ஆன்மிகம்

மகத்துவம் மிக்க இரவு- ‘லைலத்துல் கத்ர்’

Published On 2019-06-01 03:50 GMT   |   Update On 2019-06-01 03:50 GMT
இந்த புனித ரமலானில் நமது முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு வெண்மையான உள்ளத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக, ஆமீன்.
ரமலான் நோன்பின் மகத்துவமே மனிதன் பாவங்களில் இருந்தும், பாவச்செயல்களில் இருந்தும் விலகி நன்மைகளைப்பெற வேண்டும் என்பது தான். நோன்பு நோற்று இறைவனை வணங்கி தான- தர்மங்கள் செய்து பாவமன்னிப்பு பெற்று சொர்க்கத்தை பரிசாக பெற்றுக்கொள்ளவே ரமலான் வழிகாட்டுகிறது.

இந்த ரமலான் மாதத்திலே மகத்துவம் மிக்க ஓர் இரவு உள்ளது. லைலத்துல் கத்ர் இரவு என்று அழைக்கப்படும் அந்த இரவில் நாம் செய்யும் வணக்கங்களுக்கு, ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கங்களை விட சிறந்த நன்மைகளைப்பெற்றுத்தரும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ரமலானில் நின்று வழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் லைலத்துல் கத்ர்  இரவில் நின்று வழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும் (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லீம்)

புனிதமான அந்த இரவு என்பது குறித்து உபாதா இப்னு ஸாமித்(ரலி) இவ்வாறு அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் (ரமலானில் வரும்) லைலத்துல் கத்ர் (கண்ணியமிக்க இரவு) பற்றி (அது ரமலான் மாதத்தில் எந்த இரவு என்று) மக்களுக்கு தெரிவிப்பதற்காக (தம் வீட்டிலிருந்து) புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லீம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற) நபி(ஸல்) அவர்கள், லைலத்துல் கத்ர் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பதற்காக நான் (வீட்டிலிருந்து) புறப்பட்டேன். அப்போது இன்னாரும் இன்னாரும் தமக்குள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (என் நினைவிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாகவே இருக்கலாம். எனவே (ரமலான் மாதத்தின் இருபத்து) ஒன்பதாவது(இருபத்து) ஏழாவது. (இருபத்து) ஐந்தாவது இரவுகளில் அதனை தேடிக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (நூல்:புகாரி)

லைலத்துல் கத்ர் இரவில் சிறப்பு குறித்து திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறது:

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற  இரவில் இறக்கினோம்.

மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

கண்ணிமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.

அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.

சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும் (திருக்குர்ஆன் 97:1-5)

இந்த புனித ரமலானில் நமது முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு வெண்மையான உள்ளத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக, ஆமீன்.

வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
Tags:    

Similar News