ஆன்மிகம்

ரமலான் நோன்பு: நற்செயல்களை அதிகப்படுத்துவோம்

Published On 2019-05-07 05:58 GMT   |   Update On 2019-05-07 05:58 GMT
புனிதம் நிறைந்த இந்த ரமலான் மாதத்தில் நற்செயல்களை அதிகமாக செய்வதன் மூலம் நாம் பாவமன்னிப்பு பெற்று இறைவனின் அருளால் சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்களாக ஆக முடியும்.
புனிதம் நிறைந்த இந்த ரமலான் மாதத்தில் நற்செயல்களை அதிகமாக செய்வதன் மூலம் நாம் பாவமன்னிப்பு பெற்று இறைவனின் அருளால் சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்களாக ஆக முடியும்.

குறிப்பாக 4 நற்செயல்கள் நம்மை நன்மையின் பக்கம் அழைத்து செல்லும். அவை:

இறைவன் ஒருவனே வணக்கத்திற்குரியவன், அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்ற முதலாவது கலிமாவை அதிகமாக சொல்லுங்கள்.

வாழ்நாளில் செய்த பாவமான காரியங்களை நினைத்து நினைத்து இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடுங்கள்.

மறுமையில் சொர்க்கத்தை தருமாறு இறைவனிடம் கேளுங்கள்.

நரகத்தை விட்டும் பாதுகாப்பு தருமாறு இறைவனிடம் கேளுங்கள்.

இறைவனிடம் பாவமன்னிப்பு பெறுவது லேசான காரியம் இல்லை. அதற்கு தகுதியான நிலையை மனிதன் தன்னிடம் ஏற்படுத்திக்கொள்வது அவசியம். இதற்கும் இறைவனின் அருட்பார்வையும் வேண்டும். இவைகள் அனைத்தையும் இந்த புனிதமிகு ரமலானில் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் அருட்பார்வை ஒருவருக்கு தரும் நன்மைகள் என்ன தெரியுமா?

இறைவனின் அருட்பார்வை கிடைத்தவன் செய்கின்ற வணக்க வழிபாடுகள் மற்றும் நன்மையான காரியங்கள் முழுமை அடையும்.

உலக வாழ்வு, உணவு, உறைவிடம், மக்கள் செல்வம், சுகபோகங்கள் போன்ற எதுவும், இறைசிந்தனையில் இருந்து அவனை மாறச்செய்யாது.

எந்த பாவமான காரியமாக இருந்தாலும் அதில் இருந்து விலகி இருக்கும் வகையில் இறைவனின் பாதுகாப்பு அவனுக்கு கிடைக்கும்.

இறைவனின் அருட்பார்வையால் கிடைக்கும் இந்த சிறப்புகள் இறுதி நபியாகிய முஹம்மது(ஸல்) அவர்களின் கூட்டத்தினராகிய நமக்கு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் உள்ளவர்களுக்கு இது வழங்கப்படவில்லை.

ரமலான் மாதத்தில் நோன்பு வைத்திருக்கின்ற மனிதனுக்கு, வானவர்கள் (ஒளியின் மூலம் இறைவனால் படைப்பப்பட்ட குற்றமற்ற படைப்பினர்) பாவமன்னிப்பு கேட்பார்கள். இதுவும் நமக்கு கிடைத்த ஒரு பெரும் சிறப்பாகும்.

எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமலான் மாதத்தை அடைந்த பின்னரும் எவன் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கவில்லையோ, அவன் ஈடேற்றம் பெறவே மாட்டான்.

இத்தனை சிறப்பு வாய்ந்த மாதம் நம்மிடம் வந்துள்ளது. நாம் அதன் வருகையை மகிழ்வானதாக அமைத்து இந்த நோன்பு காலத்தில் நற்செயல்களை அதிகப்படுத்துவோம். ஆமீன்.

வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை
Tags:    

Similar News