ஆன்மிகம்

இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை: இரக்கம் காட்டுவது

Published On 2019-06-06 04:02 GMT   |   Update On 2019-06-06 04:02 GMT
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இறை நம்பிக்கைகளில் ஒன்றான பிறரிடம் “இரக்கம் காட்டுவது” குறித்த தகவல்களை காண்போம்.
இரக்கம் காட்டுவது இறைநம்பிக்கையின் ஒரு நிலை. இறைநம்பிக்கையாளர்களின் இயற்கையான மனநிலை.

இரக்க சிந்தனை இறைவனிடம் நிறைவாக அமைந்திருப்பதை படைப்பினங்களின் மூலமாக நேரடியாக தெரிந்து கொள்ள முடிகிறது. தன்னிடமுள்ள இரக்க சிந்தனையை படைப்பினங்களிடம் இறக்கி வைத்தவனும் அவனே.

இறைவன் தன்னை பற்றி சுயஅறிமுகம் செய்யும் போது, தனது குணங்களில் இரக்க சிந்தனையைத்தான் முன்னிலைப்படுத்துவான். அந்தளவுக்கு அவனது இரக்க சிந்தனை விசாலமான இடத்தை பெறுகிறது. அது அனைத்தையும் அரவணைத்துக் கொள்கிறது.

“அனைத்து புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து, வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் இறைவனுக்கே. அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற கருணையாளன்”. (திருக்குர்ஆன் 1:1,2)

“நிச்சயமாக இறைவன் மனிதர்கள் மீது இரக்கமும், அன்பும் உள்ளவன்”. (திருக்குர்ஆன் 22:65)

‘இறைவன் கருணையை நூறு பாகமாக அமைத்துள்ளான். அவற்றில் தொண்ணூற்றி ஒன்பது பாகத்தை தன் வசம் வைத்துக் கொண்டு, ஒரு பாகத்தை மட்டும் பூமியில் இறக்கி வைத்தான். இந்த ஒரு பாகத்திலிருந்து தான் படைப்பினம் தங்களுக்கிடையில் இரக்கம் காட்டி வருகிறது. குதிரை தமது குட்டியை மிதித்து விடலாம் என அஞ்சி தமது கால் குளம்புகளை, அதனை விட்டும் உயர்த்துவதும் அந்த ஒரு பாகத்தில் கட்டுப்பட்டதே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

இறைவனின் இரக்க சிந்தனையை வெளிப்படுத்தவும், செயல்படுத்தவும் வேண்டிதான் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டார்கள்.

‘(நபியே) நாம் உம்மை உலகத்தாருக்கு அருட்கொடை யாகவே அனுப்பியுள்ளோம்’. (திருக்குர்ஆன் 21:107)

‘(இறைவிசுவாசிகளே) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கிறது. உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்’. (திருக்குர்ஆன் 9:128)

‘(முஹம்மதே) இறைவனது கருணையின் காரணமாகவே நீர் அவர்களிடம் நளினமாக நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும், கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டும் ஓடியிருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 3:159)

நபி (ஸல்) அவர்களிடம் இரக்க சிந்தனை இயற்கையாகவே இருந்து வந்தது. அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் வெளிப்பட்டே வந்தது. தன்னையே கொல்ல வந்தவரை காருண்ய நபி (ஸல்) அவர்கள் கருணையுடன் மன்னித்த வரலாறும் உண்டு.

‘இறைவனின் சிங்கம்’ என்று அழைக்கப்படக்கூடிய நபியவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களை நோக்கி வஹ்ஷி என்பவர் உஹதுப் போரில் ஒரு ஈட்டியால் அவரை நோக்கி எறிந்தார். அது அவரது தொப்புளுக்கு அருகில் குத்திக் குடலைக் கிழித்து, அவரது மறைவிட உறுப்பின் பக்கமாக வெளியாகியது. இது நபியவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட வஹ்ஷியை, நபி (ஸல்) அவர்கள் இரக்கப்பட்டு மன்னித்துவிட்டார்கள்.

அதே உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்களுடைய பல் உடைக்கப்பட்டது. மேலும், அவர்களின் முகமும் காயப்படுத்தப்பட்டு அதிலிருந்து ரத்தம் வழிந்தோடியது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நபித்தோழர்கள் ‘இறைத்தூதரே! அவர்களுக்கெதிராக நீங்கள் பிரார்த்தனை செய்வீராக’ என வேண்டியபோது ‘இறைவா, அவர்கள் அறியாத சமுதாயம். அவர்களை நீ மன்னித்து விடு’ என இரக்கத்துடன் இறைவனை வேண்டினார்கள்.

பத்ர் போரில் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்ட 70 கைதிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் நிலை இருந்தும், நபி (ஸல்) அவர்கள், அந்த கைதிகள் மீது இரக்கப்பட்டு, பிணைத் தொகை மட்டும் பெற்றுக் கொண்டு விடுதலை செய்தார்கள். இவை யாவும் நபிகளாரின் இரக்க சிந்தனையின் ஒரு சில எடுத்துக்காட்டுகள்.

