ஆன்மிகம்

புண்ணியம் தரும் புனித ரமலான்: வெற்றிகள் தேடிவரும்

Published On 2019-05-22 08:27 GMT   |   Update On 2019-05-22 08:27 GMT
வெற்றிகளைத் தேடித்தரும் இந்த ரமலான் மாதத்தில் இறைவனிடம் சொர்க்கத்தையும், வாழ்வில் வெற்றியையும் கேட்டுப்பெறுவோம், ஆமீன்.
ரமலான் மாதம் வெற்றிகளை தேடித்தரும் மாதமாகும். இதற்கு உதாரணமாக பத்ர்யுத்த நிகழ்வை குறிப்பிடலாம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை, அவரது 40-வது வயதில் இறைத்தூதராக ஆக்கினான் இறைவன். மக்கா நகரில் 13 ஆண்டுகள் ஏகத்துவ பிரச்சாரத்தை நபிகளார் மேற்கொண்டார்கள். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இறைவனின் கட்டளையை நபிகளார் நிறைவேற்றினார்கள். பின்னர் மக்காவை விட்டு மதீனா செல்லும்படி அவர்களுக்கு இறைவன் கட்டளை பிறப்பித்தான். இதையடுத்து நபிகளார் தனது கூட்டத்தாருடன் மதீனா சென்றார்கள்.

மதீனா வந்து ஓராண்டுக்கு பிறகு நபிகளாருக்கு ஒரு செய்தி வந்தது. நபிகளாரை மிகக்கடுமையாக எதிர்த்த அபூ சுப்யான் தலைமையில் ஒரு வியாபாரக்கூட்டம் ஷாம்தேசத்தில் இருந்து மதீனா வழியாக மக்கா செல்வதாக தகவல் வந்தது.

தங்களுக்கு எதிராக உள்ள கூட்டத்தை அந்த வழியாக செல்லவிடாமல் தடுக்க நபிகளாரின் தோழர்கள் விரும்பினார்கள். நபிகளாரும் இதற்கு அனுமதி கொடுக்கவே 319 நபர்கள் கொண்ட ஒரு சிறிய கடை சென்றது. அவர்களிடம் 2 குதிரைகள், 70 கோ வேறு கழுதைகள் மற்றும் சிறிய ஆயுதங்கள் மட்டுமே இருந்தது.

இதற்கிடையில் இதுபற்றிய தகவல் அறிந்த அபூ சுப்யான் தனது கூட்டத்தில் இருந்த ஒருவரை குதிரையில் மக்காவுக்கு அனுப்பி பெரும்படையை வரவழைத்தார். குறைந்த எண்ணிக்கையில் இருந்த இறை நம்பிக்கையாளர்கள் கூட்டத்திற்கும், அதிக எண்ணிக்கையில் இருந்த இறை நிராகரிப்பாளர்கள் கூட்டத்திற்கும் இடையே பத்ர் என்ற இடத்தில் யுத்தம் நடந்தது.

யுத்தம் தொடங்கும் முன்பு நபிகளார் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். இறைவன் இதை ஏற்றுக்கொண்டான். அல்லாஸ் வானவர்களை அனுப்பி வைத்தான். ஆயிரக்கணக்கில் வந்த வானவர்கள் நபிகளாரின் படைகளுடன் சேர்ந்து போரிட்டனர். முடிவில் இறைநம்பிக்கையாளர்களின் கூட்டத்திற்கு வெற்றி கிடைத்தது.

இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.

‘பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளை விட ஆயுதத்திலும் தொலையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்கு பயந்து(வழிப்பட்டு) நடங்கள்’.

‘(நபியே அப்பொழுது) நீங்கள் நம்பிக்கையாளர்கள் நோக்கி “(வானத்திலிருந்து)இறங்கிய மூவாயிரம் மலக்குகளால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று கூறியதையும் ஞாபகமூட்டுகள்’. (திருக்குர்ஆன் 3:123,124)

வெற்றிகளைத் தேடித்தரும் இந்த ரமலான் மாதத்தில் இறைவனிடம் சொர்க்கத்தையும், வாழ்வில் வெற்றியையும் கேட்டுப்பெறுவோம், ஆமீன்.

வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
Tags:    

Similar News