்) செய்து கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அதிய்யா (ரலி), நூல்: அபூதாவூத்)

‘உங்களில் ஒருவருக்கு நின்ற நிலையில் கோபம் வந்தால், அமர்ந்து கொள்ளட்டும். அவரை விட்டும் கோபம் விலகிச் சென்றால் சரி. இல்லையெனில் அவர் படுத்துக் கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூதர் (ரலி), நூல்: அபூதாவூத்)

‘பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக’ (திருக்குர்ஆன் 39:10)

கோபம் வரும் போது சகித்துக் கொள்ள வேண்டும். பொறுமை நன்மையின் பொக்கிஷம். அதை இறைவன் சங்கையான அடியார்களுக்கு மட்டுமே வழங்குவான். பொறுமையாளர்களுக்கு இறைவனிடம் நிறைவான கூலி உண்டு.
Tags:    

Similar News