ஆன்மிகம்

பாவ மன்னிப்பு தேடுவது எப்படி?

Published On 2019-05-19 05:58 GMT   |   Update On 2019-05-19 05:58 GMT
இந்த புனிதமான ரமலான் காலத்தில் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்றாடி பாவமன்னிப்பு பெற முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன், அதற்கு பரிகாரமாக சொர்க்கமும் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.
இறைவன், படைப்பினங்களை மூன்று நிலையில் படைத்துள்ளான். அவை: மலக்குகள் (வானவர்கள்), ஷைத்தான்கள், மனிதர்கள்.

குற்றமே செய்யாத, செய்யத்தெரியாத படைப்பு, வானவர்கள், இறைவன் அவர்களுக்கு என்ன கட்டளையிட்டானோ அதை அப்படியே ஏற்று செய்யக்கூடியவர்கள். இது குறித்து திருக்குர்ஆன் 66:7 இவ்வாறு குறிப்பிடுகிறது:‘ அல்லாஹ் ஏவிய எதிலும் மலக்குகள் மாறு செய்யமாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்ட படியே அவர்கள் செய்து வருவார்கள்’.

இறைவனுக்கு முற்றிலும் மாறுசெய்யக்கூடியவர்கள் ஷைத்தான்கள். இவர்களிடம் எந்ந நல்ல செயலையும் காணமுடியாது. இன்னும் சொல்வதென்றால், நல்லது செய்வோரை தடுக்கவும் செய்வார்கள். மறுமையில் இவர்களது புகலிடம் நரகம் தான்.

மனிதன் நல்லதும் செய்வான், தீமையும் செய்வான். நற்காரிங்கள் மட்டும் செய்யும் மனிதன், இறைவனின் முதல் படைப்பான வானவர்களை விட உயர்ந்த நிலையை பெறுவான். தீமையான செயல்களை செய்பவன் ஷைத்தானை விட கீழ்நிலைக்கு தள்ளப்பட்டு நரக நெருப்பில் கருகுவான்.

இதுபற்றி இறைவன் கூறும் போது, ‘நாம் இறை அச்சத்துடன் வாழ்ந்தவர்களை பாதுகாத்து கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) நரகத்தில் தள்ளிவிடுவோம்’ என்று எச்சரிக்கை செய்கிறான். (திருக்குர்ஆன் 19:72)

மேலும் பாவங்கள் செய்தவர்கள் அதற்கு மன்னிப்பு கேட்டால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் திருமறை இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘ ஒருவர் மானக்கேடான செயலைச்செய்து விட்டால் அல்லது(ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்டால், உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புகோருவார்கள். (ஏனெனில் ) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? மேலும் தாம் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக இருக்க மாட்டார்கள்’.

‘இத்தகையோரின் கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து கிடைக்கின்ற மன்னிப்பும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் கவனங்களுமாகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள்’. (திருக்குர்ஆன் 3:135,136).

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, ‘ ஆதம் உடைய மக்கள் அனைவரும் பாவம் செய்யக்கூடியவர்கள் தாம். ஆனால் அவர்களில் சிறந்தவர் யாரென்றால், எவர் தம் பாவத்தை உணர்ந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடுகிறாரோ அவர் தான்’ என்று கூறியுள்ளார்கள்.

இந்த புனிதமான ரமலான் காலத்தில் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்றாடி பாவமன்னிப்பு பெற முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன், அதற்கு பரிகாரமாக சொர்க்கமும் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.

வடகரை. ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
Tags:    

Similar News