இறைவனிடமிருக்கும் இரக்க சிந்தனையும், இறைத்தூதரிடம் வெளிப்பட்ட கருணையும் முஸ்லிம்களிடமும் பிரதிபலிக்க வேண்டும். இரக்க சிந்தனை வருவது இறை நம்பிக்கையின் ஈடில்லாத ஒரு நிலை. இன்றியமையாத ஒரு கலை.

நாம் பிறர் மீது, பிற உயிரினங்கள் மீது இரக்கம் காட்டினால், இறைவன் நம் மீது இரக்கம் காட்டுவான். வானவர்களின் கருணையும், நம் மீது படும்.

‘இரக்க சிந்தனையாளர்கள் மீது இறைவனும் இரக்கம் காட்டுகின்றான். நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள். வானில் உள்ளவர்கள் உங்கள் மீது இரக்கம் காட்டுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), திர்மிதி).

‘சிறியவர்களிடம் இரக்கம் காட்டாதவரும், பெரியவர்களிடம் மரியாதை செலுத்தாதவரும் நம்மைச் சார்ந்தோர் அல்ல, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), திர்மிதி).

சிறிய குழந்தைகளை வாரி அணைத்து முத்தம் கொடுப்பது இரக்க சிந்தனையின் பிரதிபலிப்பு. இதையே நபி (ஸல்) அவர்களும் செய்து வந்தார்கள்.

‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரன் ஆன) ஹஸன் (ரலி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகில் அமர்ந்திருந்த அக்ர பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார்கள். அவரை ஏறெடுத்துப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘இரக்கம் காட்டாதவர் இரக்கம் காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

இரக்கம் காட்டுவது இறை நம்பிக்கையாளரின் அடையாளம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், இரக்கம் காட்டுவதிலும், அன்பு செலுத்துவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால், அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுவதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது’. (அறிவிப்பாளர்: நுஅமான் பின் பஷீர் (ரலி), புகாரி).

உயிரினங்களின் மீது கருணை காட்டுவதும் நன்மையே

‘ஒருவர் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு தாகம் ஏற்பட்டது. வழியில் அவர் ஒரு கிணற்றைக் கண்டு, அதில் இறங்கி, நீர் குடித்தார். வெளியே வந்தபோது தன் எதிரே நாய் ஒன்று தாகத்தால் ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். தனக்கு ஏற்பட்டது போல் நாய்க்கும் தாகம் ஏற்பட்டுள்ளது போலும் என மனதில் நினைத்தார். பிறகு கிணற்றில் இறங்கி, தன் காலுறையைத் தண்ணீரால் நிரப்பி மேலே கொண்டு வந்து அந்த நாய்க்கு புகட்டினார். அவரின் இந்த இரக்க செயலை இறைவன் அங்கீகரித்து, அவருக்கு மன்னிப்பளித்தான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற மக்கள் ‘இறைத்தூதரே, கால்நடைகள் (மற்றுமுள்ள பிராணிகள்) விஷயத்திலுமா எங்களுக்குப் பிரதிபலன் உண்டு?’ என்று கேட்டார்கள்.

அதற்கு நபிகளார் ‘உயிருள்ள பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் அதற்குக் கருணை காட்டினால் உங்களுக்குப் பிரதிபலன் உண்டு’ என பதில் அளித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி).

கருணை காட்டிய பெண்ணுக்கு இறைமன்னிப்பு

‘(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது பனூஇஸ்ராயீல் சமுதாயத்தின் விலைமாதர்களில் ஒருத்தி அதைப் பார்த்தார். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி, அதில் தண்ணீரை நிரப்பி அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி).

கருணை என்பது விசாலமானது. அதன் வட்டத்தை குறுகிய எல்லைக்குள் சுருக்கிவிடக் கூடாது. கருணைக்கு ஜாதி, மதம், இனம், மொழி, நிறம், பண்பு, படிப்பு, பதவி எதுவுமே தடையாக நிற்கக்கூடாது. மனிதனையும் தாண்டி பிற உயிரினங்களின் மீதும் கருணை காட்ட வேண்டும்.

‘மக்களிடம் இரக்கம் காட்டாதவரிடம் இறைவனும் ஒரு போதும் இரக்கம் காட்டமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி), புகாரி).

எவரிடமும் இரக்கம் காட்டாதவன் மனிதன் அல்ல. அவன் நல்லவனும் அல்ல. அவன் ஒரு பாவி ஆவான். பாவி எவரிடமும் இரக்கம் காட்டுவதில்லை. அவன் உள்ளத்தில் ஒருபோதும் ஈரமும், இரக்கமும் இருக்காது. இரக்கம் இல்லாத உள்ளம் பாழடைந்த இல்லம். இரக்கம் உள்ள உள்ளம் இறைவன் வாழும் இல்லம். கல்லுக்குள் ஈரம் உண்டு. கடுமையான உள்ளம் உள்ளவனிடம் அது இல்லை. இதற்கு அவனே பொறுப்பு.

‘பாவியிடமிருந்தே தவிர இரக்கம் பிடுங்கப்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), அஹ்மது).

என்றும் கருணையுடன் வாழ்ந்தால் என்னாளும் பொன்னாளே.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
Tags:    

Similar News